Life History ஆன்மீக தலைவர்கள்

பாபா ராம்தேவ்

மூச்சுப் பயிற்சி, யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறை, அரசியல் எனப் பல துறைகளில் செயல்பட்டு, கறுப்புப் பணத்திற்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருபவர், பாபா ராம்தேவ் அவர்கள். ஒரு சாதாரண மனிதராகப் பிறந்து, சன்யாசம் பூண்டு, யோகா முகாம்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமாக ஆரோக்யத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர், இந்தியாவில் ஊழலுக்கு எதிராகப் போராடும் அமைப்பான ‘பாரத் சுவாபிமான் ஆந்தோலனை’ நிறுவியவர். ‘இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும்’ என்றும், ‘இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும்’ என்ற கொள்கைகள் உடைய அவர், ‘சுதேசி சிக்சா’ மற்றும் ‘சுதேசி சிகித்சா’ என்ற முழக்கங்களுடன் தமது கொள்கைகளைப் பரப்பி வருகிறார். பல உண்ணாவிரதங்களையும், போராட்டங்களையும் நடத்தி, ஊழலுக்கு எதிராகவும் கருப்புப் பணத்திற்கு எதிராகவும் போராடி வரும் அவர் நடத்தும் யோகா வகுப்புகளில் பெரும் திரளான மக்கள் பங்கு பெறுகின்றனர். சமூக நலனில் அக்கறை மிகுந்தவராகத் திகழும் பாபா ராம்தேவ் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது போராட்டங்களையும், யோகா பயிற்சிகளையும் பற்றி மேலுமறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: 25 டிசம்பர், 1965

பிறப்பிடம்: அலிப்பூர், மகேந்திரகர், அரியானா, இந்தியா

பணி: ஆன்மீகத் தலைவர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

பாபா ராம்தேவ் அவர்கள், இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்திலிருக்கும் மஹேந்திரகார் மாவட்டத்தில் உள்ள அலிப்பூர் என்னும் கிராமத்தில், ராம் நிவாஸ் யாதவ் மற்றும் குலாபோ தேவி தம்பதியருக்கு மகனாக டிசம்பர் மாதம் 25 ஆம் தேதி, 1965 ஆம் ஆண்டில் பிறந்தார். அவரது இயற்பெயர் ராமகிருஷ்ண யாதவ்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

அலிப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். எட்டாம் வகுப்பு வரை, அப்பள்ளியில் பயின்ற அவர், பின்னர் குருகுலத்தில் சேர்ந்தார். அவர், பல்வேறு குருக்குலங்கில் சேர்ந்து, இந்திய இலக்கியம், யோகா மற்றும் சமஸ்க்ருதம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்தார். குருக்குலங்களில் சன்யாசிகளிடம் பாடம் கற்ற அவர், அவர்களைப் போலவே மாற விரும்பினார். இதன் வெளிப்பாடாக, அவர் காவி உடைத் தரித்து, துறவறம் பூண்டார். ராமகிருஷ்ண யாதவாகப் பிறந்த அவர், ‘பாபா ராம்தேவ்’ என்று அன்றுமுதல் அழைக்கப்பட்டார்.

துறவியாக பாபா ராம்தேவ்

ஹரியானாவில் உள்ள ஜிந்த் மாவட்டத்தில் இருக்கும் கல்வா குருகுலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அவர் அங்குள்ள கிராம மக்களுக்கு இலவச யோகா பயிற்சி அளித்தார். பின்னர், பண்டைய இந்திய வேதங்களைக் கற்கும் நோக்கமாக அவர் ஹரித்வாரில் உள்ள குருகுல் காங்க்ரி விஸ்வவித்யாலயாவிற்குச் சென்றார். அங்குப் பல ஆண்டுகள் செலவிட்ட அவர், அரபிந்தோ கோஷின் ‘யோகிக் சதன்’ என்ற புத்தகத்தைப் படித்தார். அரிய புத்தகமான ‘யோகிக் சதனை’ படித்தப் பிறகு, அவர் இமயமலைக் குகைகளுக்குச் சென்று, சுய கட்டுப்பாடு மற்றும் தியானம் போன்றவற்றில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டார்.

யோகாவும், ராம்தேவும்

சுய கட்டுப்பாடு மற்றும் தியானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர், ‘திவ்யா யோக் மந்திர் டிரஸ்ட்’ என்ற அமைப்பை, ஆச்சார்யா நிதின் சோனி அவர்களின் நிறுவனத்துடன் இணைந்து நிறுவினார். முதன்முதலில், அவரது யோகா பயற்சி ‘ஆஸ்தா தொலைக்காட்சியில்’ ஒளிபரப்பானது. இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்ததால், அவரைப் பலரும் பின்பற்றத் தொடங்கினர். அவர், திரைப்படப் பிரமுகர்களான அமிதாப் பச்சன், ஷில்பா ஷெட்டி, மற்றும் பலருக்கும் யோகா கற்றுக் கொடுத்திருக்கிறார். மேலும், அவர் பிரிட்டிஷ் பாராளுமன்றத்திலும், முஸ்லீம் மத குருக்களின் கல்லூரியிலும் யோகா பயிற்சியளித்திருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் போன்ற பல நாடுகளில் யோகா பயிற்சியளித்து பிரசித்தி பெற்ற அவரின் பதஞ்சலி யோகபீடத்திற்கு, ஸ்காட்லான்டடில் ஒரு தீவை, இந்தியாவில் இருந்து சென்று அங்கு குடிபெயர்ந்த தம்பதியர்கள் பரிசாக்கினர். மேலும், அவரது பிராணயாமா பயிற்சிகளாலும், ஆயுர்வேத முறைகளாலும் பல நோய்கள் குணமடைவதை உணர்ந்த அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம், யோகா மற்றும் ஆயுர்வேதம் சம்பந்தமான பாடங்களை அறிமுகப்படுத்தியது.

அரசியல் மற்றும் சமூக பிரச்சாரங்கள்

பாபா ராம்தேவ் அவர்கள் ஊழலுக்கு எதிராகவும், கருப்புப் பணத்திற்கு எதிராகவும் பல போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் நடத்தியும், ஈடுபட்டும் உள்ளார். அவர், 2011ஆம் ஆண்டில் நடந்த ‘ஜன லோக்பால்’ போராட்டத்தில் கலந்து கொண்டார்.

பிப்ரவரி மாதம், 27 ஆம் தேதி 2011 ஆம் ஆண்டில், ஊழலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் 1 லட்சம் மக்கள் கொண்ட பெரிய பேரணியை வழிநடத்தினார். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கவும், ஊழலைக் கட்டுப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜூன் 4, 2011 முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க விருப்பதாக அறிவித்துள்ளார். மேலும், அவர் அரசுக்கு, கருப்புப் பணத்தை வெளிக்கொணரவும், ஒழிக்கவும் அவர் பல வழிகளைப் பரிந்துரைத்தார்.இதனால், போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர், 15 நாட்கள் கழித்து, விடுதலை செய்யப்பட்டார். இதன் பின்விளைவாக, ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி, 2011 ஆம் ஆண்டில் அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். பெங்களூர், மும்பை, ஹைதெராபாத், ஜம்மு மற்றும் லக்னோ போன்ற இடங்களில் போராட்டங்களை நிகழ்த்திய அவர், பல சமூக ஆர்வலர்களின் விண்ணப்பங்களை ஏற்று 9 வது நாள் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

சர்ச்சைகளும், விமர்சனங்களும்

பாபா ராம்தேவ் அவர்களின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து, அவர் மீதும், ஆச்சார்யா பாலகிருஷ்ணா மற்றும் பதஞ்சலி யோகா டிரஸ்ட் மீதும் பல சர்ச்சைகளும், விமர்சனங்களும் எழுந்தன.

மேலும், வரி ஏய்ப்பு செய்ததாகவும், அவர் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட பொருள்களை, இறக்குமதி செய்ததாகவும், ஆச்சார்யா பாலகிருஷ்ணா அவர்கள், நேபாளில் இருந்து இந்தியாவிற்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த நேபாளி குற்றவாளி என்றும், அவர் ஆயுத சட்டம், 1959 ஐ மீறியுள்ளார் என்றும் பல குற்றங்கள் அவர்கள் இருவரின் மீதும் சாட்டப்பட்டது.

மேலும், இவர் தயாரித்த ஆயுர்வேத மருந்துகளில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புக்கழிவுகள் இருந்ததாக, மக்களவை உறுப்பினர் பிருந்தா காரத் கூறினார். பின்னர், அரசு ஆய்வகங்களில் இதனை சோதித்து, ஆயுர்வேத மருந்துகளில் வெறும் மூலிகைகள் மட்டுமே இருப்பதாகக் கருத்துத் தெரிவித்தது.