சென்னை: நியூட்ரினோ ஆய்வு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும் என இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர் பாசு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்திற்கு கல்பாக்கம் அணுமின் நிலைய ஆய்வு பணிக்காக வந்துள்ளதாக தெரிவித்தார். கூடங்குளத்தை பொறுத்தவரை 2 அணு உலைகள் செயல்பாட்டில் இருப்பதாகவும், 2 அணு உலைகள் கட்டுமான திட்டத்தின் கீழ் இருப்பதாகவும், மேலும் 2 அணு உலைகளுக்கு அனுமதி பெறப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். நியூட்ரினோ ஆய்வு மையம் குறித்து பேசிய அவர், ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கிடைத்தவுடன் நியுட்ரினோ ஆய்வு மையம் தேனி மாவட்டத்தில் அமைக்கப்படும் என கூறினார்.
ஆனால், சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்களிடம் இருந்து உரிய அனுமதிகளைப் பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும், இசைவு பெறப்பட்டவுடன் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பை சேகர் பாசு வெளியிட்டுள்ளார். மேலும், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிஹந்தை தொடர்ந்து, 2வது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் இன்னும் ஓரிரு மாதத்தில் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.