‘சினிமா தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையிலும், குறைந்த கட்டணத்தில், ரசிகர்கள் படம் பார்த்து மகிழவும், ‘அம்மா’ திரையரங்குகள் கட்டுமானப் பணிகளை, துரிதப்
படுத்த வேண்டும்’ என, ‘சிறு பட்ஜெட்’ சினிமா தயாரிப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.முரளி – லைலா நடித்த, காமராஜ் மற்றும் அய்யா வழி போன்ற படங்களை இயக்கிய நாஞ்சில் அன்பழகன், ‘நதிகள் நனைவதில்லை’ படத்தை இயக்கி, தயாரித்து, கடந்த மாதம், 27ம் தேதி வெளியிட்டார்.
‘ஒரு வீட்டை விற்று, படத்தை தயாரித்தேன், மறு வீட்டை விற்று படத்தை வெளியிட்டேன். படத்திற்கு நெருக்கடி ஏற்பட்டதால் படத்தை தியேட்டரிலிருந்து தூக்கி விட்டனர்; 3.5 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டது’ என, அவர் புலம்பினார்.பெரிய ‘பட்ஜெட்’ படங்களை, பொங்கல் பண்டிகை, தீபாவளி, மே தினம், கிறிஸ்துமஸ், தமிழ்ப்புத்தாண்டு என, ஆண்டில், 10 நாட்கள் மட்டுமே வெளியிட வேண்டும் என, கட்டுப்பாடு உள்ளது. கட்டுப்பாட்டை மீறி, இஷ்டத்திற்கு விருப்பப்பட்ட தேதியில் பெரிய, ‘பட்ஜெட்’ படங்களை
வெளியிடுவதால், சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை; கிடைத்தாலும், நெருக்கடி கொடுத்து தூக்கி விடுகின்றனர்.இதனால், சங்கக் கட்டுபாட்டை உறுதி செய்ய வேண்டும். மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் தாணுவை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.பின், நாஞ்சில் அன்பழகன் கூறியதாவது:சென்னை மாநகராட்சி சார்பில், நவீன வசதிகளுடன், ‘அம்மா’ திரையரங்குகள் கட்ட முயற்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் தியேட்டர் கட்டுமானப் பணி முடிக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.இத்திரையரங்குகளில், சிறிய, ‘பட்ஜெட்’ படங்களை வெளியிட முன்னுரிமை தர வேண்டும். படத்தை தியேட்டரில் இருந்து ஒரு வாரத்திற்குள்ளாக தூக்க கூடாது; படம் பார்க்க வருபவர்கள் தின்பண்டங்கள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என, மாநகராட்சி மேயரை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன்.சிறு ‘பட்ஜெட்’ படத் தயாரிப்பாளர்களை வாழ வைக்கும் வகையில், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.