Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

ஜிஎஸ்டி என்றால் என்ன? சாதக பாதகங்கள் என்ன?

ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி அனைத்து பொருட்கள் மற்றும் சர்வீஸ்களுக்கும் பொருந்தும். தற்போதைய கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் சேவை வரி அனைத்தும் நீக்கப்பட்டு ஒரு வரியின் கீழ் கொண்டு வரப்படுவதுதான் ஜிஎஸ்டி.

எதற்கு ஜிஎஸ்டி அவசியம்?

தற்போது பல்வேறு மாநிலங்களும் பல்வேறு விதமான மதிப்புக் கூட்டு வரிகளை வசூலித்து வருகிறது, மாநிலங்கள் தங்களுக்குள் வர்த்தகம் கொண்டு இருக்கும் நிலையில் இந்த வரியால் குழப்பம்தான் நிலவி வருகிறது. மேலும், பெரும்பாலான வர்த்தகங்களுக்கு கலால் வரி, மதிப்புக் கூட்டு வரி மற்றும் சேவை வரி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தக் குழப்பங்களைப் போக்கும் வகையில் அனைத்து வரிகளும் ஒரு வரியின் கீழ் கொண்டு வரவே ஜிஎஸ்டி கொண்டு வரப்படுகிறது. நாடு முழுவதும் ஒரே வரி பின்பற்றப்படும். நாடு முழுவதும் வர்த்தகம் கையாளுவதில், வரி வசூலிப்பதில் இருக்கும் சிக்கல்களை களைவதற்கு இந்த முறை பின்பற்றப்படும்.

யாரெல்லாம் வரி செலுத்த வேண்டும்?

உற்பத்தியாளர்கள், விற்பன்னர்கள் ஆகியோர் இந்த வரியை செலுத்த வேண்டும். சர்வீஸ் புரவைடர்களாக இருக்கும் டெலிகாம், சன்சல்டன்ட் மற்றும் சார்டர்ட் அக்கவுண்டன்ட் ஆகியோரும் இந்த வரிகளை செலுத்த வேண்டியது இருக்கும். தற்போதைய மறைமுக வரியைப் போன்றே, ஜிஎஸ்டி முறையிலும் அனைத்து வரிகளையும் நுகர்வோரே செலுத்த வேண்டியது இருக்கும்.

எந்த மாதிரியான ஜிஎஸ்டி?

கனடா நாட்டில் இருப்பதைப் போன்றே இந்தியாவிலும் இரட்டை ஜிஎஸ்டி வரி வசூலிப்பு முறை அமல்படுத்தப்படும். மத்திய மாநில அரசுகள் இந்த வரியை வசூலிக்கும். மூன்று வகையான ஜிஎஸ்டி வரிகள் அமல்படுத்தப்படும்.

சிஜிஎஸ்டி – மத்திய அரசால் வசூலிக்கப்படும்

எஸ்ஜிஎஸ்டி – மாநில அரசால் வசூலிக்கப்படும்

ஐஜிஎஸ்டி – மத்திய மற்றும் மாநில அரசு இரண்டுக்கும் பொருந்தும். சுமூகமாக முறையில் வரிகளை பிரித்துக் கொள்வதற்கு இந்த முறை உதவும்

ஜிஎஸ்டி வரி எந்தளவிற்கு இருக்கும்?

ஜிஎஸ்டி வரியை இன்னும் மத்திய அரசு முடிவு செய்யவில்லை. தற்போதைக்கு முன் மொழியப்பட்ட வரியைப் பார்க்கலாம். வரி விகிதங்கள் 5%, 12%, 18%, 28% ஆக இருக்கலாம் என்று முன் மொழியப்பட்டுள்ளது. இதில் ஆடம்பர வரியும் அடங்கும்.

* சமையல் எண்ணெய், மசாலாப் பொருட்கள், தேயிலை, காபி ஆகிவற்றுக்கான வரி தற்போதைய 9 சதவீதத்தில் இருந்து 5ஆக குறையலாம்.

* கம்ப்யூட்டர், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றின் வரிகள் தற்போதைய 9-15 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறையலாம்.

* சோப்புகள், எண்ணெய்கள், ஷேவிங் ஸ்டிக் ஆகியவற்றின் மீதான வரி தற்போதைய 15-21 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக மாறலாம்.

* ஆடம்பர பொருட்கள் (ஆடம்பர கார்கள், புகையிலை, குளிர் பானங்கள்) ஆகியவற்றின் மீதான வரி 21 சதவீதத்தில் இருந்து, 28 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* உணவு தானியங்கள் மீது எந்த வரியும் இருக்காது என்று கூறப்படுகிறது

எந்தளவிற்கு ஜிஎஸ்டி பாதிக்கும்?

வெளிநாட்டு ஷாம்பூ, சாக்லேட் மற்றும் ஹோட்டல்களில் சாப்பிடுவது, சிறிய ரக கார்கள், டிடிஎச் ஆகியவற்றின் விலை குறையலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

விலையேற்றம்:

ஆடம்பர கார்கள், புகையிலை, குளிர்பானங்கள், டெக்ஸ்டைல் சார்ந்த பொருட்களின் விலை அதிகரிக்கலாம்.

ஜிஎஸ்டியால் லாபமா? பாதிப்பா?

இந்தியா போன்ற நாடுகள் ஒரு வரி விதிப்புக்குக் கீழ் வருவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இதற்கு முன்பு மாறிய நாடுகள் கூட, துவக்கத்தில் பணவீக்கத்தை சந்தித்தன. அதாவது, வாங்கும் பொருட்களின் விலை அதிகரித்து, பணத்தின் மதிப்பு குறைந்து காணப்படும். ஒரு வரியின் கீழ் வருவதால், தொடர்ந்து கண்காணித்து, ஒரு வரியின் கீழ் கொண்டு வருவது எந்தளவிற்கு சாத்தியம் என்பது பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு நிலைமை சரியாகும்.

ஜிஎஸ்டி மூலம் மாநிலங்களுக்கு இடையே பொருட்கள் கொண்டு செல்வது எளிதாகும். தினப்படி விற்பனை பொருட்களின் விலை குறையும்.

Exit mobile version