Technology

குரல் மூலம் இயக்கக்கூடிய அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் இந்தியாவில் அறிமுகம்

புதுடெல்லி:
அமேசான் நிறுவனம் தனது மீடியா ஸ்டிரீமிங் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் என பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனம் கொண்டு வாடிக்கையாளர்கள் பிரைம் வீடியோக்களை தொலைக்காட்சி திரைகளில் பார்த்து ரசிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் ஃபயர் ஸ்டிக் சாதனத்துடன் குரல் மூலம் இயக்கக் கூடிய ரிமோட் வழங்கப்படுகிறது. இதை கொண்டு அமேசான் வீடியோக்களை குரல் மூலம் தேட முடியும். இந்தியாவில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவாட்கோர் பிராசஸர் மற்றும் அதிவேக வை-பை கொண்டுள்ள அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் கொண்டு ஆயிரக் கணக்கான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிப்பதோடு செயலி மற்றும் கேம்களையும் விளையாட முடியும். அமேசான் தளத்தில் இந்த சாதனம் ரூ.3,999 என்ற விலையில் கிடைக்கிறது.
அமேசான் ஃபயர் ஸ்டிக் எப்படி பயன்படுத்த வேண்டும்?
எச்டி தரம் கொண்ட அனைத்து தொலைக்காட்சிகளிலும் பொருத்தி பயன்படுத்த துவங்கலாம். தொலைக்காட்சியின் எச்டிஎம்ஐ போர்ட்டில் பொருத்தி வை-பை மூலம் ஃபயர் ஸ்டிக் சாதனத்தை பயன்படுத்தலாம்.
அமேசான் ஃபயர் ஸ்டிக் சாதனத்தை டிவியில் பொருத்தி, அதனுடன் சார்ஜரை பொருத்த வேண்டும். இனி வை-பை மூலம் இணைத்து உங்களுக்கு வேண்டிய நிகழ்ச்சிகளை இண்டர்நெட் மூலம் ஸ்டிரீம் செய்து பார்க்கலாம்.
எவ்வித இடையூறும் இன்றி சீராக பயன்படுத்த உங்களிடம் குறைந்தபட்சம் 4mbps என்ற வேகம் கொண்ட இண்டர்நெட் இணைப்பு அவசியம் ஆகும். அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக் சாதனத்துடன் நெட்ஃபிளிக்ஸ், யூடியூப், கானா உள்ளிட்ட இந்திய நேயர்களுக்கான தரவுகளை வழங்கும் சேவைகளை இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.