உலகம் முழுக்க வாழும் அனைத்து தமிழர்களும் எதிர்பார்த்த படம் கபாலி. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. பிரபலங்கள் சிலர் கூட தங்களது எதிர்மறை விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினியின் நண்பரும், பிரபல நடிகருமான உலகநாயகன் கமல்ஹாசன் இப்படத்தை பார்த்து தனது நீண்ட விமர்சனத்தை தந்துள்ளார்.
இரண்டு நாட்களாய் முகநூலில் வந்த அனைத்து விமர்சனங்களையும் படித்துவிட்டு.. இரண்டு வித மனநிலையில் இன்று கபாலி படம் பார்த்தாகி விட்டது.
66 வயதில் ஒருவர் ஆண், பெண், குழந்தைகள் என எல்லா வயதினரையும் காலை 6 மணிக்கே திரையரங்கினில் கூட வைப்பது பெரிய சாதனையா என்ன.?
இரண்டே இரண்டு ஷு போட்ட கால்கள் திரையில் நடந்து வர.. இருக்கையில் எவரையும் அமரவிடாமல் செய்வது அதிசயமா என்ன.?
இப்படித்தான் என்ற இலக்கணத்தை மீறி.. எப்படி இருந்தாலும் எம் தலைவன் என உலக அளவில் ரசிகர்களைக் கொண்டிருப்பது பெரிய புரட்சியா என்ன.?
35 ஆண்டுகாலமாக திரைத்துறையில் வந்து காணாமல் போனவர்கள் பலர்.. இன்னும் வந்து கொண்டிருப்பவர்கள் பலர்.. இனி வரப் போகின்றவர்கள் பலர். அத்தனை பேருக்கும் ஒரே நோக்கம் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆவதுதான் என்பதையே எல்லைக் கோடாக நிர்ணயம் செய்தது ஒரு பெரிய விஷயமா என்ன?
வயதாகிவிட்டது.. தலையில் முடியில்லை..கருப்பு நிறம்.. தமிழனில்லை.. தமிழகத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. இது போன்ற அத்தனை எதிர்ப்புகளுக்கும் ஒற்றை பதிலாய் ஒரே சிரிப்பு.. சொல்பவர் அத்தனை பேரும் கண்ணாடி முன் நின்று தன்னை அலங்கரித்துக் கொள்ளும்போது நினைத்துக் கொள்வது என்னவோ இவர் உருவத்தைத்தான்.
இது என்ன மாயமோ.?
உலகத்தரம் என்ற ஒற்றை வார்த்தையை எத்தனையோ பேர் சொந்தமாக்கிக் கொண்டிருக்கும்போது.. உலகத்தை தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்வது ஒரு பெரிய சாதனையா என்ன.?
கபாலி.. மற்ற படங்களில் வெடிக்கும் ரஜினியின் ஸ்டைல்.. இதில் மட்டுமே நடித்திருக்கிறது.
எடிட்டிங்.. கதை.. தலித்தியம்.. ரஞ்சித் சரியாக பயன்படுத்தவில்லை.. வேகம் குறைவு.. எனப் பல பரிமாணங்களை விமர்சனங்களாகக் கண்டும்.. எதுவுமே நெஞ்சில் நிற்கவில்லை.. ரஜினியைக் கண்டபின் என்பதும் உண்மை.
தர்மத்தின் தலைவன், ராஜாதிராஜா, மன்னன், மாப்பிள்ளை, தளபதி, அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, எந்திரன், சந்திரமுகி.. போன்றவைகளைத் தொடர்ந்து இன்றும் தொலைந்து போன நம் இளமைக் காலத்தை தேடிக் கண்டுபிடித்துத் தருவதென்னவோ இவருக்குத் தேவையில்லாத வேலைதான்.
எது எப்படியோ.. 65 வயதில் தாத்தாவும்..45 வயதில் அப்பனும், 15 வயதில் மகனும் நண்பர்களாக தோள்மீது கை போட்டுக் கொண்டு.. திரையில் இவரைக் காண்பித்தவுடன்.. தங்களை மறந்து கைதட்டி கூச்சலிட்டு மகிழ்ந்து வரவேற்பது இவரை மட்டுமே.. என்பதில் ஐயமில்லை.
அதற்காகவாவது இந்த மனிதர் இன்னும் கொஞ்சம் நூற்றாண்டுகள்.. சூப்பர் ஸ்டாராகவே இருந்துவிட்டு போகட்டுமே..சாதனைகள், சொல்லப்படுவதில்லை, செய்யப்படுகின்றன.
தன்னைப் பிடிக்காதவர்களைக் கூட.. தன்னைப் பற்றியே பேச வைப்பதுதான் இவர் செய்த மகத்தான சாதனை.