கடந்த வெள்ளியன்று வெளியான மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் நல்ல வசூலை தந்து கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவில் இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பதிப்புகள் வியாழக்கிழமை நடந்த பிரிமியர் ஷோ மற்றும் வெள்ளியன்று நடைபெற்ற காட்சிகளில் மட்டும் ரூ.1.60 கோடி வசூல் தந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழில் மட்டும் ரூ.1.10 கோடியும், தெலுங்கில் ரூ.50 லட்சமும் இந்த படம் அமெரிக்காவில் வசூல் செய்துள்ளது. இந்த வசூல் அமெரிக்காவை பொருத்தவரை விஜய், அஜீத், மற்றும் சூர்யா படங்களின் முதல் நாள் வசூலுக்கு கிட்டத்தட்ட சமம் என கூறப்படுகிறது.
மேலும் படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் இந்த படத்தின் காட்சிகளை அதிகப்படுத்தவும் அமெரிக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற பெரிய ஹீரோக்கள் இல்லாமல் மிகப்பெரிய வசூலை அமெரிக்காவில் பெற்றுத்தந்த முதல் திரைப்படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முழுக்க முழுக்க மணிரத்னத்தின் சிறப்பான இயக்கம், பி.சி.ஸ்ரீராமின் அற்புதமான கேமரா ஒர்க் மற்றும் உலக அளவில் புகழ்பெற்ற ரஹ்மானின் இசை ஆகியவைகளே இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்கள் என ஊடகங்கள் கூறி வருகின்றன