Life History சுதந்திர போராட்ட வீரர்கள்

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.

‘சத்தியாகிரகம்’ என்றழைக்கப்பட்ட இவரது அறவழி போராட்டம் இந்திய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், இந்திய நாடு விடுதலைப் பெறவும் முக்கியக் காரணமாகவும் அமைந்தது. இதனால், இவர் “விடுதலைப் பெற்ற இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்பட்டார். “அகிம்சை” என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர். இந்தியாவின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து அறவழியில் போராட்டம் நடத்தி, விடுதலைக்குக் காரணமாக இருந்ததால், இவருடைய தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் இவருடைய பிறந்தநாளான அக்டோபர் 02 ஆம் தேதியை “காந்தி ஜெயந்தியாக” உலகம் முழுவதும் கொண்டாடுகிறோம். தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் பாரத நாட்டிற்காகவே அர்பணித்த மாபெரும் மனிதர் மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் தியாகங்களை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: அக்டோபர் 02, 1869

இடம்: போர்பந்தர், குஜராத் மாநிலம், இந்தியா

பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல் தலைவர் 

இறப்பு: ஜனவரி 30, 1948

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1869  ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 02  ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “போர்பந்தர்” என்ற இடத்தில் கரம்சாந்த் காந்திக்கும், புத்திலிபாய்க்கும் மகனாகப் பிறந்தார். இவருடைய தாய்மொழி குஜராத்தி ஆகும். மேலும் அவருடைய தந்தை கரம்சாந்த் காந்தி, போர்பந்தரில் ஒரு திவானாக பணியாற்றி வந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பள்ளியில் படிக்கும்போதே நேர்மையான மாணவனாக விளங்கினார். தன்னுடைய 13 ஆம் வயதிலேயே கஸ்தூரிபாயை திருமணம் செய்துகொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், பதினெட்டு வயதில் ‘பாரிஸ்டர்’ எனப்படும் வழக்கறிஞர் கல்விக்காக இங்கிலாந்து சென்றார். தன்னுடைய வழக்கறிஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்து, பாரதம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

இந்திய விடுதலைப் போராட்டதில் ஈடுபடக் காரணம்

பம்பாய் மற்றும் ராஜ்கோட்டில் சிறிதுகாலம் பணியாற்றிய மகாத்மா காந்தி அவர்கள், 1893 ஆம் ஆண்டு ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் ஆனார். அன்றுவரை அரசியல் ஈடுபாடின்றி இருந்த காந்தியின் மனதில் அந்தப் பயணம் அவருக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், பின்னாளில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாகவும் மாற்றியது. குறிப்பாக தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரிலுள்ள நீதிமன்றத்தில் தலைப்பாகை அணிந்து வாதாடக்கூடாது எனப் புறக்கணிக்கப்பட்ட நிகழ்வும், ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக, இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்தபோது, ‘வெள்ளையர் இல்லை’ என்ற காரணத்தால் பயணம் செய்ய மறுக்கப்பட்ட நிகழ்வும், அவருடைய மனதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், தென்னாப்ப்ரிக்காவில் கறுப்பின மக்கள் படும் இன்னலுக்கும், அங்கு குடியேறிய இந்திய மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, 1894 ஆம் ஆண்டு இந்திய காங்கிரஸ் என்ற கட்சியினை தொடங்கி, அதற்கு அவரே பொறுப்பாளரானார். பிறகு 1906 ஆம் ஆண்டு ஜோகர்ன்ஸ்பர்க் என்ற இடத்தில், அகிம்சை வழியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு, கைது செய்யப்பட்டு பலமுறை சிறை சென்றார். இவ்வாறு அகிம்சை வழியில் தென்னாப்பிரிக்காவில் வாழும் இந்திய மக்களின் பிரச்சனையில் வெற்றிக் கண்ட மகாத்மா காந்தி, இந்தியா திரும்பியதும், கோபாலகிருஷ்ண கோகலே மற்றும் ரவீந்திரநாத் தாகூர் போன்ற பெரும் அரசியல் தலைவர்களின் நட்பு ஏற்பட காரணமாக அமைந்தது.

இந்திய விடுதலைப் போராட்டதில் காந்தியின் பங்கு

இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார். ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் திவீரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள், 1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ரவ்லத் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு குரல்கொடுக்கவும், 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும், காந்தி ஒத்துழையாமையை இயக்கத்தினை 1922  ஆம் ஆண்டு தொடங்கினார். மாணவர்கள் கல்லூரிக்குச் செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதி மன்றத்திற்கு செல்லாமல் இருப்பது, பிரிட்டிஷ்காரர்கள் தயாரிக்கப்பட்ட துணி மற்றும் பொருட்களை புறக்கணித்தல் என பெரும் தாக்கத்தை இந்தியா முழுவதும் ஏற்படுத்தியது. இளையத் தலைமுறை மற்றும் தேசியவாதிகளிடையே இந்த இயக்கம் பெரும் ஆதரவைப் பெற்றது மட்டுமல்லாமல், ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால், காந்தி இந்திய தேசிய காங்கிரஸின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். பின்னர் 1922 ல் உத்திரபிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் நடந்த நிகழ்வினால் இவ்வியக்கம் கைவிடப்பட்டது.

காந்தியின் தண்டி யாத்திரை

1930 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு உப்புக்கு வரி விதித்தது. ஆனால், இதனை ஏற்க மறுத்த காந்தியடிகள், ‘தன்னுடைய நாட்டில் விளைந்த பொருளுக்கு அன்னியர் வரி விதிப்பதா?’ எனக் கருதி, சத்தியாகிர முறையில் இதை எதிர்க்க முடிவு செய்து, 1930 மார்ச் 02 தேதி அகமதாபாத்திலிருந்து சுமார் 240 மைல் தூரத்தில் இருந்த தண்டியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டார். இறுதியில் 23 நாள் பயணத்திற்குப் பிறகு தண்டியை வந்தடைந்த அவர், அங்கிருந்த கடல் நீரில் உப்பு காய்ச்சி ஆங்கில சட்டத்திற்கு எதிராக அதை விநியோகித்தார். இந்த நிகழ்வு இந்தியாவில் பல இடங்களில் பரவியது மட்டுமல்லாமல், போராட்டம் தீவிரம் அடைந்து காந்தி உட்பட பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஆனால், போராட்டம் தீவிரம் அடைவதைக் கண்ட ஆங்கில அரசு, வேறு வழியில்லாமல் காந்தியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் விதித்த உப்புவரியை திரும்பப் பெற்று கொண்டனர். ‘உப்பு சத்தியாகிரகம்’ என்ற இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

1942 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஆங்கில அரசுக்கு எதிராக ‘ஆகஸ்ட் புரட்சி’ என அழைக்கப்படும் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தினை காந்தி தொடங்கி வைத்தார். காந்தியின் மன உறுதியையும், அகிம்சை பலத்தையும் கண்ட ஆங்கில அரசு திகைத்தது. இறுதியில் காந்தியின் இடைவிடாத போராட்டத்தால், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்திய சுதந்திரப் பிரகடனம் அரங்கேறியது. ஆனால், இந்திய – பாகிஸ்தான் பிரிவினை காந்தியை பெரிதும் பாதித்தது.

இறப்பு

அகிம்சை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் சொன்ன மகாத்மா காந்தி அவர்கள், 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் நாள் (அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே) புது தில்லியில் நாதுராம் கோட்சே என்னும் கொடியவனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்காகவும் அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாகிரகம், வரி கொடா இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் என பலப் போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடத்தி, துப்பாக்கி ஏந்தி தன்னுடைய முரட்டுக்கரங்களால் அடக்கி ஒடுக்கிய வெள்ளையர்களை திகைக்கச் செய்தவர். பாரத நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் காணிக்கையாக்கிய மகாத்மாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் போராட்டங்கள் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட அழியா சுவடுகள் ஆகும்.