பண்டிகைகள்

ரக்ஷாபந்தன்

சகோதர சகோதரிக்கிடையேயான உறவு பந்தத்தை மென்மேலும் இணைக்கவும், பலப்படுத்தும் பண்டிகையாகக் கொண்டாடப்படுவது தான் ‘ரக்ஷாபந்தன்’. இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் அதாவது, ஷ்ரவன் மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை, ‘ராக்கி’ என்றும் அழைப்பர். இத்திருநாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனிதமான மற்றும் மங்களகரமான கயிறைக் கட்டுவர். ரக்ஷா பந்தன் என்றால் ‘பாதுகாப்பு பிணைப்பு’ என்றும், ‘பாதுகாப்பு பந்தம்’ என்றும் பொருள். இந்த விழா, தீய விஷயங்கள் மற்றும் காரியங்களிடமிருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுளுக்காக சகோதரிகள் பிரார்த்தனை செய்வதற்காகவும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பெண்கள் புதிய ஆடைகள் அணிந்து, தமது சகோதரர்களின் ‘மணிக்கட்டில் ராக்கி கட்டும் வரை எதுவும் சாப்பிடாமல் இருப்பர். மேலும், அவர்கள், சகோதரர்கள் ‘நெற்றியில் சிகப்பு குங்குமம் வைத்து,  அவர்களுக்கு இனிப்புகள் வழங்கிய பின்பு, மணிக்கட்டில் ராக்கி என்னும் புனிதக் கயிற்றைக் கட்டுவர். இதற்கு பதிலாக, சகோதரர்களும், தங்களது பாசத்தை தெரிவிக்கும் விதமாக அவர்களுக்குப் பல பரிசுப் பொருட்களையும், ஆசிர்வாதங்களையும் வழங்குவர். அண்ணன் தங்கை உறவை மேலும் பலப்படுத்தி, இனிக்க வைக்கும் பண்டிகைத் திருவிழாவான ரக்ஷாபந்தன் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

ராக்கி வரலாறு

ரக்ஷா பந்தன் பண்டிகைக்குத் தொடர்பாகப் பல கதைகள் உள்ளன. அதில் ஒரு கதை பெருங்காவியமான மகாபாரதத்தில் இருந்து எடுக்கப்பட்டது. பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணன் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தால் வடிந்த இரத்தத்தைத் தடுப்பதற்காக, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, பகவான் கிருஷ்ணனின் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ண பரமாத்மா அவர்களின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு உறுதி பூண்டார். மேலும், அவர் எல்லா தீயசக்திகளிடமிருந்தோ, ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலோ, அவரைப் பாதுகாப்பதாகவும் அவருக்கு உறுதியளித்தார். அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்றதால், திரிதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் ‘சிர் ஹரன்’ நேரத்தில் திரௌபதியின் மானத்தைக் காப்பாற்றினார், பகவான் கிருஷ்ணன்.

ரக்ஷாபந்தன் விழா தொடர்பான மற்றொரு கதை, சித்தூர் ராணி கர்ணாவதி மற்றும் மொகலாய பேரரசர் ஹுமாயுனுடையது. விதவையான சித்தூர் ராணி கர்ணாவதி, தனது அரசாட்சியைப் பேரரசர் பகதூர் ஷா கைப்பற்ற போகிறார் என்பதை உணர்ந்த போது, அவர் பேரரசர் ஹுமாயுன் அவர்களுக்கு ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறை அனுப்பினார். இதனால், பாச உணர்ச்சிக் கொண்ட ஹுமாயுன், ராணியையும், அவரது ராஜ்ஜியத்தைக் காப்பாற்ற முற்பட்டார். ஆனால், அதற்குள் ராணியை வென்று வெற்றிக்கொடி நாட்டினார், பேரரசர் பகதூர் ஷா.

மற்றொரு புராணத்தின் படி, பகவான் விஷ்ணுவின் தீவிர பக்தனான அரக்கன் பாலியின் தவத்திற்கு செவி சாய்த்த விஷ்ணுவிடம், தனது சொந்த உறைவிடமான வைகுண்டத்தை விட்டுவிட்டு, அவரது ராஜ்ஜியத்தைப் பாதுகாக்கும்படி வேண்டினார். பக்தர்கள் எது கேட்டாலும், கொடுக்கும் பகவான் இதற்கு ஒப்புக்கொண்டார். பகவான் விஷ்ணு வரும் வரை தனது இருப்பிடத்திற்குத் திரும்ப விரும்பாத கலைமகள் லக்ஷ்மி தேவி, ஒரு சாதாரணப் பெண் வேடம் பூண்டு, தனது கணவர் வரும் வரை அடைக்கலம் தேடி அலைந்தார். ஷ்ரவன் பூர்ணிமா கொண்டாட்டங்களின் போது, கலைமகள் லட்சுமி, ராஜா பாலியின் கையில் ‘ராக்கி’ என்னும் புனிதக்கயிறைக் கட்டினார். அப்போது ராஜா, அவரது அடையாளத்தையும், புனிதக் கயிறைக் கட்டியதற்கான நோக்கத்தைக் கேட்ட போது, அவர் தனது உண்மையான ரூபத்தை வெளிப்படுத்தினார். இந்நிகழ்வு ராஜாவின் மனதைத் தொட்டதால், இறைவனுக்காகவும், அவர் மீது மிகவும் ஈடுபாடு கொண்ட அன்பான மனைவி கலைமகள் லக்ஷ்மிக்காகவும் தனது அனைத்து செல்வங்களையும் தியாகம் செய்தார். பகவானிடம் ராஜா பாலி கொண்ட அதீதப் பற்றை அனைவரும் அறியும் விதமாக, இவ்விழா ‘பாலிவா’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிகழ்வுக்குப் பின்னரே, ஷ்ரவன் பூர்ணிமா தினத்தன்று, சகோதரர்கள் சகோதரிகளை அழைத்து, ‘ராக்கி’ கட்டும் ஒரு பாரம்பரியம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

ரக்ஷாபந்தன் சிறப்பு

ரக்ஷா பந்தன் திருநாளில், பெண்களும், திருமணமான மகளிரும் தங்கள் கைகளில் மெஹந்தி வைத்துக் கொள்வார்கள். சகோதர, சகோதரிகள் இருவரும் பாரம்பரிய ஆடைகள் அணிவார்கள். ரக்ஷா பந்தன் என்றழைக்கப்டும் ‘ராக்கி’ திருவிழா, திருமணமானப் பெண்களின் பிறந்த வீட்டு சொந்தத்தை மென்மேலும் பலப்படுத்தவும், இணைக்கும் பாலமாக இருக்கிறது. ஒரு உலகளாவிய மனிதாபிமான வடிவம் எடுத்திருக்கும் இத்திருநாளில், உடன்பிறவாவிட்டாலும், சகோதர அன்பைத் வெளிப்படுத்தும் நோக்கமாக பெண்கள், பாதுகாப்பு வீரர்கள், சிறையிலிருக்கும் கைதிகள் மற்றும் கைவிடப்பட்ட சமூக தரப்பினருக்கும் அன்பு செலுத்தும் விதமாக அவர்களுக்கும் ‘ராக்கி’ கட்டுகின்றனர். மேலும், நாட்டின் பிரதமர் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க வேண்டுமென்பதைக் குறிக்கும் விதமாக, அவரது மணிக்கட்டிலும் அவர்கள் ‘ராக்கி’ கட்டுகின்றனர். குறிப்பாக, வடக்கு மற்றும் மேற்கிந்தியாவில், சகோதரிகளே இல்லாத ஆண்களை ‘காட் பிரதர்ஸ்’ (God Brothers) என்று குறிக்கும் விதமாக, அவர்களுக்குப் பல பெண்கள் ராக்கி கட்டுவார்கள். முதலில், பட்டு நூலில் வந்த ராக்கி, இப்போது ஒவ்வொரு ராக்கியும் ஒவ்வொரு விதமாக, அதாவது தங்கம், வெள்ளி மற்றும் சந்தனம் போன்ற நூலிலைகளால் செய்யப்பட்டு விற்பனையாகிறது. அது மட்டுமல்லாமல், சிறுவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன்களைக் கொண்டும் சிறிய குழந்தைகளுக்காகவும் ராக்கி விற்பனை செய்யப்படுகிறது.

ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்

ரக்ஷா பந்தன் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டாலும், முக்கியமாக வட இந்தியாவில் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து, தனகளது அன்பைப் பரிமாறிக் கொள்வர். இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஷ்ரவன் மாதத்திலும், ஆங்கில காலண்டர் படி ஆகஸ்ட் மாதத்திலும் வருகிறது. ரக்ஷா பந்தன் என்பது எல்லாவிதமான பாதுகாப்பிற்காகவும், அனைத்து தீயசக்திகளைத் தகர்ப்பதற்காகவும் கொண்டாடப்படும் பண்டிகை. இன்றைய நாட்களில், இந்தியக் கலாச்சாரத்தின் மிக முக்கிய பகுதியாகவே மாறிவிட்டது, இப்பண்டிகை. இத்திருநாள், குடும்பத்தைப் பாசப் பிணைப்பில் இணைக்கிறது. உறவின் பெருமை, மதிப்பு, மற்றும் உணர்வுகள் இத்திருவிழாவின் சடங்குகளோடு இணைக்கப்பட்டிருப்பதால், நல்வாழ்விற்குத் தேவையான நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற பாடத்தைப் பரப்பி வருகிறது, இப்பண்டிகை.