ஆன்மிகம்

புனித வெள்ளி: இயேசுவின் சிலுவை மரணம் ஒரு மனித உரிமை மீறல்

 இறைமகன் இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுகூரும் புனித வெள்ளியை, கிறிஸ்தவர்கள் நாளை (14-ந்தேதி) கடைபிடிக்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இயேசுவின் சிலுவை மரணத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை இங்கு காண்போம்.

ரோமானிய பேரரசின் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பாலஸ்தீன் நாட்டில் பிறந்து வளர்ந்தவர் இயேசு கிறிஸ்து. கி.பி.27ஆம் ஆண்டு தமது போதனை பணியைத் தொடங்கிய அவர், தாம் வாழ்ந்த யூத சமூகத்தில் நிலவிய அநீதிகளை சாடினார். கடவுளின் ஆட்சி பற்றி போதித்த அவர், ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க குரல் கொடுத்தார். பாவிகளாக கருதப்பட்ட நோயாளிகளுக்கு சுகம் அளித்து புதுவாழ்வு கொடுத்தார். இதன் காரணமாக இயேசுவை பின்தொடர்ந்த மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

மனித மாண்பை குலைக்கும் சட்ட ஒடுக்குமுறைகளை இயேசு வன்மையாக கண்டித்தார். கடவுளின் பெயரால் மக்களை அடக்கி ஆண்ட யூத சமயத் தலைவர் களுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார். மக்கள் நடுவே மதிப்பு மிகுந்தவர்களாக தங்களைக் காட்டிக்கொண்ட அவர்களின் வெளிவேடத்தை மக்கள் மத்தியில் அம் பலப்படுத்தினார். நல்லவர்களாக நடிக்கும் சமயத் தலைவர்களை மக்கள் பின்பற்ற வேண்டாம் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். இதை விரும்பாத சமயத் தலைவர்கள் அவரை கொலை செய்ய வழி தேடினர்.

பாலஸ்தீன் நாடு ரோமானிய பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்நாட்டு மக்கள் அனைவரையும் யூத சமய குருக்களே நேரடியாக ஆட்சி செய்தனர். யூதர் களின் கோவில் இருந்த எருசலேம் உள்ளடங்கிய யூதேயா பகுதியை சமய குருக்கள் அடங்கிய தலைமைச் சங்கம் என்ற அமைப்பே ஆட்சி செய்தது. அங்கு வரி வசூல் செய்வது மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு மட்டுமே ஆளுநர் பிலாத்துவிடம் இருந்தது.

யூதர்களின் பாஸ்கா விழாவுக்கு முந் திய வியாழக்கிழமை இரவில் இயேசு கைது செய்யப்பட்டார். பாஸ்கா விழா காலத்திலும் இரவு நேரத்திலும் ஒருவரை கைது செய்யக்கூடாது என்பது யூத சட்டம். மக்களுக்கு தெரியாமல் இரவு நேரத்தில் இயேசுவை கைது செய்வதற்காக, அவரது சீடரான யூதாசுக்கு பணம் கொடுத்து காட்டிக் கொடுக்க செய்த யூத சமயத் தலைவர்களின் செயல் ஒரு மனித உரிமை மீறல். மேலும், இயேசுவிடம் யூத தலைமைச் சங்கம் இரவு நேரத்தில் விசாரணை நடத்தியதும் சட்டத்துக்கு எதிரான மனித உரிமை மீறலே.

இத்தனை மனித உரிமை மீறல்களை அரங்கேற்றிய தலைமைச் சங்கம், இயேசுவை கொலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டு அவர் மீது குற்றம் சுமத்த ஆட்களை தேடியதாக காண்கிறோம். இயேசு தம்மை இறைமகன் என்று கூறியதைக் கொண்டு, அவரை ரோமானியருக்கு எதிரான கலகக்காரராக சித்தரித்தனர் யூத சமயத் தலைவர்கள். சட்டம் ஒழுங்கு ரோமானியர் கையில் இருந்ததால், இயேசுவைக் கொலை செய்வதற்கான அனுமதியைப் பெற ஆளுநர் பிலாத்துவிடம் அழைத்துச் சென்றனர்.

இயேசு மீது சுமத்தப்பட்ட குற்றம் பிலாத்துவுக்கு பெரிதாக தெரியவில்லை என்பதால், அவரை விடுவிக்க வழி தேடியதாக பைபிள் கூறுகிறது. அதே நேரத்தில், இயேசுவை விடுதலை செய்தால் சீசருக்கு நண்பராக இருக்க முடியாது என்ற மிரட்டல் மூலம் பிலாத்துவை அடிபணியச் செய்தனர் யூத சமயத் தலைவர்கள். அவர்களது ராஜதந்திரத்தால், குற்றமற்ற இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்வதற்கான தீர்ப்பை பெற்றனர். இது மிகப் பெரிய மனித உரிமை மீறல்.
சாட்டையால் அடிக்கப்பட்டு, முள்முடி சூட்டப்பட்டு, அவமானச் சின்னமாய் சிலுவை சுமந்து கொண்டு கொல்கொதா குன்றுக்கு சென்றார் இயேசு.

மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், கொலைக்களம் நோக்கி குறுக்கு கம்பத்தை சுமந்து செல்வார்கள். நேர் கம்பம் கொலைக்களத்தில் முன்னதாகவே நடப்பட்டிருக்கும். இயேசுவுக்கு திடீரென மரண தண்டனை விதிக்கப்பட்டதால், அவர் நூற்றி நாற்பது கிலோ எடையுள்ள முழு சிலுவையையும் கொலைக்களத்திற்கு சுமந்து சென்றதாக அறிகிறோம். முன்னதாக சாட்டையடியால் உடல் முழுவதும் ரத்த காயங்களுடன் இருந்த இயேசுவுக்கு, இந்த சுமை கொடிய வேதனை கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மரண தண்டனை பெற்ற குற்றவாளிகள் ஆடையின்றி நிர்வாணமாகவே சிலுவையில் அறையப்பட்டதாக வரலாறு கூறுகிறது. செல்வாக்குள்ள ஒரு சிலருக்கு மட்டும் இடைத்துணி கட்டிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டதாக அறிகிறோம். அவர்களது உடல், கயிறுகள் மற்றும் ஆணிகளால் சிலுவையோடு பிணைக்கப்பட்டன. குறுக்கு கம்பத்தில் கைகளின் மணிக்கட்டு பகுதிகளும், நேர் கம்பத்தில் கணுக்காலுக்கு சற்று மேல் பகுதிகளும் ஆணிகளால் பிணைக்கப்பட்டன. சில நேரங்களில் நேர் கம்பத்தில் தாங்குகட்டை பொருத்தி, இரண்டு கால்களின் பாதங்களையும் ஒரே ஆணியால் சிலுவையில் அறைந்தனர்.
இயேசு கிறிஸ்து இத்தகைய முறையிலேயே ஆணிகளைக் கொண்டு சிலுவையில் அறையப்பட்டதாக அறிகிறோம்.

அவர் குற்றவாளி என்று காட்டுவதற்காக கள்வர்கள் நடுவில் அவரை சிலுவையில் அறைந்து தொங்கவிட்டது மனித உரிமை மீறலின் உச்சக்கட்டம்.
முழு உடலின் எடையையும் சிலுவையில் அறையப்பட்டவர் களின் கைகளே தாங்கும் நிலை உருவாவதால், மூச்சுத்திணறலும், சோர்வும், நீரிழப்பும் ஏற்படுவதுடன் ரத்த ஓட்டமும் பாதிக்கப்படும். நிர்வாண நிலையில், நெஞ்சடைத்து, தாகம் ஏற்பட்டு, சாவுடன் போராடுவதே சிலுவை தண்டனையின் உச்சகட்ட வேதனை.

அனைத்தையும் அமைதியாக சகித்துக் கொண்ட இறைமகன் இயேசு, “தந்தையே இவர்களை மன்னியும்”என்று கடவுளிடம் வேண்டியதாக காண்கிறோம்.
இயேசுவுக்கு ரத்த இழப்பும் ஏற்பட்டதால், அவர் சில மணி நேரத்திற்குள் உயிரிழந்ததாக அறிகிறோம். அவரது மரணத்திற்கு பிறகும், அவரது விலாவை ஈட்டியால் குத்தி துளைத்தது மனித உரிமை மீறலே.

உண்மைக்காகவும், உரிமைக்காகவும் போராடும் ஒவ் வொருவரையும் அடக்கி ஒடுக்க இந்த சமூகம் முயற்சி செய்வதை காண் கிறோம். பிறரிடம் உள்ள உண்மையை ஏற்றுக்கொள்ளவும், பிறருக்கான உரிமையை மதிக்கவும் தேவையான நல்ல மனதை மாந்தர் அனைவருக்கும் ஆண்டவர் இயேசு இந்த நன்னாளில் வழங்குவாராக!

சிலுவை மரணத்தின் கொடூரம் :

குற்றவாளிகளை சிலுவையில் அறைந்து கொலை செய்யும் தண்டனை முறை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு பெர்சியா நாட்டினரால் அறிமுகம் செய்யப் பட்டது. கி.மு. முதல் நூற்றாண்டு முதல் பிற நாட்டு குற்றவாளிகளை தண்டிக்க ரோமானியர்கள் இந்த தண்டனை முறையை பயன்படுத்தினர். நேராக நடப் பட்ட கம்பத்தில் குற்றவாளியை ஆணிகள் அல்லது கயிறுகளால் பிணைத்து தொங்கவிட்டு, மூச்சு திணறடித்து கொல்வதே இந்த தண்டனை முறை.

தொடக்கத்தில் தவறு செய்யும் அடிமைகளை கொலை செய்யவே இந்த தண்டனை பயன்படுத்தப்பட்டது. பின்னர் கொலை, கொள்ளையில் ஈடுபட் டவர்களும், தேச துரோகிகளும் சிலுவையில் அறைந்து கொலை செய்யப்பட்டனர். இயேசுவும் தேச துரோகி என்ற குற்றச்சாட்டின் பெயரிலேயே சிலுவையில் அறையப்பட்டார். குற்றவாளிகளை எளிதாக தொங்கவிட வசதியாக நேர் கம்பத்துடன், குறுக்கு கம்பம் ஒன்றை இணைக்கும் வழக்கம் பிற்காலத்தில் உருவானதாக அறிகிறோம்.

சிலுவையில் அறையப்பட்டு இறந்தவர்களின் உடல்கள், பொதுவாக அதிலேயே தொங்கிக் கொண்டிருக்கும். அவற்றை பறவைகள், எலிகள் போன் றவை கடித்து தின்னும். சிலுவை மரணம் வழங்கப்படும் இடம் எலும்புக்கூடுகளும் மண்டையோடுகளும் நிறைந்த தாகவே காட்சி அளிக்கும். ஒரு சிலரது உறவினர்கள் மட்டுமே அரசு அனுமதியுடன் உடல்களை பெற்று அடக்கம் செய்வார்கள். இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் யூதர்களின் பாஸ்கா விழாவாக இருந்ததால், அவர் இறந்த உடனே அவரது உடலை அடக்கம் செய்ய அனுமதி கிடைத்தது.