அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்
Life History நடிகர்

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன். சிறந்த எழுத்தாளர் மற்றும் கவிஞரான ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவர்களின் மகனும், இந்தித் திரையுலகில் நான்கு தசாப்தங்களாக தனது பங்களிப்பை அளித்து, ‘சூப்பர் ஸ்டார்’ என்று போற்றப்படுபவர், அமிதாப் பச்சன் அவர்கள். இந்தியாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில், முதல் இடத்தைத் தொடர்ந்து பதினாறு ஆண்டுகள் பிடித்திருப்பவரும் இவரே. திரையுலகில், நடிகர் என்ற ஒரே இலக்கோடு நிறுத்திக் கொள்ளாமல், பின்னணிப் பாடகர், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவர், அமிதாப் பச்சன் அவர்கள். எண்ணற்ற ‘சர்வதேச விருதுகள்’, ‘பத்மஸ்ரீ விருது’, ‘பத்ம விபூஷன் விருது’, ‘4 முறை தேசிய விருதுகள்’, ’14 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள்’ என 180 விருதுகளைத் தனது திரையுலக வாழ்வில் பெற்று, இன்றளவும் ஹிந்தித் திரையுலகில் செயல்பட்டு கொண்டிருக்கிறார். இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கிய நபர்களில் ஒருவராகவே மாறிவிட்ட அமிதாப் பச்சன் அவர்கள், 40 முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஒரே நடிகரென்ற பெருமைக்குரியவர். திரையுலகப் பின்னணியைத் தவிர, 1984 முதல் 1987 வரை இந்தியப் பாராளுமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராகவும் இருந்தார். இந்திய சினிமா வரலாற்றில் மிகப் பெரிய செல்வாக்கு மிகுந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழும் அமிதாப் பச்சன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரையுலகில் அவர் ஆற்றிய சாதனைகள் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: 11 அக்டோபர், 1942 (வயது 70)

பிறப்பிடம்: அலகாபாத், ஐக்கிய மாகாணங்கள், பிரிட்டிஷ் இந்தியா

பணி: நடிகர், தயாரிப்பாளர், பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர், அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

அமிதாப் பச்சன் அவர்கள், இந்தியாவின் வட மத்திய மாநிலமான உத்திர பிரதேசத்தில் உள்ள அலகாபாத்தில் ஹரிவன்ஷ் ராய் பச்சன் மற்றும் தேஜி பச்சன் தம்பதியருக்கு மகனாக அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி, 1942 ஆம் ஆண்டில் பிறந்தார். அவருக்கு அஜிதாப் என்று ஒரு தம்பியும் இருக்கிறார்.

அமிதாப் பெயர் காரணம்

அவரது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன், ஒரு தலைச்சிறந்த ஹிந்தி எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். அமிதாப் அவர்களின் இயற்பெயர், ஸ்ரீவஸ்தவா. ஆரம்பத்தில் அவருக்கு ‘இன்குய்லாப்’ என்று பெயரிட்ட அவரது தந்தை, அவரது நண்பரின் அறிவுரைப்படி, அவருக்கு ‘அமிதாப்’ என்று பெயர் சூட்டினார். ‘அமிதாப்’ என்றால் ‘நிலையான ஒளி’ என்று அர்த்தம். ‘பச்சன்’ என்ற பெயரில் அவரது தந்தை வெளியிட்ட படைப்புகள் வெற்றிப் பெற்றதால், அதுவே அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய குடும்பப் பெயராக மாறியது. அமிதாப்பின் தந்தை 2007லும், அவரது தாயார் 2003லும் இயற்கை எய்தினர்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும் 

அமிதாப் பச்சன் அவர்கள், தனது பள்ளிப்படிப்பை நைனிடாலில் உள்ள ஷெர்வுட் கல்லூரியில் முடித்தார். பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்தப் பின்னர், அவர் தில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் கிரோரி மால் கல்லூரி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தனது கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு, அவருக்குக் கொல்கத்தாவில் உள்ள ஷா வாலஸ் என்ற கப்பல் நிறுவனத்தில் வேலைக் கிடைத்ததால், அவர் அங்கு இடம்பெயர்ந்தார். அதன் பின்னர், வேறொரு கப்பல் நிறுவனத்தில் சரக்குத் தரகராகப் பணிபுரிந்தார். அவரது இளம் வயதிலிருந்தே, சினிமா மீது பற்றுடையவராக இருந்ததால், சினிமாவில் முயற்சி செய்வதற்காக மும்பைக்குச் சென்றார்.

திரையுலக வாழ்க்கை

1969ல், ‘புவன் ஷோம்’ என்ற ‘தேசிய விருது’ பெற்ற திரைப்படத்தில் விவரணையாளராகப் பணியாற்றினார். பின்னர், அதே ஆண்டில், ‘சாத் ஹிந்துஸ்தானி’ என்ற படத்தில் முதல் முறையாக திரையில் அறிமுகமானார். அப்படம், அவருக்கு ‘சிறந்த புதுமுகத்திற்கான தேசிய திரைப்பட விருதினைப்’ பெற்றுத்தந்தது. ஆகவே, அவருக்குத் தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. அவர் நடித்தத் திரைப்படங்களின் பட்டியல் பின்வருமாறு: ‘பாம்பே டாக்கி’ (1970), ‘பர்வானா’ (1971), ‘ஆனந்த்’ (1971), ‘குட்டி’ (1971), ‘பியார் கி கஹானி’ (1971), ‘பந்தே ஹாத்’ (1973), ‘ஜன்ஜீர்’ (1973), ‘கெஹ்ரி சால்’ (1973), ‘அபிமான்’ (1973), ‘சுப்கே சுப்கே’ (1975), ‘ஃபரார்’ (1975), ‘மிலி’ (1975), ‘தீவார்’ (1975), ‘ஷோலே’ (1975), ‘தோ அஞ்சானே’ (1976), ‘கபி கபி’ (1976), ‘ஹேராஃபேரி’ (1976), ‘அலாப்’ (1977), ‘சரண்தாஸ்’ (1977), ‘அமர் அக்பர் அந்தோனி’ (1977), ‘ஷத்ரன்ஜ் கே கிலாரி’ (1977), ‘அதாலத்’ (1977), ‘இமான் தரம்’ (1977), ‘கூன் பசினா’ (1977), ‘பர்வரிஷ்’ (1977), ‘கஸ்மே வாடே’ (1978), ‘திரிசூல்’ (1978), ‘டான்’ (1978), ‘தி கிரேட் கேம்ப்லெர்’ (1979), ‘கோல்மால்’ (1979), ‘மன்ஸில்’ (1979), ‘தோஸ்தானா’ (1980), ‘ராம் பல்ராம்’ (1980), ‘ஷான்’ (1980), ‘கமாண்டர்’ (1981), ‘நசீப்’ (1981), ‘தேஷ் பிரேமி’ (1982), ‘நமக் ஹலால்’ (1982), ‘சக்தி’ (1982), ‘நச்தீக்’ (1983), ‘அந்தா கானூன்’ (1983), ‘மகான்’ (1983), ‘கூலி’ (1983), ‘ஃபிலிம் ஹை ஃபிலிம்’ (1983), ‘இன்குய்லாப்’ (1984), ‘ஷராபி’ (1984), ‘கேரஃப்தார்’ (1985), ‘மர்த்’ (1985), ‘ஆக்ரீ ராஸ்தா’ (1986), ‘கோன் ஜீத்தா கோன் ஹாரா’ (1987), ‘சூர்மா போபாலி’ (1988), ‘ஷாகின்ஷா’ (1988), ‘ஹீரோ ஹீராலால்’ (1988), ‘கங்கா ஜமுனா சரஸ்வதி’ (1988), ‘பட்வாரா’ (1989), ‘தூஃபான்’ (1989), ‘ஜாதுகர்’ (1989), ‘மெயின் ஆஜாத் ஹூன்’ (1989).

மேலும் அவர், ‘அக்நீபத்’ (1990), ‘க்ரோத்’ (1990), ‘ஆஜ் கா அர்ஜுன்’ (1990), ‘ஹம்’ (1991), ‘அஜூபா’ (1991), ‘இந்திரஜீத்’ (1991), மேரே சப்னே’ (1996), ‘ம்ரித்யூதத்தா’ (1997), ‘மேஜர் சாப்’ (1998), ‘படே மியான் சோட்டே மியான்’ (1998), ‘லால் பாட்ஷா’ (1999), ‘சூரியவன்ஷம்’ (1999), ‘ஹிந்துஸ்தான் கி கசம்’ (1999), ‘கோஹ்ரம்’ (1999), ‘ஹலோ பிரதர்’ (1999), ‘பீவி நம்பர் 1’,  (1999), ‘மொகபத்தீன்’ (2000), ‘ஏக் ரிஷ்தா: தி பாண்ட் ஆஃப் லவ் ‘ (2001), ‘லகான்’ (2001), ‘அக்ஸ்’ (2001), ‘கபி குஷி கபி கம் …'(2001), ‘ஆன்கேன்’ (2002), ‘ஹம் கிஸிஸே கம் நஹி’ (2002), ‘அக்னி வர்ஷா’ (2002), ‘காந்தே’ (2002), ‘குஷி’ (2003), ‘அர்மான்’ (2003), ‘மும்பை சே ஆயா மேரா தோஸ்த்’ (2003), ‘பூம்’ (2003), ‘பாக்பன்’ (2003), ‘ஃபன்டூஷ்’ (2003), ‘காக்கீ’ (2004), ‘ஏத்பர்’ (2004), ‘ருத்ராக்ஷ்’ (2004), ‘இன்சாஃப்’ (2004), ‘தீவார்’ (2004), ‘வீர்-ஜாரா’ (2004), ‘அப் தும்ஹாரே ஹவாலே வதான் சாத்தியோ’ (2004), ‘பிளாக்’ (2005), ‘பன்டி ஆர் பப்லி’ (2005), ‘பரிநீதா’ (2005), ‘பஹேலி’ (2005), ‘சர்க்கார்’ (2005), (2005), ‘தில் ஜோ பி கஹே’ (2005), ‘ஏக் அஜ்னபீ’ (2005), ‘அம்ரிதாதாரே’ (2005), ‘ஜமானத்’ (2006), ‘ஃபேமிலி – டைஸ் ஒப் ப்லட்’ (2006), ‘கபி அல்விதா நா கெஹனா’ (2006), ‘பாபுல்’ (2006), ‘ஏகலவ்யா: தி ராயல் கார்ட்’ (2007), ‘நிஷப்த்’ (2007), ‘சீனி கம்’ (2007’ஜூம் பராபர் ஜூம்’ (2007), ‘ராம் கோபால் வர்மா கி ஆக்’ (2007), ‘ஓம் சாந்தி ஓம்’ (2007), ‘ஜோதா அக்பர்’ (2008), ‘பூத்நாத்’ (2008), ‘சர்க்கார் ராஜ்’ (2008), ‘தி லாஸ்ட் லியர்’ (2008), ‘காட் துசி கிரேட் ஹோ’ (2008), ‘யார் மேரி ஜிந்தகி’ (2008), ‘தில்லி 6’ (2009), ‘அலாதின்’ (2009), ‘பா’ (2009), ‘ரான்’ (2010), ‘மிஸ்டர் பட்டி ஆன் சுட்டி’ (2010), ‘தீன் பட்டி’ (2010), ‘கந்தகார்’ (2010), ‘புத்தா … ஹோகா தேரா பாப் ‘(2011), ‘ஆரக்ஷன்’ (2011), ‘டிப்பார்ட்மென்ட்’ (2012), ‘போல் பச்சன்’ (2012), ‘தி கிரேட் கேட்ஸ்பை’ (2013), ‘சத்தியாக்கிரகம்’ (2013), ‘பூத்நாத் 2’ (2013), மற்றும் ‘ஜமானத்’ (2013).

தொலைக்காட்சி வாழ்க்கை

‘ஹூ வாண்ட்ஸ் டு பிகம் எ மில்லினர்?’ என்ற பிரிட்டிஷ் கேம் ஷோவைத் தழுவி உருவான ‘கோன் பனேகா கரோர்பதி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் அவர்கள், 2000 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆண்டு நவம்பர் மாதம் வரைத் தொகுத்து வழங்கினார். அதன் பின்னர், அவர் நோய்வாய்ப்பட்டதால், அதிலிருந்து விலகிக் கொண்டார்.

அரசியல் வாழ்க்கை

ராஜீவ் காந்தியுடனான நீண்ட நாட்கள் இருந்த நட்பை கௌரவிக்கும் விதமாக, திரையுலக வாழ்வில் சற்று இடைவெளி விட்டு, 1984ல் அரசியலில் இறங்கினார், அமிதாப் பச்சன் அவர்கள். அலகாபாத்தில் 8 வது மக்களவைப் பொதுத் தேர்தலில், உத்தர பிரதேச முன்னால் முதல்வர் ஹெச். என். பகுகுணா அவர்களை எதிர்த்துப் போட்டியிட்ட அவர், தேர்தல் வரலாற்றிலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். வெற்றிப்பெற்று, பொறுப்பேற்ற அவர், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் 1987ல் ராஜினாமா செய்தார்.

இல்லற வாழ்க்கை 

அமிதாப் பச்சன் அவர்கள், பிரபல ஹிந்தித் திரைப்பட நடிகையான ஜெய பாதுரியுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அவர்களது ஜோடி பெரிதும் பேசப்பட்டது. அவர்கள் இணைந்து நடிக்கும் போது, அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்ததால், அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் 3ஆம் தேதி ஜூன் மாதம், 1973 ஆம் ஆண்டில் மணமுடித்தனர். இவர்களுக்கு ஸ்வேதா மற்றும் அபிஷேக் என இரு குழந்தைகள் பிறந்தனர். அபிஷேக் பச்சனும் ஒரு பிரபல நடிகராவார். அவர் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராயைத் திருமணம் செய்துகொண்டார்.

விருதுகளும், அங்கீகாரங்களும்

  • இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான ‘பத்ம பூஷனை’ 2001 ஆம் ஆண்டிலும், நான்காவது உயரிய விருதான ‘பத்மஸ்ரீயை’ 1984 ஆம் ஆண்டிலும் வென்றார்.
  • கவுரவ டாக்டர் பட்டத்தை – ஜான்சி பல்கலைக்கழகத்திலிருந்து 2004 ஆம் ஆண்டிலும், தில்லி பல்கலைக்கழகத்திலிருந்து 2006 ஆம் ஆண்டிலும், ஆஸ்திரேலியாயாவில் உள்ள குவின்ஸ்லாந்து யுனிவர்சிட்டி ஆஃப் டெக்னாலஜியில் இருந்து 2011 ஆம் ஆண்டிலும் பெற்றார்.
  • தேசிய திரைப்பட விருதை 1970 ஆம் ஆண்டில், ‘சாத் ஹிந்துஸ்தானி’ படத்திற்காகவும், 1990 ஆம் ஆண்டில், ‘அக்நீபத்’ படத்திற்காகவும், 2005 ஆம் ஆண்டில், ‘பிளாக்’ படத்திற்காகவும், 2009 ஆம் ஆண்டில், ‘பா’ படத்திற்காகவும் பெற்றார்.
  • ஃபிலிம்ஃபேர் விருதுகளை 1971ல் ‘ஆனந்த்’ படத்திற்காக, 1973ல் ‘நமக் ஹரம்’ படத்திற்காக, 1977ல் ‘அமர் அக்பர் ஆண்டனி’ படத்திற்காக, 1978ல் ‘டான்’ படத்திற்காக, 1990ல் பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது (முதல் பெற்றவர்), 1991ல் ‘ஹம்’ படத்திற்காக, 2000 ஆம் ஆண்டில், மில்லேனியம் பிலிம்பேர் சூப்பர் ஸ்டார், 2000 ஆம் ஆண்டில், ‘மொகபத்தீன்’ படத்திற்காக,     2001ல், ‘அக்ஸ்’ படத்திற்காக, 2003ல், ‘பிலிம்பேர் பவர் விருதும்’, 2005ல் ‘பிளாக்’ படத்திற்காக இரு விருதுகளும், 2010ல், ‘பா’ படத்திற்காக, மற்றும் 2011ல்,  இந்திய திரைப்பட துறையில் 40 ஆண்டுகள் வெற்றிகரமாக முடித்ததற்காக ‘ஃபிலிம்பேர் சிறப்பு விருதும்’ பெற்றார்.

காலவரிசை

1942: அலகாபாத்தில் ஹரிவன்ஷ் ராய் பச்சன் மற்றும் தேஜி பச்சன் தம்பதியருக்கு மகனாக அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி, 1942 ஆம் ஆண்டில் பிறந்தார்.

1969: ‘புவன் ஷோம்’ என்ற ‘தேசிய விருது’ பெற்ற திரைப்படத்தில் விவரணையாளராகப் பணியாற்றினார்.

1969: ‘சாத் ஹிந்துஸ்தானி’ என்ற படத்தில் முதல் முறையாக திரையில் அறிமுகமானார்.

2000 – 2005: ‘கோன் பனேகா கரோர்பதி’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

1984: அரசியலில் இறங்கினார்.

1984: இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீயை’ வென்றார்.

1987: மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

2001: இந்தியாவின் மூன்றாவது உயரிய விருதான ‘பத்ம பூஷனை’ வென்றார்

cairocorps