Goundamani-கவுண்டமணி
Goundamani-கவுண்டமணி
Life History நடிகர்

கவுண்டமணி

கவுண்டமணி அவர்கள், தமிழகத்தின் தலைச்சிறந்த நகைச்சுவை நடிகர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர் ஆவார். ‘கரகாட்டக்காரன்’, ‘சின்னக்கவுண்டர்’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘மேட்டுக்குடி’, ‘நடிகன்’, ‘மன்னன்’, ‘இந்தியன்’, ‘நாட்டாமை’, ‘மாமன் மகள்’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘முறைமாமன்’, ‘சூரியன்’, ‘சின்னத்தம்பி’, ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’, ‘ஜென்டில்மேன்’, ‘ஜெய்ஹிந்த்’, ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ என மேலும் பல திரைப்படங்களில், இவர் நடித்த நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. சுமார் 750 திரைப்படங்களில் நடித்துள்ள இவர், ‘ராஜா எங்க ராஜா’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்’ உள்ளிட்ட பன்னிரெண்டு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், செந்திலுடன் இணைந்து, சுமார் 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர்களுடைய கூட்டணி, ஹாலிவுட்டின் ‘லாரல்-ஹார்டி’ ஜோடிக்கு இணையானவர்கள் எனப் புகழப்பட்டது. இவர் நடித்த ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ (வைதேகி காத்திருந்தால்), ‘அமாவாசை’ (புதிய வார்ப்புகள்), ‘விஷமுருக்கி வேலுசாமி’ (மண்ணுக்கேத்த பொண்ணு), ‘ஐடியா மணி’ (மை டியர் மார்த்தாண்டன்), ‘அஞ்சாத சிங்கம் மருதுபாண்டி’ (வரவு எட்டணா செலவு பத்தணா) போன்ற திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலமாக ப்பேசப்பட்டது. ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், பல குணச்சித்திரக் கதாபத்திரங்களை ஏற்று நடித்து, புகழின் உச்சியை அடைந்த கவுண்டமணியின் வாழ்க்கை வரலாறு மற்றும் திரைத்துறைக்கு அவர் ஆற்றியப் பங்களிப்பினை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: மார்ச் 18, 1939

பிறப்பிடம்: வல்லகொண்டபுரம், கோயம்புத்தூர், தமிழ்நாடு மாநிலம், இந்தியா

பணி: நடிகர்  

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு 

“சுப்பிரமணி” என்னும் இயற்பெயர்கொண்ட கவுண்டமணி அவர்கள், 1939 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், கோயமுத்தூர் மாவட்டதிலுள்ள “வல்லகொண்டபுரம்” என்ற இடத்தில் ‘கருப்பையா’, என்பவருக்கும், ‘அன்னாம்மாவிற்கும்’ மகனாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

ஆரம்ப காலத்தில் நாடகங்களில் நடித்துவந்த கவுண்டமணி அவர்கள், நாடகங்களில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, நாடக நடிப்பில் பெயர் பெற்று விளங்கினார். அதில் ஒரு நாடகத்தில் அவர் ஏற்று நடித்த “ஊர் கவுண்டர்” என்ற பாத்திரம் மிகவும் பிரபலமானதால், அன்று முதல் அவரை ‘கவுண்டமணி’ என அழைக்கத் துவங்கினர்.

தமிழ் சினிமாவில் கவுண்டமணி பயணம்

தன்னுடைய இருபத்தி ஆறாவது வயதில், நாடக உலகில் இருந்து சினிமா உலகத்திற்கு முதன் முதலாக கால்பதித்த கவுண்டமணி அவர்கள், தொடக்கக் காலத்தில் தனியாகவே நகைச்சுவை நடிகராக நடித்தார். 1976 ஆம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘16 வயதினிலே’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த ரஜினிகாந்த் அவர்கள் கூறும் “இதெப்படி இருக்கு…?” என்ற வசனத்திற்கு, கவுண்டமணி பேசும் “பத்த வெச்சுட்டியே பரட்டை” என்ற டயலாக் ரசிகர்களிடையே பரபரப்பாகப் பேசப்பட்டது. தாம் நடித்த நான்காவது படத்திலேயே, தன்னுடைய தனித்துவமான நடிப்புத் திறமையை உலகத்திற்கு வெளிபடுத்திய அவர், பின்னர் தமிழ் சினிமாவில் மற்றுமொரு நகைச்சுவை நடிகராக செந்திலுடன் இணைந்து, பல நகைச்சுவைக் காட்சிகளை அமைத்து பெரும் வெற்றிக்கண்டார். குறிப்பாக சொல்லப்போனால், எண்ணற்ற திரைப்படங்களில் இணைந்து நடித்த கவுண்டமணி-செந்தில் என்ற கூட்டணி படிப்படியாக பல வெற்றிப் படிகளில் கால்பதித்து, தமிழ் திரைப்படங்களில் ஒரு முக்கிய சக்தியாகவே மாற ஆரம்பித்துவிட்டது. செந்திலுடன் இவர் இணைந்து நடித்த அனைத்து திரைப்படங்களில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லை என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் வந்த ‘வாழைப்பழம் காமெடி’, ‘வைதேகி காத்திருந்தால்’ திரைப்படத்தில் ‘ஏண்டா எப்ப பாத்தாலும் எருமச் சானிய மூஞ்சில அப்புண மாதிரியே திரியிற’, ‘நாட்டாமை’ திரைப்படத்தில் ‘இந்த டகால்டி தானே வேணாங்கிறது’, ‘டேய் தகப்பா’, சின்னக்கவுண்டர் திரைப்படத்தில் ‘ஆத்தா! வாய மூடு ஆத்தா! குழந்தபய பயப்புடுறான்’ என மேலும் பல திரைப்படங்களில் வெளிவந்த நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் மறக்கமுடியாத நகைச்சுவைப் பதிவுகளாக இருந்து வருகிறது.

அதிலும், 1989 ஆம் ஆண்டு கங்கை அமரனின் இயக்கத்தில் வெளியான ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் “வாழைப்பழம்” காமெடி மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவைக் காட்சியாக முத்திரைப் பதித்தது. மேலும் ‘நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி’ மற்றும் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ (சூரியன்), ‘அடங்கொப்பா இது உலக மகா நடிப்புடா சாமி’ (மாமன் மகள்), போன்றவை சினிமா உலகம் இருக்கும் வரை தமிழ்த் திரைப்பட ரசிகர்களிடையே என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. ஒரு நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், மேன்மை பொருந்திய குணச்சித்திர கதாபத்திரங்களிலும், பல திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல், ‘இவர் ராஜா எங்க ராஜா’, ‘பிறந்தேன் வளர்ந்தேன்’ உள்ளிட்ட பன்னிரெண்டு திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

கவுண்டமணி நடித்த சில திரைப்படங்கள்

‘பதினாறு வயதினிலே’ (1977), ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ (1979), ‘நெற்றிக்கண்’ (1981), ‘பயணங்கள் முடிவதில்லை’ (1982), ‘அடுத்த வாரிசு’ (1983), ‘வைதேகி காத்திருந்தால்’ (1984), ‘கன்னிராசி’ (1985), ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ (1985), ‘ஜப்பானில் கல்யாண ராமன்’ (1985), ‘பாடும் பறவைகள்’ (1985), ‘நானே ராஜா நானே மந்திரி’ (1985), ‘இதயக் கோயில்’ (1985), ‘உதய கீதம்’ (1985), ‘மிஸ்டர் பாரத்’ (1986), ‘பேர் சொல்லும் பிள்ளை’ (1987), ‘நினைவே ஒரு சங்கீதம்’ (1987), ‘என்னப் பெத்த ராசா’ (1989), ‘கரகாட்டக்காரன்’ (1989), ‘வாத்தியார் வீட்டுப் பிள்ளை’ (1989), ‘மைடியர் மார்த்தாண்டன்’ (1990), ‘நடிகன்’ (1990), ‘நீங்களும் ஹீரோதான்’ (1990), ‘ஊரு விட்டு ஊரு வந்து’ (1990), ‘வாழ்க்கை சக்கரம்’ (1990), ‘பட்டணத்தில் பெட்டி’ (1990), ‘பாட்டுக்கு நான் அடிமை’ (1990), ‘ராஜாவின் பார்வை’ (1990), ‘சின்னத்தம்பி’ (1991), ‘பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’ (1991), ‘என் ராவின் மனசுலே’ (1991), ‘சேரன் பாண்டியன்’ (1991), ‘ரிக்ஷா மாமா’ (1992), ‘பங்காளி’ (1992), ‘திருமதி பழனிசாமி’ (1992), ‘மன்னன்’ (1992), ‘வில்லுப்பாட்டுக்காரன்’ (1992), ‘சின்ன கவுண்டர்’ (1992), ‘ஒண்ணா இருக்க கத்துக்கணும்’ (1992), ‘சூரியன்’ (1992), ‘சின்னவர்’ (1992), ‘ஊர் மரியாதை’ (1992), ‘பெரிய கவுண்டர் பொண்ணு’ (1992), ‘உடன் பிறப்பு’ (1993), ‘ஜென்டில்மேன்’ (1993), ‘பொன்னுமணி’ (1993), ‘பொறந்த வீடா புகுந்த வீடா’ (1993), ‘எஜமான்’ (1993), ‘கோயில் காளை’ (1993), ‘சேதுபதி ஐபிஎஸ்’ (1994) ‘உழைப்பாளி’ (1993), ‘ராசகுமாரன்’ (1994), ‘ஜெய்ஹிந்த்’ (1994), ‘வரவு எட்டணா செலவு பத்தணா’ (1994), ‘தாய்மாமன்’ (1994), ‘ரசிகன்’ (1994), ‘கூலி’ (1995), ‘கர்ணா’ (1995), ‘முறை மாமன்’ (1995), ‘முறை மாப்பிளை’ (1995), ‘நாடோடி மன்னன்’ (1995), ‘லக்கிமேன்’ (1995), ‘மேட்டுக்குடி’ (1996), ‘இந்தியான்’ (1996), ‘டாட்டா பிர்லா’ (1996), ‘காதலர் தினம்’ (1999), ‘குங்குமப்பொட்டு கவுண்டர்’ (2001).

கவுண்டமணியின் நகைச்சுவை சொல்லாடல்கள் சில

  • ‘நாராயணா இந்த கொசுத்தொல்ல தாங்க முடியலடா சாமி.’ (சூரியன்)
  • ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.’ (சூரியன்)
  • ‘நான் ரொம்ப பிஸி.’ (சூரியன்
  • ‘நாட்டுல இந்தத் தொழிலதிபருங்க தொல்ல தாங்க முடியலப்பா.’ (மன்னன்)
  • ‘நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்.’
  • ‘அடங்கொப்பா இது உலக மகா நடிப்புட சாமி.’ (மாமன் மகள்)
  • ‘பெட்டர்மாஸ் லைடேதான் வேணுமா, கூடை வச்சிருக்கிற பொம்பளைக்கெல்லாம் பெட்டர்மாஸ் லைட் தர்றதில்லை.’ (வைதேகி காத்திருந்தால்)
  • ‘இதுக்குதான் ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அழகுராஜா வேணும்கிறது.’ (வைதேகி காத்திருந்தால்)

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கு என்று, ஒரு தனி இடத்தை பிடித்த கவுண்டமணி அவர்கள், தன் பெயருக்கு முன்னாள் எந்தப் பட்டங்களும் போட்டுக் கொள்ள விரும்பாத அற்புத மனிதர். குறிப்பாக சொல்லப்போனால், இதுவரை தமிழ் சினிமாவில் நடித்த நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் கவுண்டமணி அவர்களுக்கு தனியிடம் உண்டு என்பதை யாராலும் மறுக்கமுடியாது. கல்வியறிவு எதுவும் இல்லாமல், நாடக நடிகராகத் தன்னுடைய வாழ்க்கையைத் துவங்கி, அதன் பிறகு, சினிமா துறையில் கால்பதித்து, சுமார் 750 திரைப்படங்களுக்கு மேல் நடித்து, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக இருந்தார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.