* மலைக்க வைக்கும் பினாமி சொத்துகள் சிக்கின
* விவேக், சிவகுமாரை அழைத்து சென்று விசாரணை
சென்னை: சசிகலா உறவினர் வீடுகளில் வருமானவரித் துறை அதிகாரிகள் ஐந்து நாட்களாக நடத்தி வந்த சோதனை நேற்று முடிந்தது. சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு தமிழகம் முழுவதும் 6 லட்சம் ஏக்கர் நிலம், பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விவேக், டாக்டர் சிவக்குமார், ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆகியோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில், வருமான வரி வழக்காக இல்லாமல் சிறப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அவசர ஆலோசனை நடந்து வருகிறது.
சசிகலாவின் உறவினர் வீடுகள், அலுவலகங்கள் என 187 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஐந்தாவது நாளான நேற்று, இளவரசியின் மகன் விவேக், சகோதரி கிருஷ்ணப்பிரியா, ஷகீலா, ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் மற்றும் மிடாஸ் மதுபான தொழிற்சாலை, கோடநாடு எஸ்டேட், ஜெயா டிவி மற்றும் பெரம்பூரில் உள்ள கே.எல்.பி.கன்ஸ்ட்ரக்சன் ஆகிய 8 இடங்களில் நேற்று சோதனை நடந்தது. இந்த சோதனை நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.
கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் 10 போலி கம்பெனிகள் மூலம் ரூ.1012 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், பினாமிகள் பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதும், ஏற்றுமதி நிறுவனம் தொடங்கி பல கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றியதற்கான ஆவணங்களும் சிக்கி உள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யார் யார் பினாமிகள்?: சசிகலாவின் குடும்பத்தின் சொத்துகளை நிர்வாகம் செய்ய இரண்டு வழிகளில் பினாமிகளை தேர்வு செய்துள்ளனர். முதலாவதாக அதிமுக கட்சியில் இல்லாத நபர்களாக இருக்கும் மூன்றாம், நான்காம் வழிச் சொந்தங்கள் பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ஏழை கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள், வாட்ச்மேன், உள்பட கீழ்மட்ட வேலை செய்பவர்கள். இவர்களை பினாமிகளாக தேர்வு செய்யும் முன்பு அவர்களுக்கு வேலை வழங்குவதுபோல் வரச் சொல்லி அவர்களிடம் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை உள்பட அனைத்து அடையாள அட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டு முதலில் அவர்களின் பெயர்களில் சொத்துகளை பதிவு செய்துகொண்டு அதன் பிறகு அந்த சொத்துகளை அவர்களிடமே கொடுத்து நிர்வாகம் செய்ய சொல்வது.
பினாமிகளை விட்டே வீட்டு வேலைகளை பார்ப்பது, சமையல் வேலைகளை செய்வது, இரவு நேர வாட்ச்மேன் உள்பட பல்வேறு வழிகளில் நம்பகமான நபர்களாக இருக்க வேண்டும். இந்தவகை ஆட்களின் பெயர்களில் நிலம், வீடு , சொத்து உள்பட அசையும் அசையா சொத்துகளை வாங்கிப் போட்டுள்ளனர். இந்த நபர்களுக்கு கடைசி வரை தாம் வேலை செய்தது நமது பெயரில் உள்ள சொத்து என தெரியவில்லை. இதற்கான ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
அடுத்ததாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலுள்ள சொத்துக்களை நிர்வாகம் செய்ய கை தேர்ந்த தொழிலதிபர்களை வளைத்துள்ளனர். நம்பகமாக இருக்கும் நபர்களை புதிய தொழில் அதிபர்களாகவும் உருவாக்கி உள்ளனர். இந்தவகை ஆட்களிடம் கோடிக்கணக்கான பணத்தை கொடுத்து புதிய புதிய தொழில்களில் முதலீடு செய்து வந்தது தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது இந்தியா மற்றும் வெளி நாடுகளில் பிரபலமாக இருக்கும் முக்கியமான நபர்களிடம் ஆயிரக்கணக்கான கோடிகளை கொடுத்து பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ததும்
தெரியவந்துள்ளது. இந்த விபரங்கள் அனைத்தும் தற்போது சிக்கியுள்ள ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மிக விரைவில் இவர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை ரெய்டில் சிக்கியது என்ன? 790 இடங்களில் உள்ள அசையா சொத்துக்களின் ஆவணங்கள், 100 கிலோவுக்கும் மேல் தங்க பிஸ்கட்கள் மற்றும் தங்க காசுகள், 740 கோடி மதிப்பிலான வைரகற்கள் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள், இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியா நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் வெளிநாடுகளிலிருந்து கடந்த 6 மாதங்களில் 100 பில்லியன் அளவில் நடந்த பணப் பரிமாற்றத்திற்கான ஆவணம், 30-க்கும்மேற்பட்ட வெளிநாட்டு வங்கிக் கணக்கு ஆவணம், உள்ளூர், வெளி மாநிலங்களில் வைத்துள்ள 70 க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு ஆவணம், இதில் நடந்துள்ள பணப்பரிவர்த்தனைகள், பண நீக்க நடவடிக்கையின்போது மாற்றப்பட்ட புதிய 2000 ஆயிரம் பணக்கட்டுகள், தவிர கிலோக்கணக்கில் தங்க நகைகள் மற்றும் வைர, பிளாட்டின நகைகள் என சிக்கியிருக்கிறது.
இதைவிட தமிழகம் முழுவதும் 6 லட்சம் ஏக்கர் நிலங்கள், காபி, ஏலக்காய், டீ எஸ்டேட் மற்றும் விவசாய, விவசாயம் செய்ய இயலாத நிலங்கள், இதற்கு அடுத்தபட்சமாக 30 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கர்நாடகாவில் வாங்கப்பட்டுள்ள நிலங்களின் ஆவணங்கள், தமிழக எல்லைப் பகுதிகள் மற்றும் பெங்களூர் ,மைசூர் , கூர்க் பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு என பரந்து விரிந்துள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட பல ஆயிரம் கோடிகள் மதிப்பில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கினை பொறுத்தவரை சசிகலா, விவேக், திவாகரன், கிருஷ்ணப்பிரியா , ஷகிலா , பாஸ்கரன், ஜெய் ஆனந்த், கார்த்திக் கேயன், சிவக்குமார், பிரபாவதி, பூங்குன்றன், நடராஜன், ராஜராஜன், கலிய பெருமாள், வடுகநாதன், வெங்கடேசன் உள்பட 20 க்கும் மேற்பட்ட நபர்கள் சசிகலாவின் உறவினர்கள், தவிர மணல் ஆறுமுகசாமி, வக்கீல் செந்தில், உள்பட பல்வேறு நபர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளனர். இந்த சோதனையில் முடிவில், என்ன மாதிரியான வழக்குகளை போடலாம் என அரசு உயர் அதிகாரி கள் ஆலோசனை செய்து வருகின்றனர்.
ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால் அரசு ஊழியரை மையப் புள்ளியாக வைத்து லட்சக்கணக்கான கோடிகளில் ஊழல் செய்ததாக வழக்கு வேறு அளவில் நிற்கும். தற்போது சிக்கியுள்ள எவரும் அரசு ஊழியர்கள் இல்லை. ஆதலால் வெறும் வரி ஏய்ப்பு வழக்கு மட்டும் போட்டால் அபாரதத்தொகையை கட்டிவிட்டு வழக்கிலிருந்து எளிதில் தப்பி விடுவார்கள். எனவே, எளிதில் தப்ப முடியாத பிரிவுகளில் வழக்குப் போட சட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள். வருமான வரிசோதனை முடிந்ததைத் தொடர்ந்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் டாக்டர் சிவகுமார், பூங்குன்றன் ஆகியோர் நேற்று காலை 10.30 மணியளவில் நேரில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தனர்.
பின்னர் கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி 11.30 மணியளவில் நேரில் ஆஜரானார். சுமார் 2 மணி நேரம் இவர்களிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். திவாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் இன்று காலை ஆஜராகி விளக்கம் அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், விவேக் வீட்டில் விசாரணை முடிந்ததும், அவரை தங்களது காரில் ஏற்றிக் கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐடி அலுவலகத்துக்குச்அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, பதில் சொல்ல முடியாமல் அவர் திணறினார். இரவில் அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இன்றும் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* சசிகலா உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் நவம்பர் 9ல் திடீரென வருமான
வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
* தமிழகம், கர்நாடகா
உள்பட 4 மாநிலங்களில்
187 இடங்களில் 1800
அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினார்கள்.
* 2ம் நாளாக 147 இடங்களில் சோதனை நடந்தது. 3வது நாளில் 40 இடத்திலும், 4வது நாளில் 20 இடத்திலும், 5ம் நாளான நேற்று 8 இடத்திலும் சோதனை நடந்தது.