Indians

டெல்லியில் காற்றுமாசு காரணமாக மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்

டெல்லியில் சுவாசப் பிரச்சினையால் அவதியுறும் ஒரு பெண், மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகிறார்.   –  AFP

டெல்லியில் காற்றுமாசு அபாய அளவைத் தாண்டியிருப்பதால் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 3 மடங்காக அதிகரித்துள்ளது.

பொதுவாக காற்று தரக் குறியீடு 50 புள்ளிகள் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. 100 புள்ளிகள் இருந்தால் பரவாயில்லை. ஆனால் தற்போது டெல்லியில் காற்று தரக் குறியீடு 500 புள்ளிகளை எட்டியுள்ளது. இது மிகவும் அபாயகரமானது.

டெல்லியின் வளி மண்டலத்தில் அபாயகரமான நைட்ரஜன் டை ஆக்ஸைடு, சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு ஆகிய நச்சு வாயுக்கள் அதிகரித்துள்ளன. தற்போது டெல்லியில் காற்றை சுவாசிப்பது நாள் ஒன்றுக்கு 50 சிகரெட்டுகளை புகைப்பதற்கு சமம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

டெல்லி முழுவதும் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து வருவதால் சுவாசக் கோளாறு பிரச்சினைகளால் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு மருத்துவமனையான வல்லபாய் படேல் இதய நோய் இன்ஸ்டிடியூட் மருத்துவர் மான்ஸி வர்மா கூறியபோது, சுவாசக் கோளாறு பிரச்சினை காரணமாக நாளொன்றுக்கு 300 நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகின்றனர். இது 3 மடங்கு அதிகமாகும். அவசர கால அடிப்படையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்றார்.

அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வியாபாரி மனோஜ் கத்தி (46) கூறியபோது, 3 நாட்கள் இருமலால் கடும் அவதிப்படுகிறேன். இதனால் இறந்துவிடுவேனா என்றுகூட அஞ்சுகிறேன் என்றார்.

டெல்லி தனியார் மருத்துவமனை மருத்துவர் அரவிந்த் குமார் கூறியபோது, காற்று மாசு மனிதர்களை மெதுவாக கொல்லும். தற்போதைய காற்று மாசால் நுரையீரல், இதய நோய் பிரச்சினை காரணமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் டெல்லியை விட்டு வெளியேறுவது நல்லது என்றார்.

8 ரயில்கள் ரத்து

டெல்லியில் காற்றுமாசு காரணமாக டெல்லி – நியூயார்க் செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்டது. நேற்றும் நகரம் முழுவதும் புகைமூட்டமாக இருந்தது. இதனால் 34 ரயில்கள் கால தாமதமாக இயக்கப்பட்டன. 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். வரும் 14, 15-ம் தேதிகளில் டெல்லியில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. அப்போது காற்றுமாசு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.