கலைஞரின் கடந்த ஆட்சியில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை அவர் மாற்றினார். அதாவது, சித்திரை ஒன்றாக இருந்த தமிழ்ப் புத்தாண்டை தை ஒன்றாக மாற்றினார். அடையாளங்கள் அற்ற தமிழ் இனத்தை, தன் தலைவன் அடையாளப் படுத்திவிட்டதாக தி.மு.க. தொண்டர்கள் பெரும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பட்டி தொட்டிகளில் இருந்த கவிஞர்கள் எல்லாம் சென்னைக்கு வந்து, தங்களுக்கு புத்தாண்டைக் கண்டுபிடித்துக் கொடுத்த கலைஞரைப் புகழ்ந்து பேசுவதில் போட்டா போட்டியில் ஈடுபட்டனர்.
அப்படியென்றால், இத்தனைக் காலம் நம் அப்பனும் தாத்தனும் கொண்டாடிக்கொண்டு இருந்த புத்தாண்டு, போலியான தினமா? அந்தத் தினம் பொருள் அற்ற தினமா? இதற்கு முன்பும் கலைஞர் பல முறை தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்திருக்கிறார். அப்போதெல்லாம், புத்தாண்டை மாற்ற வேண்டும் என்று ஏன் அவர் புத்திக்கு உதிக்கவில்லை? இப்போது ஏன் மாற்ற வேண்டும்? தற்சமயம் அதற்கான அவசியம் என்ன? இப்படியான ஆயிரம் கேள்விகள் தமிழ் மக்களிடம் உள்ளன.‘சித்திரை வந்தால் நித்திரை போகும்!’ என்பார்கள் எங்கள் கிராமத்தில். பகல் பொழுதில் வெயில், விறகு அடுப்புபோல எல்லோரையும் வாட்டும். இரவு பொழுதில் நிலவு. ஊரே பாலில் நனைத்து எடுத்ததுபோல பளபளப்பாக இருக்கும். அந்த நிலா பொழுதில் சிறுவர்கள் ஒளிந்து விளையாடுவார்கள். பகல் பொழுதில் பெருசுகள் எல்லாம் மரத்தடிகளில் உட்கார்ந்து பஞ்சாயத்து பண்ணிக்கொண்டும், பஞ்சாங்கத்தைப் பார்த்துக்கொண்டும், பால்யத்தைப் பற்றி பேசிக்கொண்டும் இருப்பார்கள். அந்த வருடத்துக்கான பருவநிலை கணித்து, வெள்ளாமை விளைச்சல் எல்லாம் எப்படியிருக்கும் என்று விவசாயப் பெருமக்களிடம் பேசிக்கொண்டு இருப்பார்கள் பண்டிதர்கள். பெண்கள் தாயமும், பல்லாங்குழியும், பாண்டியும் விளையாடி பொழுதுகளை இனிமையாகக் கழிப்பார்கள்.
இந்த நாளுக்காக காத்திருந்தவர்கள்போல சித்திரை முதல் நாளில் விவசாயப் பெருமக்கள் தங்களின் மாடுகளைக் குளிப்பாட்டி, ஏர் கலப்பை, மண்வெட்டி போன்ற விவசாயச் சாதனங்களைச் சுத்தம் செய்வார்கள். ஊரே ஓரிடத்தில் கூடும். விவசாயிகள் தங்களின் மாடுகளைக் கலப்பையில் பூட்டி, நிலத்தை உழுது, விதைகளைத் தூவி வெள்ளோட்டம் பார்ப்பார்கள். தங்களின் உபகரணங்கள் நன்றாக இருக்கிறதா? தங்களின் விதைப் பண்டங்கள் வீரியமுடன் இருக்கிறதா? என ஒத்திகை பார்ப்பார்கள். மண்ணையும், மாடுகளையும், விதைகளையும், கலப்பையையும் கடவுளாக வணங்கும் இந்தத் திருவிழாவை, ‘நல்லேர் கட்டுதல்’ என ஊரே கொண்டாடும்.
விவசாயிகள் தங்கள் பிள்ளைகளுக்கு ஏர் பிடிக்கக் கற்றுக் கொடுத்து, இன்பம் காணும் வைபவங்கள் நடைபெறும். இப்படி இந்த நாளை, கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், தங்களின் குலத்தொழிலைத் தங்களின் சந்ததிகளுக்கு கைமாற்றும் விழாவாகக் கொண்டாடுவார்கள்.
பார்க்கும் வேலையில் லாபம்-நட்டம் பார்க்கக்கூடாது என்ற நல்லறிவையும், மகனையும் மண்ணையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கச் செய்யும் பக்குவத்தையும், பிறர் வாட பாவச்செயல் செய்யக்கூடாது என்ற வாழ்வியல் சூத்திரத்தையும், காளியம்மனும் மாரியம்மனும் நம் மண்ணின் மாற்று உருவங்கள் என்ற மகத்துவத்தையும் சொன்னது சித்திரைப் பெருநாள்தான். இப்படி என்னைப் போன்ற தமிழ் மக்களின் வாழ்வில் ஒன்றாக இருந்த தமிழ்ப் புத்தாண்டை திடீரென மாற்றினால் எப்படி இருக்கும்..? இந்தத் திடீர் மாற்றத்தை என்னால் ஜீரணித்துகொள்ள முடியவில்லை.
தமிழ்ப் புத்தாண்டு மாற்றத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டேன். ‘இந்த வழக்கு வெறும் பிரபலத்துக்குப் போடப்பட்டதாகத் தெரிகிறது. இனம் சார்ந்த விழா நாட்களை மாற்றும் உரிமை அரசுக்கு இருக்கிறது. மேலும், இதுபோன்ற வழக்குகளைத் தொடராமல் இருப்பதற்காக மனுதாரருக்கு 10,000/- ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது’ என்று தீர்ப்பு கூறினார்கள்.
நான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தேன். தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வேலை பார்த்தபோதே அவருக்கு என்னை நன்றாகத் தெரியும். என்னுடைய வாதங்களையும், எதிர்த்தரப்பு அரசாங்கத்தின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, எனக்கு விதிக்கப்பட்ட 10,000 ரூபாய் அபராதத்தை ரத்து செய்ததோடு, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம், கலாசாரப் பின்னணியில் மீண்டும் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார். காலம் ஓடியது. ஆட்சி மாறியது. ஜெயலலிதா மீண்டும் சித்திரை முதல் தேதியைப் புத்தாண்டாக மாற்றினார்.
தமிழ்ப் புத்தாண்டை மட்டும் அல்ல; கலைஞர் கொண்டுவந்த அனைத்துத் திட்டங்களையும் ஜெயலலிதா மாற்றினார். சமச்சீர் கல்வி சரியில்லை என்று மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தினார். கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை மாற்றினார். புதியதாகக் கட்டப்பட்ட சட்டமன்றத்தை மாற்றினார். நூலகத்தை மாற்ற முயல்கிறார். நாம் நடத்துகிற ஆட்சியில் 5 ஆண்டுகளுக்கு மேல் நம்மை வைக்கமாட்டார்கள் என்பதும், ஆட்சி மாறினால் தன் பெயர் தாங்கிய அனைத்து காட்சிகளையும் ஜெயலலிதா மாற்றுவார் என்பதும் கலைஞருக்கு நன்றாகத் தெரியும். அப்படி மாற்றும்போதுதானே மக்கள் அவதிப்படுவார்கள். அவர்களுக்குத் தொல்லைகள் வரும். அப்போதுதானே மக்களின் பார்வை நம் மீது திரும்பும். நாம் செய்தது சரி என்று நம்புவார்கள். நம்மைப் பற்றி நல்ல எண்ணங்களும் அபிப்பிராயங்களும் மக்கள் மனதில் தோன்றும் என்கிற ‘அரசியல் லாப’ ஆசைதான் இதுமாதிரி கேடுகளை விளைவிக்கிறது.
அதேபோல கண்ணகி சிலையை தான் அகற்றினால், கலைஞர் மீண்டும் அதே இடத்தில் சிலை வைப்பார் என்று ஜெயலலிதாவுக்கும் தெரியும். ஆனாலும், இந்தப் பொருள் அற்ற மாற்றத்தைச் செய்துகொண்டே இருப்பார்கள் இருவரும். அதிகம் படித்த மக்களும், அறிவார்ந்த மக்களும் அதிகம் வாழும் தமிழ்நாட்டில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரங்கேற்றும் இந்த அசிங்கங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.
எங்கெங்கு காணினும் என் முகத்தையும், என் சாதனைகளையும் பாருங்கள் என, கலைஞரும் ஜெயலலிதாவும் செய்யும் சுயப் பிரசாரங்கள்தான் இந்த நாட்டையே குட்டிச்சுவராக்குகின்றன. இந்திய ஜனநாயக நாட்டில், தான் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் என்பதை மறந்து, தான் பேரரசர் என்ற நினைப்பு கலைஞருக்கு. அதேபோல் தான் ஒரு பேரரசி என்ற நினைப்பு ஜெயலலிதாவுக்கு.
பொதுவாகவே, கலைத் துறையைச் சார்ந்தவர்களுக்குப் பிறர் பாராட்டுக்கு ஏங்கும் குணம் இருக்கும். சின்னச் சின்ன பாராட்டுகளுக்காக ஏங்கித் தவிப்பார்கள். கைதட்டும் ஓசையைக் கேட்கக் காத்து நிற்பார்கள். போஸ்டர் மூலம், கைதட்டுகள் மூலம், வாழ்க கோஷங்கள் மூலம் ஒவ்வொரு நாளும் மக்களிடம் போய்ச் சேர விரும்புவார்கள். யாராவது புகழ்ந்தால் போதும், பெரிய பூமாலைத் தங்களின் தோள்களை அலங்கரித்துவிட்டதைப்போல ஆனந்தக் கூத்தாடுவார்கள். எந்தக் காட்சிக்கு பார்வையாளன் சிரிப்பான், எந்தக் காட்சிக்கு ரசிகன் அழுது ஆர்ப்பரிப்பான் என்று கலைஞர்களுக்கு நன்றாகத் தெரியும் அல்லவா!
கலைஞர்கள், ஆட்சியாளர்களைக் கேள்வி கேட்பார்கள். கேலியும் கிண்டலும் செய்து அவர்களின் முகத்திரையைக் கிழிப்பார்கள். சாப்ளின் தன் கேலி, கிண்டல்களால் சர்வ வல்லமை பொருந்திய ஹிட்லரையே உலகின் தலைசிறந்தக் கோமாளியாகக் காட்டினார். எம்.ஆர்.ராதாவும் என்.எஸ்.கே-யும் தங்களின் நடிப்பு மூலம் சமூகத்தையும் ஆட்சியாளர்களையும் தலையில்குட்டினார்கள். அண்ணாவும் கலைஞரும் தங்களின் வசனங்கள் மூலம் இந்தச் சமூகத்தைச் சாடியவர்கள்தான். இவர்கள் ஆட்சியாளர்களாக மாறியதுகூட மக்கள் நலன்சார்ந்த எழுத்தாலும் பேச்சாலும்தான். ‘ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி’ என்கிற வாக்குறுதியில் விழத்தொடங்கிய மக்கள், இன்றைக்கு இலவச தொலைக்காட்சிக்கும் இலவச குக்கருக்கும் ஏங்கிக் கிடக்கிறார்கள். ஆடு, மாடுகளுக்காக கால்நடைகளைவிடக் கேவலமாக அலைந்து திரிகிறார்கள். மக்களின் இந்த அவலத்தையே தங்களின் சாதனைகளாக்கி நகரத்தில் விளம்பர போர்டுகளாக்கும் இன்றைய அரசியல் தலைவர்களை என்னவென்று சொல்வது?
இவர்களை கேள்விக் கேட்பதற்கு ஆளில்லை. இங்கு நடக்கும் கேடுகளைப் பார்த்துக் கிளர்ந்து எழ யாருக்கும் துணிவில்லை. எல்லோருக்கும் குடும்பம் இருக்கிறது என்கிற குருட்டு பயம். அதனால்தான் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்ப்பவர்களாகவும், விலகிப் போகிறவர்களாகவும் நாம் மாறிவிட்டோம்.