இசையரசி’ என அழைக்கப்படும் பி. சுசீலா அவர்கள், இந்தியத் திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையான குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்தவர். திரைப்படத்துறையில் சுமார் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசைப் பணியாற்றி வரும் அவர், ‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’, ‘பெங்காலி’, ‘இந்தி’, ‘ஒரியா’, ‘சமஸ்கிருதம்’ ‘சிங்களம்’ என பல இந்திய மொழிகளில் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். சுமார் 25,000-க்கும் மேல் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ள அவர், ‘ஐந்து முறை தேசிய விருதுகள்’, ‘ பத்து முறைக்கும் மேல் மாநில விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், இந்திய அரசின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ விருது மத்திய அரசால் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தன்னுடைய வசீகரக் குரலால் இசை நெஞ்சங்களை வருடி, என்றென்றும் அழியா புகழ்பெற்று விளங்கும் பி. சுசீலாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைப்படத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: நவம்பர்13, 1935
இடம்: விஜயநகரம், ஆந்திரப் பிரதேசம் மாநிலம், இந்தியா
பணி: திரைப்பட பின்னணிப் பாடகி
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
“புலப்பாக்க சுசீலா” என்னும் இயற்பெயர்கொண்ட பி. சுசீலா அவர்கள், 1935 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி இந்தியாவின் ஆந்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள “விஜயநகரம்” என்ற இடத்தில், தந்தையார் ‘புலப்பாக்க முந்தராவ் கவுத்தாரம்’, என்பவருக்கும், தாயார் ‘ஷேசாவதாரம்’ என்பவருக்கும் மகளாகப் பிறந்தார். இவருக்கு ஐந்து சகோதரிகளும், மூன்று சகோதரர்களும் உள்ளனர். இவருடைய தந்தை ஒரு வக்கீலாக பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தன்னுடைய சொந்த ஊரிலியே பள்ளிப்படிப்பை முடித்த அவர், படிக்கும் பொழுதே இசையின் மீது ஏற்பட்ட ஆர்வத்தினால் ஆந்திராவில் புகழ்பெற்று விளங்கிய ‘துவாரம் வேங்கடசாமி நாயுடுவிடம்’ முறையாக இசைப் பயின்றுவந்தார். அதன் பிறகு, ‘சென்னை மகாராஜா இசைக்கல்லூரியில்’ சேர்ந்து, இசைக் கல்வி பயின்ற அவர் பின்னர், ‘ஆந்திரா பல்கலைக்கழகத்தில்’ சேர்ந்து இசைத்துறையில் ‘டிப்ளமோ’ முடித்தார்.
இசைப்பயணம்
இளம்வயதிலேயே குறுகியகாலத்திற்குள் பாரம்பரிய இசையில் தேர்ச்சிப்பெற்றவராக விளங்கிய அவர், ஆரம்பத்தில் சென்னை வானொலியில் ‘பாப்பா மலர் நிகழ்ச்சியில்’ பாடத்தொடங்கினார். சுசீலாவின் இசைத்திறமையைக் கண்ட இயக்குனர் ‘கே.எஸ் பிரகாஷ்ராவ்’ அவர்கள், தன்னுடைய ‘பெற்றதாய்’ திரைப்படத்தில் முதன் முதலாக பின்னணிக் குரல் பாட வைத்தார். 1953 ஆண்டு வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தில் ‘ஏ.எம் ராஜாவுடன்’ இணைந்து, பெண்டியாலா நாகேஸ்வரராவின் இசையில் ‘எதுக்கு அழைத்தாய்’ என்றப் பாடலைப்பாடினார். பிறகு ‘ஏ.வி.எம் ஸ்டுடியோவில்’ சிறிது காலம் பணியாற்றிய அவர், ‘லஷ்மிநாராயணம்’ என்பவரிடமிருந்து மேலும் தமிழ் கற்றுத் தேர்ந்தார். அதன் பிறகு, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்ற திரைப்படத்தில் இவர் பாடிய ‘எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்’ மற்றும் ‘உன்னைக் கண் தேடுதே’ என்ற பாடல்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதே ஆண்டில் ‘எஸ்.வி பிரசாத்’ இயக்கத்தில் வெளிவந்த ‘மிஸ்ஸியம்மா’ திரைப்படத்தில் இவர் பாடிய இரண்டு பாடல்கள் மேலும் புகழைப் பெற்றுத்தந்தது.
தாய்மொழி தெலுங்கு என்றாலும், தமிழ் கற்றப்பிறகு, அவர் உச்சரிப்பில் உதிர்ந்த அனைத்துப் பாடல்களும் கேட்பவர் மனதில் ஒரு பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். 1955 ஆம் ஆண்டுக்கு பிறகு, தன்னுடைய தேன் குரலால் தமிழ் இசை நெஞ்சங்களின் மனதை உருகவைத்த அவர், தொடர்ந்து பலப் பாடல்களை பாடினார். குறிப்பாக ‘ஆலயமணியின் ஓசையை நான்கேட்டேன்’, ‘நினைக்கத் தெரிந்த மனமே’, ‘சிட்டுக்குருவி முத்தம்’, ‘முத்தான முத்தல்லவோ’, ‘மன்னவனே அழலாமா’, ‘பேசுவது கிளியா’, ‘ஆயிரம் நிலவே வா’, ‘வளர்ந்த கலை’, ‘அனுபவம் புதுமை’, ‘தாமரை கன்னங்கள்’, ‘மறைந்திருந்துப் பார்க்கும்’ போன்ற பலப் பாடல்கள் இசை நெஞ்சங்களின் மனதில் ஆலயமணியாய் ஒலித்தன. அமுதக்குரலில் ‘தமிழ் மொழியைப்’ பற்றி அவர் பாடிய ‘தமிழுக்கும் அமுதென்றுப் பேர்’ என்ற பாடல் தமிழ் பிரியர்களின் மனதை அமுத மழையால் நனைத்தது.
‘நாகேஸ்வரராவ்’, ‘விஸ்வநாதன் ராமமூர்த்தி’, ‘எம். எஸ். விஸ்வநாதன்’ என்று அன்றைய இசையமைப்பாளர்களில் தொடங்கி, ‘இசைஞானி இளையராஜா’, ‘ஏ.ஆர் ரகுமான்’ என மேலும் பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடிய அவர், தமிழ் மொழியில் மட்டுமல்லாமல், ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’, ‘பெங்காலி’, ‘இந்தி’, ‘ஒரியா’, ‘சமஸ்கிருதம்’, ‘சிங்களம்’ எனப் பல இந்திய மொழிகளில் பாடி, இசைத் துறைக்கு அரியதோர் பங்காற்றி உள்ளார். இசைத் துறையில் 60 ஆண்டுகளைக் கடந்து, சுமார் 25,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி மாபெரும் சாதனைப் படைத்து வரும் சுசீலா அவர்கள், தன் பெயரிலேயே அறக்கட்டளை ஒன்றை நிறுவி, இசைப் பணியாற்றி வருவதோடு மட்டுமல்லாமல், தேசிய அளவில் இசைத்துறையில் சாதனைப் புரிபவர்களைப் பாராட்டி விருதுகள் வழங்கி, கௌரவித்து வருகிறார்.
இவர் பாடிய பாடல்களின் தொகுப்பு
‘நான் மலரோடு தனியாக’, ‘அமைதியான நதியினிலே ஓடம்’, ‘அடுத்தாத்து அம்புஜத்த’, ‘வாழ நினைத்தால் வாழலாம்’, ‘அன்று வந்தததும் இதே நிலா’, ‘பேசுவது கிளியா’, ‘விழியே கதையெழுது’, ‘ஆயிரம் நிலவே வா’, ‘இயற்கை என்னும் இதயக்கனி’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்’, ‘வளர்ந்த கலை’, ‘பால் வண்ணம்’, ‘என்னருகே நீ இருந்தால்’, ‘அனுபவம் புதுமை’, ‘காத்திருந்த கண்களே’, ‘தாமரைக் கன்னங்கள்’, ‘ரோஜா மலரே ராஜகுமாரி’, ‘தமிழுக்கு அமுதென்று பேர்’, ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’, ‘உன்னை ஒன்று கேட்பேன்’, ‘பார்த்த ஞாபகம் இல்லையோ’, ‘சொன்னது நீதானா’, ‘ஆண்டவனே உன் பாதங்களில்’, ‘நான் உன்னை வாழ்த்தி பாடுகிறேன்’, ‘நாளை இந்த வேளை’, ‘மன்னவனே அழலாமா’, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘உன்னைக் காணாத’, ‘நினைக்கத் தெரிந்த மனமே’, ‘சுட்டுக்குருவி’, ‘ஆலயமணியின் ஓசையைக் நான் கேட்டேன்’ என இன்னும் பல பாடல்கள் தமிழ் இசை ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாத ஒன்றாகும்.
விருதுகளும் மரியாதைகளும்
- 2008 – மத்திய அரசால் ‘பத்ம விபூஷன்’ விருது.
- 2001 – ஆந்திர மாநில அரசால் ‘ரகுபதி பெங்கையா விருது’.
- 1969, 1971, 1976, 1982, 1983 என ஐந்து முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான ‘தேசிய விருதை’ வென்றுள்ளார்.
- 1969, 1981, 1989 என மூன்று முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான ‘தமிழ்நாடு மாநில அரசின் விருது’ வழங்கப்பட்டது.
- 1971 மற்றும் 1975 என இரண்டு முறை ‘கேரளா மாநில அரசின் விருது’.
- 1977, 1978, 1982, 1984, 1987, 1989 என ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான ‘ஆந்திர மாநில அரசின் விருது’ வழங்கப்பட்டது.
“எத்தனைக் காலங்கள் சென்றாலும் பி. சுசீலா அவர்களின் மயக்கும் குரலில் உதிர்ந்த நெஞ்சை வருடும் அனைத்துப் பாடல்களும், இசை நெஞ்சங்களின் மனதில் என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் என்பதை யாராலும் மறுக்க இயலாது.