Life History தலைவர்கள்

பி. வி. நரசிம்ம ராவ்

நேரு மற்றும் காந்தி வம்சாவழியில் வராமல், முழு ஐந்து ஆண்டுகள் பதவியில் சிறப்பாக சேவை செய்த இந்தியாவின் முதல் பிரதம மந்திரி நினைவுக் கூறப்பட்டவர் பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள்.

இவர் தென்னிந்தியாவில் இருந்து வந்து, ஒரு முழு கால ஆட்சி செய்து, நாட்டை ஆண்ட முதல் அரசியல்வாதி ஆவார். 5 லட்சம் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வென்று, அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சாதனைப் படைத்தார், நரசிம்ம ராவ் அவர்கள். பெரிய அளவில் பொருளாதார மாற்றம் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு பாதிக்கும் பல சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தனது ஆட்சியின் போது நாட்டின் நலனுக்காக பல்வேறு சேவைகள் செய்து சாதனைகள் நிகழ்த்தினார். அவரை “இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை” என்றும் தொழில், பொருளாதாரம் மற்றும் அரசியல் சட்டத்தில் அவரது சிறப்பான மற்றும் தனிதத்துவமான பங்களிப்பைக் கண்ட சில மக்கள் அவரை “சாணக்யர்” என்றும் அழைத்தனர். எனினும், ‘ஒவ்வொரு நாணயத்திலும் இரண்டு பக்கங்கள் உண்டு’ என்பதைக் குறிக்கும் விதமாக நரசிம்ம ராவ் அவர்கள், பிரதம மந்திரியாக இருந்த போது, அயோத்தியில் பாபர் மசூதி தகர்ப்பு கண்ட நிகழ்வு, இந்திய தேசிய வரலாற்றில் ஒரு பரபரப்பூட்டும் நிகழ்ச்சியாக இருந்தது. இது தவிர, அவரது ஆட்சிக் காலத்தில், அவர் பல ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டிருந்தார் என்று பல பேச்சுகளும் இருந்தது. அரசியலில் சாணக்யர் என்று போற்றப்பட்ட பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள் பற்றி மேலுமறிய தொடர்ந்துப் படிக்கவும்.

பிறப்பு: ஜூன் 28, 1921

பிறந்த இடம்: வங்கரா, ஆந்திர பிரதேசம்

இறப்பு: டிசம்பர் 23, 2004

தொழில்: அரசியல் தலைவர், வழக்கறிஞர், செயல்வீரர், கவிஞர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

பி.வி. நரசிம்ம ராவ் அவர்கள் பமுலபர்த்தி வெங்கட நரசிம்மராவாக ஒரு கெளரவமான விவசாய நியோகி பிராமண குடும்பத்தில், கங்கா ராவ் மற்றும் ருக்மிணிஅம்மா தம்பதியருக்கு மகனாக ஜூன் 28, 1921ஆம் ஆண்டு பிறந்தார். அவர் ஆந்திர பிரதேசத்தில், வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி என்ற கிராமத்தில் பிறந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

பி.வி. நரசிம்ம ராவ் அவர்களுக்கு 3 வயது இருக்கும் போது, அவரது குடும்பம், கரீம்நகர் மாவட்டத்தில் இருக்கும் வங்காரா கிராமத்திற்குக் குடிபெயர்ந்தனர். அவர் ஓஸ்மானியா பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலைப் பட்டமும், மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் ஃபெர்குசன் கல்லூரியிலிருந்து சட்டத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். அவரது தாய்மொழித் தெலுங்காக இருந்தாலும், நரசிம்ம ராவ் அவர்களால் மிகவும் சரளமாக மராத்தியும் பேச முடியும். எட்டு இந்திய மொழிகள் அவருக்கு தெரிந்திருந்தாலும், அவர் ஆங்கிலம், பிரஞ்சு, அரபு, ஸ்பானிஷ், ஜெர்மன், கிரேக்கம், லத்தீன், மற்றும் பாரசீக மொழிகளையும் கற்றுத் தேர்ந்தவராக விளங்கினார். 1940களில், அவர் தனது தூரத்து உறவினர்களான பமுலபர்த்தி சதாசிவ ராவ், ராஜா நரேந்திரா மற்றும் தேவுலபள்ளி தாமோதர் ராவ் ஆகியோருடன் இணைந்து “ககாதியா பத்ரிகா”, என்ற தலைப்பில் வெளியான தெலுங்கு வார இதழைத் திருத்தத் தொடங்கினார். நரசிம்ம ராவ் மற்றும் சதாசிவ ராவ் “ஜெயா-விஜயா” என்ற தலைப்பின் கீழ் கட்டுரை எழுதினர்.

அரசியல் பிரவேசம்

நரசிம்ம ராவ் அவர்கள், இந்திய சுதந்திர போராட்டத்தின் போது, ஒரு சுதந்திர போராட்ட வீரராகத் தீவிரமாகப் பணியாற்றினார். மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், உடனடியாக அரசியலில் தன்னை முழுநேர ஊழியராக ஈடுபடுத்திக்கொண்டார். அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகி, ஹைதெராபாத் மாநில முதலமைச்சராக இருந்த பர்குலா ராமகிருஷ்ணா ராவைப் பின்பற்றி, அவர் வழியில் பணியாற்றினார். 1951ல், அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் (ஏஐசிசி) உறுப்பினரானார். அதன் பின்னர், 1957ல் மாநில சட்டமன்றத்தின் உறுப்பினரானார். அவர் சட்டம் மற்றும் தகவல் அமைச்சராக 1962 முதல் 1964 வரையிலும், சட்டம் மற்றும் அறக்கட்டளை அமைச்சராக 1964 முதல் 1967 வரையிலும், உடல்நலம் மற்றும் மருத்துவத்துறை அமைச்சராக 1967லும், மற்றும் ஆந்திர பிரதேச அரசு கீழ் கல்வி அமைச்சராக 1968 முதல் 1971 வரையிலும், பல முக்கிய அமைச்சர் பதவிகளில் பணியாற்றினார். ஆந்திர பிரதேச அரசின் கீழ்  பல்வேறு அமைச்சர் பதவிகளை வகித்த பிறகு, 1971 ஆம் ஆண்டு நரசிம்மராவ் அவர்கள், ஆந்திர பிரதேச முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு பிராமணர்  தேர்தலில் வென்று, முதலமைச்சர் பதவியேற்றதைக் கண்டு பலரும் வியந்தனர். 1969ல் இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுற்ற போது, நரசிம்மராவ் அவர்கள், இந்திரா காந்திக்கு ஆதரவு தெரிவித்து, அவரது மரணம் வரை அவருக்கு விசுவாசமாக இருந்தார். நரசிம்ம ராவ் அவர்கள், இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி அவர்களின் அமைச்சரவைகளில் பல்வேறு பதவிகளில் பணியாற்றியதால், 1985ல் இந்தியா முழுவதும் பெரும் புகழ் பெற்றார். அவர் 1980 முதல் 1984 வரை, வெளியுறவு அமைச்சராகவும், 1984ல் உள்துறை அமைச்சராகவும், 1984 முதல் 1985 வரை பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றினார். அதன் பிறகு, அவர் 1985 ஆம் ஆண்டில்,  மனித வள மேம்பாட்டு அமைச்சராகவும் பதவியேற்றார்.

தேசிய பாதுகாப்பில் அவரது சாதனைகள்

தேசிய அணு பாதுகாப்பு மற்றும் ஏவுகணைகள் திட்டத்தில் நரசிம்ம ராவ் அவர்கள், எடுத்த முயற்சியே 1998ல், இந்தியா வெற்றிகரமாக பொக்ரான் அணு சோதனைகள் மேற்கொள்ள காரணமாக அமைந்தது. இந்த சோதனைகள் அனைத்தும் ராவின்  பதவிக்காலத்தின் போது துவங்கப்பட்டாலும், அமெரிக்க உளவுத்துறை இதனை அறிந்ததும், அமெரிக்காவின் நெருக்கடியின் காரணமாக தவிர்க்கப்பட்டது. மேலும், அந்த நேரத்தில் வெப்பாற்றல் சாதனத்தை உருவாக்கவும், சோதிக்கவும் அதிக நேரம் தேவைப்படும் என்ற தகவலை நரசிம்ம ராவ் அவர்களே வெளியில் சொன்னார் என்றும் பல ஊடகங்கள் அவரைக் குற்றஞ்சாட்டியது. அவர் பயங்கரவாதம் மற்றும் கிளர்ச்சிகளை எதிர்க்கும் விதமாக, இராணுவப் பயிற்சி மற்றும் அதற்காக வழங்கப்படும் கல்வித் தொகையை அதிகரித்தார். அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை இயக்கியதோடு மட்டுமல்லாமல், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹஸ்ரத்பல் புனித ஸ்தலத்தை பயங்கரவாதிகள் கைப்பற்றியதற்கு, இந்தியாவின் சார்பிலிருந்து பதிலடியும் கொடுத்தார். ராவ், மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா, சீனா போன்ற வெளிநாடுகளோடு இந்தியாவை பல ஒப்பந்தங்கள் மூலமாக இணைத்தார். 1992 வரை, இஸ்ரேலுடனான இரகசிய உறவைக் கூட அவர் பகிரங்கப்படுத்தினார். இதன் விளைவாக, இஸ்ரேல் புது தில்லியில் ஒரு தூதரகம் திறக்க அனுமதியும் வழங்கினார். மார்ச் 12, 1993 மும்பை குண்டுவெடிப்புக்குப் பின்னர், நாட்டில் நிலவிய மேலாண்மையின் நெருக்கடியை சமாளிக்க, அவர் எடுத்த அற்புத நடவடிக்கைகளுக்காக அவர் பெரிதும் பாராட்டப்பெற்றார். அவர் தனிப்பட்ட முறையில் பம்பாய் சென்று, குண்டுவெடிப்புகளில் பாகிஸ்தானின் உண்மைகளையும், தலையீட்டையும் கண்டுபிடிக்கும் நோக்கமாக அமெரிக்க, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய மேற்கு நாடுகளிலிருந்து அவர்களது உளவுத்துறை அதிகாரிகளை இந்தியா அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

ஊழல் முறைகேடுகள்

நரசிம்ம ராவ் அவர்கள், இந்தியாவின் பிரதமராக ஆட்சியில் இருந்த போதும், பதவியிலிருந்து விலகிய பின்பும், அவருக்குப் பல ஊழல் குற்றச்சாட்டுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பிருந்தது அறியப்பட்டது. 1993 தேர்தலில், அவரது அரசாங்கத்திற்கு பெரும்பான்மையான வெற்றிக் கிடைக்க வாய்ப்புகள் இல்லாமல் இருந்தது. எனினும், ராவின் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (எம்) மற்றும் ஜனதா தளம் உறுப்பினர்களுக்குக் கோடிக்கணக்கான ரூபாய் பணம் லஞ்சமாகக் கொடுத்தார் என்று நம்பப்படுகிறது. 1996ல் அவரது பதவிக்காலம் முடிவடைந்தப் பின்னர், அவர் மீதான விசாரணை வழக்குத் தொடங்கியது. 2000ல், நரசிம்ம ராவ் மற்றும் அவரது சக நண்பரான பூட்டா சிங் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால்,  நரசிம்ம ராவ் அவர்கள், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையிட்டதால், பிணையில் வெளியேறினார். ராவும், பூட்டா சிங்கும் 2002 ஆம் ஆண்டு அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர். மற்றொரு வழக்காக, தவறான ஆவணங்களை உருவாக்கி, செயின்ட் கீட்ஸில் உள்ள ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் கார்ப்பரேஷன் வங்கியில் அஜேயா சிங்கின் பேரில் ஒரு வங்கி கணக்கை திறந்து, அதில் $ 21 மில்லியன் டெபாசிட் செய்து அவரது தந்தை வி.பி. சிங்கின் கௌரவத்திற்கு பங்கம் விளைவித்தார் என்று நரசிம்ம ராவ், கே.கே.திவாரி, சந்திராசுவாமி, மற்றும் கே.என்.அகர்வால் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த சம்பவம் 1989ல் நடந்திருந்தாலும், 1996ல் அவரது பிரதம மந்திரியாக பதவிக்காலம் முடிந்த பிறகு தான், மீண்டும் மத்திய புலனாய்வு துறையினரால் குற்றம் சாட்டப்பட்டார். இவ்வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர் அவருடன் இணைந்து குற்றம் சாட்டப்பட்டோருடன் சேர்ந்து வெளியானார். மூன்றாவது வழக்காக, இங்கிலாந்தில் ஒரு இந்திய தொழிலதிபரான லக்குபாய் பதக்கை $ 100,000 ரூபாய் மோசடி செய்தனர் என்று நரசிம்ம ராவ், சந்திராசுவாமி, மற்றும் கே. அகர்வால் அவர்களும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்தத் தொகை, இந்தியாவில் காகித கூழ் வழங்கும் பரிவர்த்தனைக்காக வழங்கப்பட்ட தொகையாகும். ஆனால், பதக் சந்திராசுவாமியையும், அவரது செயலாளரையும் சந்தோஷப்படுதுவதற்காக கூடுதலாக $ 30,000 ரூபாய் செலவு செய்ததாக வலியுறுத்திக் கூறினார். எனினும், 2003 ஆம் ஆண்டில், தக்க ஆதாரம் இல்லாததால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளே நரசிம்ம ராவ் அவர்களின் நிர்வாகத்தின் மீது ஒரு பெரும் கரும்புள்ளியாக எஞ்சிய ஆண்டுகளுக்கும், அவரது மரணத்திற்கு பின்பும் கூட தொடர்ந்தது.

பிந்தைய வாழ்க்கை

1996ல், நரசிம்ம ராவ் அவர்கள், இந்திய பிரதமராக ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்த பின்னர், பொது தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் மோசமாக தோற்கடிக்கப்பட்டது.  செப்டம்பர் 1996 வரை அவர் காங்கிரஸ் கட்சித் தலைவராக பணியாற்றினார், பின்னர் அவருக்கு பதிலாக சீதாராம் கேசரி அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவரது கட்சித் தலைமையின் கீழ், ஒரு சர்வாதிகார நிலைப்பாட்டையும், உறுப்பினர்களையும் செம்மையாக வழிநடத்தினார். இதுவே பல்வேறு முக்கிய மற்றும் மிகவும் பிரபலமான காங்கிரஸ் தலைவர்களான, நாராயண் தத் திவாரி, அர்ஜூன் சிங், மாதவராவ் சிந்தியா, மமதா பானர்ஜி, ஜி.கே.மூப்பனார், மற்றும் ப.சிதம்பரம் போன்றோரை வெளிக்கொண்டு வந்தது. அரசியலில் ஒரு பிரபலமானவராக இருந்தாலும், நிதி நெருக்கடியில் இருந்த போது, அவர் மகனின் கல்விக்காக, அவரது ஒரு மருமகன் தான் உதவி செய்தார். தனது மகள் மருத்துவம் பயில செய்வதற்கும், அவர் கடினமான நிதிப் பிரச்சனைகளில் இருந்தார் என்று கண்டறியப்பட்டது. நரசிம்ம ராவின் ஊடக ஆலோசகராகவும், ஒரு ஐஏஎஸ் அதிகாரியாகவும் இருந்த பிவிஆர்கே. பிரசாத்தின் அறிவுரைப்படி, அவருக்கு சொந்தமான பஞ்சாரா ஹில்ஸ் சொத்தை விற்று, பரிந்துரைப்பவர்களின் கட்டணத்தை செலுத்தினார்.

இறப்பு

நரசிம்ம ராவ் அவர்கள், டிசம்பர் 9, 2004 ஆம் ஆண்டு மாரடைப்பால் அவதிப்பட்டதால்,   அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டார். பதினான்கு நாட்கள் மருத்துவமனையில் போராடிய அவர், டிசம்பர் 23 ஆம் தேதி அன்று தனது கடைசி மூச்சை விட்டார். அவரது உடலை புது தில்லியில் தகனம் செய்ய அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தாலும், காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் நுழைய மறுக்கப்பட்டதால், அவரது உடல் ஹைதெராபாத் எடுத்து செல்லப்பட்டு, அங்கு ஜூப்ளி மண்டபத்தில் இறுதிச்சடங்குக்கு முன் பார்வைக்கு வைக்கப்பட்டது. அவரது இறுதிச்சடங்கில் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் எச்.டி. தேவே கவுடா, பாரதிய ஜனதா கட்சி தலைவர் எல்.கே. அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நிதி அமைச்சர், பி சிதம்பரம் போன்ற பல பிரபலங்களும், பிரமுகர்களும் கலந்துகொண்டனர். அப்போதைய ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஒய்எஸ். ராஜசேகர் ரெட்டி தலைமையில், அவரது உடல் முழு மரியாதையோடு தகனம் செய்யப்பட்டது.

காலவரிசை

1921: வாரங்கல் மாவட்டத்திலிருக்கும் லக்னேபல்லி என்ற கிராமத்தில் பிறந்தார்.

1940: ‘ககாதியா பத்ரிகா’ என்னும் வார இதழைத் திருத்தத் தொடங்கினார்.

1951: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (சி.பி. ஐ) உறுப்பினரானார்.

1957: மாநில சட்டமன்றத்தில் ஒரு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1962-64: ஆந்திர அரசாங்கத்தின் கீழ், சட்டம் மற்றும் தகவல் அமைச்சரானார்.

1964-67: ஆந்திர அரசாங்கத்தின் கீழ், சட்டம் மற்றும் அறக்கட்டளை அமைச்சராகப் பணியாற்றினார்.

1967: ஆந்திர அரசின் கீழ் சுகாதார மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1968-71: ஆந்திர அரசின் கீழ், கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.

1971: ஆந்திர பிரதேச முதலமைச்சராகப் பதவியேற்றார்.

1980-84: மத்திய அரசாங்கத்தின் கீழ், வெளியுறவு அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1984: மத்திய அரசின் கீழ், உள்துறை அமைச்சராகப் பணியாற்றினார்

1984-85: மத்திய அரசாங்கத்தின் கீழ், பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார்.

1985: மத்திய அரசாங்கத்தின் கீழ், மனித வள மேம்பாட்டு அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1991: இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1992: செபி சட்டம் மற்றும் பல பாதுகாப்பு சட்டங்களை (திருத்தம்) அறிமுகம் செய்தார்.

1992: இஸ்ரேலுடனான உறவை பகிரங்கப்படுத்தி, புது தில்லியில் இஸ்ரேலிய தூதரகத்தைத் திறந்துவைத்தார்.

1993: 1993 மும்பை தாக்குதலுக்கான பின்னணியை விசாரணை செய்ய ஆணையிட்டார்.

1994: தேசிய பங்கு சந்தையைத் (NSE) துவக்கி வைத்தார்.

1996: மே 16 ம் தேதி பிரதமரான ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது.

1996: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் ஜனதா தளம் உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்தாக குற்றம்சாட்டப்பட்டார்.

1996: காங்கிரஸ் கட்சி தலைவரானார்.

1996: செப்டம்பர் மாதம் சீதாராம் கேசரி, அவருக்கு பதிலாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக மாற்றப்பட்டார்.

1998: பொக்ரான் அணு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன

2000: ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டார்.

2002: ஊழல் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

2003: லக்குபாய் பதக்கிடம் இருந்து கூடுதல் பணம் கேட்ட குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

2004: 83வது வயதில், டிசம்பர் 23 ஆம் தேதி புது தில்லியில் மாரடைப்பால் மரணமடைந்தார்