தேசத் தந்தை மகாத்மா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து, அப்போது தெருக்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய கட்டிடங்களுக்கு ‘மகாத்மா காந்தி’ பெயர் சூட்டப்பட்டது. அந்த நிலையில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கே.எஸ்.வி.ராவ் என்பவர், 1948–ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
அதில் அவர், மகாத்மா காந்தியை பெருமைப்படுத்தும் வகையில் அவர் தொடர்புடைய பெயர்களை மாதங்களுக்கு சூட்டுமாறு யோசனை தெரிவித்து இருந்தார். அதாவது ஒவ்வொரு மாதத்திற்கும் மோஹனா (காந்தி பெயரின் முதல் பகுதி), அஹிம்சா (அமைதி), சத்யா (உண்மை), சக்ரா (ராட்டைச் சக்கரம்) என்று பெயர் சூட்டலாம் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த கடிதம் டெல்லியில் உள்ள தேசிய ஆவண காப்பகத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.