பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்து மதத்தலைவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆவார். இந்து சமயத்தின் தீவிர சிந்தனையாளராகவும், உலகம் போற்றும் தத்துவவாதியாகவும் வாழ்ந்தவர். இந்து சமுதாயத்தில் இருந்து வரும் தீமைகளைக் களையவும், வேத சமுதாயத்திற்கு புத்துயிர் அளிக்கவும், இந்து மதத்தை மெருகேற்றிப் புதுப்பொலிவுடன் மிளிரச் செய்யும் “ஆரிய சமாஜம்” என்னும் அமைப்பை 1875 ஆம் ஆண்டில் உருவாக்கினார். சிறு வயதிலேயே சமய நம்பிக்கைகள் குறித்து பகுத்தறிவுடன் பல கேள்விகள் எழுப்பியது மட்டுமல்லாமல், இந்த உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் இறைவனைக் காணலாம் என்ற தத்துவத்தை வலியுறுத்தியவர். இல்லற வாழ்வினைத் துறந்து, கடைசி காலம் வரை இந்து சமுதாயத்தின் தீவிர சிந்தனையாளராக வாழ்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் வாழ்க்கை மற்றும் ஆன்மீகப் பணிகளைப் பற்றி விரிவாகக் காண்போம்.
பிறப்பு: பிப்ரவரி 12, 1824
இடம்: டங்காரா, குஜராத் மாநிலம், இந்தியா
பணி: ஆன்மீக சிந்தனையாளர்
இறப்பு: அக்டோபர் 30, 1883
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
மூலசங்கரர் என்ற இயற்பெயர் கொண்ட சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள், 1824 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “டன்காரா” என்ற இடத்தில் கர்சன் லால்ஜி திவாரி என்பவருக்கும், எஷோதாபாயிக்கும் மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை வரி சேகரிப்பு அலுவலராக பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
மூலசங்கரர் அவர்கள் வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்ததால், வீட்டிலேயே மிகுந்த செல்வாக்கோடு வளர்க்கப்பட்டார். இதனால் இவருக்கு வீட்டிலேயே கல்வியும் சொல்லித்தரப்பட்டது. தன்னுடைய இளம் வயதிலேயே சமஸ்கிருதம், மதக்கருத்துகள் பற்றிக் கற்றுத் தேர்ந்தவராக வளர்ந்தார். ஒரு சமயம் தன்னுடைய சகோதரியும், மாமாவும் காலரா நோயால் இருந்ததைக் கண்டு, அவருடைய பெற்றோர்கள் மிகவும் வருத்தப்பட்டனர். இந்த நிகழ்வு சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் மனதில் பல கேள்விகளை எழுப்பியது மட்டுமல்லாமல், ஆன்மீக சிந்தனையில் ஈடுபடவும் வழிவகுத்தது. பிறகு அவருக்கு இருபது வயது இருக்கும் பொழுது பெற்றோர்கள் திருமணம் முடிக்க விரும்பினர். ஆனால், இல்லற வாழ்க்கையை விரும்பாத சுவாமி தயானந்த சரஸ்வதி 1846 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
ஆன்மீகப் பயணம்
குடும்ப வாழ்கையை வெறுத்து, வீட்டை விட்டு வெளியேறிய சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள், இந்தியாவில் பல இடங்களுக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொண்டது மட்டுமல்லாமல், யோகா பயிற்சியிலும் ஈடுபட்டார். சுமார் 15 ஆண்டுகள் ஆன்மீகத் தேடலில் ஈடுபட்ட அவர், இறுதியில் மதுராபூரியில் வசித்துவந்த சுவாமிஜி வீராஜானந்தரிடம் சிஷ்யனாக சேர்ந்தார். வாழ்க்கையின் எதார்த்தத்தையும், வேதங்களையும் கற்றுக் கொண்ட சுவாமி தயானந்த சரஸ்வதி 1837 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் கடவுளின் உருவ வழிபாடுகளின் மீது நம்பிக்கை இழந்து, சமயத்தின் பெயரால் நடக்கும் ஏமாற்று வேலைகள், மோசடிகள் போன்றவைகளை மக்களுக்கு எடுத்துரைக்கத் தொடங்கினார். தான் கற்றுக்கொண்ட கல்வியையும், ஞானத்தையும் போதிக்க “ஆர்ய சமாஜம்” என்னும் அமைப்பையும் தொடங்கினார்.
ஆரிய சமாஜம்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய இந்து மீட்டுருவாக்க அமைப்புகளில் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுவது “ஆரிய சமாஜம்” ஆகும். 1875 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் “ஆரிய சமாஜம்” என்னும் அமைப்பை சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் தொடங்கினார். அதாவது “ஆரியா” என்பதன் பொருள் ‘கடவுளின் குழந்தை’ ஆகும். இதன் விளக்கம், ‘அனைத்து ஆன்மாக்களும், கடவுளின் குழந்தைகள் மற்றும் அவை கடவுளுக்குக் கீழ்படிதல் உள்ளவையாக இருக்கவேண்டும் என்பது தயானந்தரின் கருத்து ஆகும். இந்துக்களின் தாழ்வு மனப்பான்மையை அகற்றி இந்து மதத்தை மெருகேற்றி புதுபொலிவுடன் மிளிரச் செய்யும் நோக்கத்துடன் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜத்தை உருவாக்கினார். இதன் கொள்கைகள் மக்களிடையே தீவிரமாக பரவத் தொடங்கியது.
தயானந்த சரஸ்வதி மேற்கொண்ட சமுதாயப் பணிகள்
மகளிருக்கு சம உரிமை, பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு போன்ற முற்போக்கு நடவடிக்கைகளுக்காகத் தீவிரமாக பாடுபட்ட தயானந்த சரஸ்வதி அவர்கள், அந்த காலத்தில் நடைபெற்று வந்த சிறுவயது திருமண முறையை முற்றிலுமாக எதிர்த்தார். மேலும் விதவைகள் மறுமணம் செய்துகொள்வதை ஆதரித்துப் பேசியும் எழுதியும் வந்தார். ஆங்கிலவழிக் கல்வியை நாடுமுழுவதும் பரப்பப் பாடுபட்ட இவர், “சத்யார்த் பிரகாஷ் அண்ட் பிரதிமா பூஜன் விச்சார்” என்னும் நூலையும் எழுதினார்.
இறப்பு
ஒரு முற்போக்கு சிந்தனையாளராக வாழ்ந்த அவர் இறுதி காலத்தில் ஜோத்பூர் அரசால் பல இன்னல்களை சந்தித்தார். இருந்த போதிலும் கடைசி வரை வேத சமயத்தை பரப்புவதிலும், இந்து சமயத்தின் தீவிர சிந்தனையாளராக வாழ்ந்த சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் 1883 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் நாள் தன்னுடைய 59 வது வயதில் மரணமடைந்தார்.
காலவரிசை
1824 – பிப்ரவரி 12 ஆம் நாள், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள “டன்காரா” என்ற இடத்தில் பிறந்தார்.
1846 – இல்லற வாழ்க்கையை துறந்து வீட்டை விட்டு வெளியேறினார்.
1875 – ஏப்ரல் மாதம் “ஆரிய சமாஜம்” என்னும் அமைப்பை உருவாக்கினார்.
1883 – அக்டோபர் 30 ஆம் நாள் தன்னுடைய 59 வது வயதில் மரணமடைந்தார்.