எல். கே. அத்வானி அவர்கள், பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத்தலைவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவராகக் கருதப்படுபவர். பல்வேறு யாத்திரைகளை நடத்தி, பாரதிய ஜனதா கட்சியினை ஆட்சிப் பொறுப்பிற்கு கொண்டுவந்த பெருமை இவரையே சாரும்.
அதேசமயம், இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பான “ஆர்.எஸ்.எஸ்”-இன் தீவர கொள்கையாளர் ஆவார். 2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணியாற்றியுள்ள இவர், 1977 முதல் 1979 வரை இந்தியத் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும், 1966, 1998-1999, 1999-2004 ஆம் ஆண்டுகளில் இந்திய உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு வித்திட்டு, இன்றுவரை அக்கட்சியின் மதிக்கத்தக்க தலைவர்களுள் ஒருவராகப் போற்றப்படும் எல். கே. அத்வானியின் வாழ்க்கை வரலாறு மற்றும் பணிகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: நவம்பர் 08, 1927
இடம்: கராச்சி, பிரிட்டிஷ் இந்தியா (தற்போது பாகிஸ்தானில்உள்ளது)
பணி: அரசியல் தலைவர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
எல். கே. அத்வானி என்று அழைக்கப்படும் “லால் கிருஷ்ணா அத்வானி” அவர்கள், 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 08 ஆம் தேதி பிரிட்டிஷ் ஆட்சியின் பொழுது, சிந்து சமவெளி மாகாணங்களில் ஒரு பகுதியாக விளங்கிய “கராச்சியில்” ஒரு இந்து சிந்தி குடும்பத்தில் பிறந்தார். அதன் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் கலவரத்தில் ஏற்பட்ட பிரிவினையின் போது, கராச்சியில் இருந்து வெளியேறி, அன்றைய மும்பை நகரத்தில் இவருடைய குடும்பம் குடியேறியது.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
கராச்சியிலுள்ள புனித பேட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் மற்றும் சிந்து மாகாணத்திலுள்ள ஹைதராபாத் தேசியக் கல்லூரியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த எல். கே. அத்வானி அவர்கள், பிறகு மும்பை அரசு சட்டக்கல்லூரியில் சட்டக் கல்விப் பயின்று பின்னர், மும்பை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஆரம்பகாலப் பணிகள்
தன்னுடைய கல்லூரிப் படிப்பை வெற்றிகரமாக முடித்த எல். கே. அத்வானி அவர்கள், கராச்சியிலுள்ள மாடல் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கிலம், வரலாறு, கணிதம், அறிவியில் கற்பிக்கும் ஆசிரியராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். பள்ளியில் படிக்கும் பொழுதே, இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இல் தன்னை இணைத்துக்கொண்ட அவர், தன்னுடைய கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, ஆர்.எஸ்.எஸ். இல் தீவிரமாகத் தன்னை அர்பணித்துக் கொண்டார். பின்னர், 1951 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பாரதிய ஜனசங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.
அரசியல் பயணம்
“பாரதிய ஜனதா சங்கத்தில்” பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய எல். கே. அத்வானி அவர்கள், 1975 ஆம் ஆண்டு அதன் தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். பிறகு 1975 ல் இந்திராகாந்தி காலத்தில் போடப்பட்ட அவசர நிலைச் சட்டத்திற்கு எதிரானப் போராட்டத்தில், ஜெயபிரகாஷ் நாராயணனுக்கு ஆதரவாக செயல்பட்டு “ஜனதா கட்சி” சார்பில் பெரும் எதிர்கட்சிக்கூட்டணியாக இணைந்தார். 1977 ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த “ஜனதா கட்சி” ஆட்சியில் இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட எல்.கே. அத்வானி அவர்கள், 1980ல் “பாரத ஜனதா கட்சி” அடல் பிகாரி வாஜ்பாயால் தொடங்கப்பட்டபோது, அதன் பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். 1982 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுதேர்தலில் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்ற “பாரத ஜனதா கட்சி”,1986 ஆம் ஆண்டில் கட்சித் தலைவராக அத்வானி தேர்ந்தெடுக்கப்பட்ட பின் 1989-ல் நடந்த பொது தேர்தலில், அக்கட்சி 88 இடங்களில் வெற்றிபெற்று வலுவானக் கட்சியாக பெரும் வளர்ச்சி கண்டது. பிறகு 1989 ஆம் ஆண்டு அயோத்தி விவகாரத்தினை கையிலெடுத்த அத்வானி அவர்கள், ராமர் பிறந்த புண்ணிய பூமி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்தியா முழுவதும் ரதயாத்திரைத் தொடங்கி, பல மாநிலங்களில் மக்கள் செல்வாக்கைப் பெற்றார்.
1996 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பெற்ற பா.ஜா.க, மே 16, 1996 ல் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. இருப்பினும், அந்த ஆட்சி 13 நாட்களில் கலைக்கப்பட்டது. பின்னர், 1998 ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் “பாரத ஜனதா கட்சி” ஆட்சி அமைத்த பொழுது, இந்திய உள்துறை அமைச்சராகத் தேர்தெடுக்கப்பட்ட எல். கே. அத்வானி அவர்கள், பிறகு இந்தியத் துணைப் பிரதமாராகவும் நியமிக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு வரை நீடித்த “பாரத ஜனதா கட்சி”, மே 2004 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிப் பெற்று, ஆட்சியைப் பிடித்தது. இதனால் வாஜ்பாய் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவே, 2004 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக பாரத ஜனதா கட்சித் தலைவராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் அத்வானி பொறுப்பேற்றார்.
காலவரிசை
1927– கராச்சியில் பிறந்தார்.
1942 – ஆர்.எஸ்.எஸ். இல் தன்னை இணைத்துக்கொண்டார்.
1944 – கராச்சியிலுள்ள “மாடல் உயர்நிலைப்பள்ளியில்” ஆசிரியராகப் பணியைத் தொடர்ந்தார்.
1951 – “பாரதிய ஜன சங்கத்தில்” உறுப்பினராக சேர்ந்தார்.
1975 – “பாரதிய ஜன சங்கத்தின்” தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார்.
1977– ஒளிபரப்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
1980– “பாரத ஜனதா கட்சி” பொது செயலாளராக நியமிக்கப்பட்டார்.
1986 – “பாரத ஜனதா கட்சி” தலைவராகப் பொறுப்பேற்றார்.
1993– இரண்டாவது முறையாக “பாரத ஜனதா கட்சி” தலைவரானார்.
1998 – உள்துறை அமைச்சராகவும் பிறகு துணைப் பிரதமாராகவும் நியமிக்கப்பட்டார்.
2004 – மூன்றாவது முறையாக “பாரத ஜனதா கட்சி” தலைவராக நியமிக்கப்பட்ட அத்வானி, எதிர்கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார்.