என். ஆர். நாராயண மூர்த்தி கர்நாடகாவை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர் ஆவார். இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர்.
தொழில் நுட்பத்துறையில் மட்டுமல்லாமல், இன்ஃபோசிஸ் என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கி, சமூக சீரமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு, உடல்நலம் பேணுதல், கல்வி என சமூகப் பணியாற்றி வரும் அவருக்கு இந்திய அரசு அவருடைய தொண்டுள்ளத்தைப் பாராட்டி, “பத்ம ஸ்ரீ” மற்றும் “பத்ம விபூஷன்” விருதை வழங்கி கௌரவித்தது. மேலும் அமெரிக்க அரசின் “ஹூவர் பதக்கம்” எனப் பல விருதுகளையும் வென்றுள்ளார். தொழில் பின்னணி எதுவுமே இல்லாமல், சிறிய அளவில் தொழில் முனைவோராகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, உலகமே திரும்பி பார்க்கும் வகையில் ஒரு சிறந்த தொழிலதிபராக வளர்ச்சிப் பெற்று இந்தியாவின் நவீன தொழில்நுட்பத் துறையின் முன்னோடிகளில் ஒருவராக போற்றப்படும் என். ஆர். நாராயண மூர்த்தியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: ஆகஸ்ட் 20, 1946
இடம்: மைசூர், கர்நாடக மாநிலம், இந்தியா
பணி: தொழிலதிபர், தொழில்முனைவர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
என். ஆர். நாராயண மூர்த்தி என்று அனைவராலும் அறியப்படும் “நாகவாரா ராமாராவ் நாராயண மூர்த்தி” அவர்கள், 1946 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள “மைசூரில்” ஒரு கன்னட பத்வபிராமண குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
ஆரம்பக் கல்வியை வெற்றிகரமாக முடித்த அவர், பிறகு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் என்ஜினியரிங், யுனிவர்சிட்டி ஆஃப் மைசூரில் 1967 ஆம் ஆண்டு மின் பொறியியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1969 ஆம் ஆண்டு கான்பூரில் உள்ள ஐஐடி-யில் இருந்து மின்னணு பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஆரம்பகாலத்தில் மேற்கொண்ட பணிகள்
தன்னுடைய கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்த அவர், 1969 ஆம் ஆண்டு அகமதாபாத்திலுள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் கணினித்துறையில் வேலைக்கு சேர்ந்தார். பிறகு, சிறிது காலம் புனேவில் தன்னுடைய பணியைத் தொடர்ந்த அவர், 1972 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டிற்கு சென்று எஸ்.இ.எஸ்.ஏ என்ற நிறுவனத்தில் பணியாற்றி இந்தியா திரும்பினார்.
இன்ஃபோசிஸ் நிறுவனம்
1981 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி ரூ. 10,000 முதலீட்டுடன் “இன்ஃபோசிஸ் தொழில்நுட்ப நிறுவனத்தை” புனேவில் நிறுவினார். அடுத்த ஆண்டே 1982 ஆம் ஆண்டு பெங்களூரில் தன் அலுவலகத்தினை தொடங்கிய இன்ஃபோசிஸ் நிறுவனம், விரைவில் அதுவே அதன் தலைமை அலுவலகமாகவும் மாறியது. குறுகிய காலத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டிய இந்நிறுவனம், இந்தியாவில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ச்சியடைந்தது. மிகவிரைவில் மிகவும் போற்றத்தக்க அறிவுசார் தொழில்முனைவோர் எனப் போற்றப்பட்ட இந்நிறுவனத்தை, 2001 ல் “பிசினஸ் டுடே” என்ற பத்திரிக்கை இந்தியாவின் சிறந்த பணிவழங்குனராகக் குறிப்பிட்டது. இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் சுமார் 22 நாடுகளில் அலுவலங்களைக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், இந்தியா, சீனா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் வளர்ச்சி மையங்களாகவும் திகழ்கிறது. அதுமட்டுமல்லாமல், 2003, 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளுக்கான குளோபல் விருதையும் பெற்றது. இவ்விருதினை பெற்ற ஒரே இந்திய நிறுவனம் இன்ஃபோசிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக அக்கறை
என். ஆர். நாராயண மூர்த்தி அவர்கள், தொழில் நுட்பத்துறையில் மட்டுமே அங்கம் வகிக்காமல், தமது நேரத்தை சமூக சேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். 1996 ஆம் ஆண்டு இன்ஃபோசிஸ் என்ற பெயரில் அறக்கட்டளையை தொடங்கி சமூக சீரமைப்பு மற்றும் கிராமப்புற மேம்பாடு, உடல்நலம் பேணுதல், கல்வி என சமூகப் பணியாற்றி வருகிறார். இந்த அறக்கட்டளை கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, ஒரிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நிறுவப்பட்டு, சமூக சேவைப் புரிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கிய அவர், “புதிய கனவுகள், புதிய இந்தியா” என்ற புத்தகத்தை எழுதி, 2010 ஆம் ஆண்டு வெளியிட்டார். அதில் உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்க கல்வி, அரசியல் மற்றும் வணிகத்துறையில் மேற்கொள்ளவேண்டிய சீர்த்திருத்ததங்கள் பற்றி விரிவாக விளக்கியிருக்கிறார்.
நமது நாட்டிலேயே மிகச் சிறந்த தொழில் அறிஞர்களை உருவாக்கக்கூடிய தரமான பள்ளிகளையும், கல்லூரிகளையும் நிறுவவேண்டும் எனவும் கூறியுள்ள அவர், இந்தியாவின் தொழில்துறை, கல்வித்துறை, அரசுத்துறை ஆகிய அனைத்தும் சரியான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டால் உலகப் பொருளாதாரம் இந்தியாவையும் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தமுடியும் எனவும் வலியுறுத்துகிறார். மேலும் அவரின் தன்னலமற்ற தொண்டு சேவையைப் பாராட்டி, அமெரிக்க அரசு “ஹூவர் பதக்கம்” வழங்கி கௌரவித்தது. மருத்துவ சேவை, கிராமப்புற முன்னேற்றம், கல்வி வசதி போன்றவற்றை அளிப்பதற்காக தொண்டுநிறுவனத்தை தொடங்கி, அதைச் சிறப்பாக செயல்படுத்தி வருவதற்காக இவ்விருது வழங்கப்பட்டது. மேலும், இந்திய அரசு அவருடைய தொண்டுள்ளத்தை பாராட்டி, “பத்ம ஸ்ரீ” மற்றும் “பத்ம விபூஷன்” விருதை வழங்கி கௌரவித்தது.
விருதுகளும், மரியாதைகளும்
- 2000 – இந்திய அரசால் “பத்மஸ்ரீ” விருது.
- 2007 – இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் மூலம் “ஐ.இ.இ.இ எர்ன்ஸ்ட் வெபர் பொறியியல் தலைமை அங்கீகாரம்” வழங்கப்பட்டது.
- 2007 – கவர்மென்ட் ஆஃப் யுனைடெட் கிங்டம் மூலம் ‘பிரிட்டிஷ் சாம்ராஜ்ய ஒழுங்கின் தளபதி’.
- 2008 – பிரான்ஸ் அரசாங்கத்திடம் இருந்து “ஆபீசர்ஸ் ஆஃப் தி லெஜன்ட் ஆஃப் ஆனர்”.
- 2008 – மத்திய அரசிடம் இருந்து “பத்ம விபூஷன்” விருது.
- 2009 – அறிஞர்களுக்கான உட்ரோ வில்சன் சர்வதேச மையத்திடம் இருந்து கார்ப்பரேட் குடியுரிமைக்கான ‘உட்ரோ வில்சன் விருது’.
- 2010 – இன்ஸ்டிடியூட் ஆஃப் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் மூலம் “ஐ.இ.இ.இ கௌரவ உறுப்பினர் பதவி”.
- 2011 – என்டிடிவி மூலம் “என்டிடிவி இந்தியன் ஆப் தி யியர்ஸ் ஐகான் ஆஃப் இந்தியா.”
- 2012 – அமெரிக்க அரசிடம் இருந்து “ஹூவர் பதக்கம்”.
- 2013 – ஆசிய கொடையாளர் விருது.
- 2013 – பரோடா மேலாண்மை கழகத்திடம் இருந்து “சாயாஜி ரத்னா” விருது.
என். ஆர். நாராயண மூர்த்தி அவர்கள், நேர்மை, எளிமை, உண்மை என வாழ்ந்து காட்டியவர். தனது நிறுவனத்தைப் பற்றி மட்டும் கவலைப்படாமல், ஒட்டுமொத்த தொழில்நுட்பத்துறையின் வளர்சிப்பற்றியும் சிந்தித்தவர். இந்தியா தகவல் தொழில் நுட்பத் துறையை முக்கிய சக்தியாக மாற்றியவர்களில் என். ஆர். நாராயண மூர்த்தி அவர்களின் பங்கு சிறப்பானது என்பதை யாராலும் மறுக்கமுடியாது.