திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வேலை, கல்வி, வியாபாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக வருபவர்களின் எண்ணிக்கை லட்சத்தைத் தாண்டுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் மின்சார ரயில்களையே நம்பி இருக்கின்றனர். இதனால் சென்னை எழும்பூரிலிருந்தும், சென்ட்ரலிருந்தும், கடற்கரை ரயில் நிலையத்திலிருந்தும் மின்சார ரயில்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகின்றன.
ஒவ்வொரு மின்சார ரயில்களும் நிறைமாத கர்ப்பிணி போல நிரம்பி வழிந்து காட்சியளிக்கினறன. ‘படியில் பயணம் நொடியில் மரணம்’ என்றாலும் வேறுவழியின்றி அந்த ஆபத்தான பயணத்தை சிலர் மேற்கொள்கின்றனர். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரயில்கள் இயக்கப்படாததே இதற்கு காரணம் என்று குற்றம் சுமத்துகின்றனர் பொது மக்கள்.
இந்த பிரச்னை ஒருபுறம் இருந்தாலும் ரயில்களில் பயணிக்க டிக்கெட் பெற அலைமோதும் கூட்டத்துக்கு அளவே இல்லை. சென்னை சென்ட்ரலில் உள்ள முன்பதிவில்லாத டிக்கெட் கவுன்டர்களில் மக்கள் கால்கடுக்க காத்திருக்க வேண்டியதுள்ளது. இதற்குள் பல ரயில்களை தவறவிடும் சூழ்நிலை உள்ளது. இதே நிலை தான் சென்னை எழும்பூரிலும், கடற்கரை ரயில் நிலையத்திலும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று மாலை நடந்த சம்பவம் இது…
பிளாட்பாரத்தில் அரக்கோணம் செல்லும் ரயில் மாலை 6.05 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரயிலில் அரக்கோணம் செல்ல வேண்டிய மூதாட்டி டிக்கெட் எடுக்க கவுன்டரில் காத்திருந்தார். அப்போது மணி மாலை 5.30. டிக்கெட் எடுக்க நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். ஆனால் இரண்டு கவுன்டர்களில் மட்டும் டிக்கெட் விநியோகிக்கப்பட்டன. அதிலும் ஒரு டிக்கெட் கவுன்டரில் பெண் ஊழியர் ஒருவர் ஏதோ கடமைக்காக (மெதுவாக) பணியாற்றிக் கொண்டு இருந்தார். அந்த கவுன்டரில் நின்றவர்களின் கூட்டம் குறையவே இல்லை. அந்த கவுன்டர் வரிசையில்தான் அந்த மூதாட்டியும் காத்திருந்தார். 6 மணியை நெருங்கிய போதிலும் அவர் டிக்கெட் கவுன்டரை நெருங்க முடியவில்லை. இதனால் பக்கத்தில் உள்ள ஒரு டிக்கெட் கவுன்டரில் முதல் நபராக நின்றவரிடம் நிலைமையை எடுத்துக் கூறி டிக்கெட் வாங்கித் தரும்படி கேட்டார். அதற்கு அந்த நபரும் சம்மதித்து பணத்தை வாங்கிக் கொண்டு ஊழியரிடம் டிக்கெட் கேட்டார். அவரும் டிக்கெட் கொடுத்துவிட்டார். பின்னர் அந்த நபர் தனக்கு டிக்கெட் கேட்டார். ஆனால் ஊழியர், ‘ஒருத்தருக்கு ஒரு டிக்கெட்’ என்று கூறி டிக்கெட் எனக் கூறி, கொடுத்த டிக்கெட்டை வாங்கி கிழித்துப் போட்டு விட்டு, அந்த நபருக்கு டிக்கெட் வழங்கினார். ஆனால், அந்த மூதாட்டியோ டிக்கெட் கிடைக்காமல் தவித்தார்.
அறிவித்தப்படி அரக்கோணம் ரயில் சென்ட்ரலிருந்து புறப்பட்டு விட்டது. அரைமணி நேரம் காத்திருந்தும் டிக்கெட் வாங்காததால் அந்த மூதாட்டி அரக்கோணம் ரயிலில் பயணிக்கவில்லை. இதை வரிசையில் நின்று கொண்டு இருந்த சிலர், சம்பந்தப்பட்ட ரயில்வே ஊழியரிடம் கேட்டனர். அதற்கு ரயில்வே ஊழியர் அளித்த பதில், ‘பீக் அவர்ஸில் ஒருத்தருக்கு ஒரு டிக்கெட் கொடுக்க வேண்டும். இது எங்கள் ரூல்’ என்றார். இதைக் கேட்ட ஒருவர், அப்படியென்றால் இந்த பதிலை எழுதித்தாருங்கள் என்றார். என்னிடம் எதுவும் கேட்காதீர்கள். ஸ்டேஷன் மாஸ்டர், அல்லது மேலாளரிடம் போய் தகராறு செய்யுங்கள் என்று அந்த ஊழியர் கூலாக கூறினார்.
மூதாட்டி மீது பரிதாப்பட்ட பயணி ஒருவர், சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரியிடம் நடந்ததைச் சொல்லி விவரத்தை கேட்டார். அதற்கு அவர், அப்படி எந்த ரூலும் இல்லை என்று பதிலளித்தார். அப்படியென்றால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று பயணி கூறினார். அதற்கு என்னால் எதுவும் செய்ய முடியாது என்று அந்த அதிகாரி பதிலளித்தார்.
அப்படியென்றால் இதற்கு தீர்வு என்ன? என்று அதிகாரியிடம் பயணி கேட்டதற்கு ‘இது காலம் காலமாக நடந்துக் கொண்டு இருக்கிறது. எதுவும் செய்ய முடியாது. நீங்கள் என்னிடம் பேசிய நேரத்துக்கு க்யூவில் காத்திருந்தால் டிக்கெட் எடுத்து இருக்கலாம்’ என்று பயணிக்கு அறிவுரை கூறினார் அந்த அதிகாரி. ரயில்வே அதிகாரி மற்றும் ஊழியரின் அலட்சியப் போக்கால் அல்லல்பட்ட அந்த மூதாட்டி மீண்டும் வரிசையில் காத்திருந்து டிக்கெட் எடுத்து அடுத்த அரக்கோணம் ரயிலில் ஊருக்கு புறப்பட்டார்.
சென்ட்ரல், எழும்பூர் புறநகர் ரயில் நிலையங்களில் செயல்படும் டிக்கெட் கவுன்டர்களில் இது போன்ற காட்சிகளை தினந்தோறும் பார்க்கலாம். ஆனால் இதற்கு தீர்வு காண வேண்டிய அதிகாரிகளே பொறுப்பற்ற முறையில் செயல்படுகிறார்கள். இதுவே டிக்கெட் கவுன்டர் ஊழியர்களுக்கு மெத்தன செயல்பாடுக்கு காரணமாக உள்ளது. மக்கள் கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்களை திறக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்ட போது, “ரயில்வே ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு சில யூனியன்கள் செயல்படுகின்றன. அந்த தைரியத்தில் பயணிகளை சில ஊழியர்கள் மதிப்பதே இல்லை. சிலர் வேலைக்கே வராமல் ஊதியம் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். பயணிகளுக்கு சிறப்பான சேவை செய்யவே ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. அதையெல்லாம் யாரும் கண்டுக் கொள்வதில்லை. ஊழியர் மீது நடவடிக்கை எடுத்தால் தனக்கு பிரச்னை வரும் என்று சில அதிகாரிகள் கண்டும் காணாமல் பணியாற்றுகின்றனர். இது தவறு செய்யும் ஊழியர்களுக்கு இன்னும் தைரியத்தை கொடுத்துவிடுகிறது. ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் மனசாட்சியுடன் பணியாற்றினால் பயணிகளுக்கு சிறப்பான சேவை செய்ய முடியும்” என்றார்.
பயணிகளுக்கு சேவை செய்யவே ரயில்வே ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களை அலட்சியப்படுத்துவதற்கல்ல. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.