Life History தலைவர்கள்

நீலம் சஞ்சீவ ரெட்டி

இந்தியாவின் ஆறாவது குடியரசு தலைவரான ‘நீலம் சஞ்சீவி ரெட்டி’ ஆந்திர பிரதேசத்தின் முதல் முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

தன்னுடைய இளம் வயதிலேயே தீவிர சுதந்திரப் பற்றுக் கொண்ட இவர், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு பல பணிகளை செம்மனே செய்த சிறந்த நிர்வாகியும் ஆவார். குடியரசு தலைவருக்காகப் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்ட முதல் குடியரசு தலைவர் என போற்றப்படும் நீலம் சஞ்சீவ் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: மே 19, 1913

இடம்: இல்லூர் (அனந்தபூர் மாவட்டம்), ஆந்திரப் பிரதேசம், இந்தியா

பணி: அரசியல் தலைவர், இந்திய குடியரசு தலைவர்

இறப்பு: ஜூன் 01, 1996

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், 1913  ஆம் ஆண்டு மே மாதம் 19  ஆம் நாள் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனந்தபூர் என்ற மாவட்டதிலுள்ள இல்லூர் என்ற கிராமத்தில் நீலம் சின்னப்பா ரெட்டிக்கு மகனாக ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

தன்னுடைய தொடக்கக் கல்வியை சென்னையிலுள்ள அடையார் தியோசஃபிகல் உயர் பள்ளியில் தொடங்கிய அவர், பின்னர் தன்னுடைய உயர் கல்வியைத் தொடர அனந்தப்பூர் அரசு கலைக் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர், காந்தியின் கொள்கைகளில் பற்று கொண்ட அவர், தன்னுடைய கல்வியைப் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் தன்னை ஈடுபத்திக் கொண்டார்.

சுதந்திர போராட்டதில் நீலம் சஞ்சீவ ரெட்டியின் பங்கு

1929ல் அனந்தபூருக்கு மகாத்மா காந்தியின் வருகை, நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது எனலாம். காந்தியின் எளிமையைக் கண்ட நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், அதன் பிறகு அவருடைய கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டு அன்று முதல் வெளிநாட்டு ஆடைகள் உடுத்துவதை துறந்து, கதர் ஆடைகளை உடுத்த ஆரம்பித்தார். 1931 ஆம் ஆண்டு “இந்திய சுதந்திர இயக்கத்தில்” சேர்ந்த அவர் பின்னர், காங்கிரஸ் கட்சியிலும் சேர்ந்து, ‘மாணவர் சத்தியா கிரகத்தில்’ ஒரு துடிப்பு மிக்க இளைஞனாகவும் செயல்பட்டார். தன்னுடைய 25 வயதில் ஆந்திர பிரதேச மாகான காங்கிரஸ் கமிட்டி செயலாளராக நியமிக்கப்பட்டு, பத்து ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். 1940 முதல் 1945 வரை, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு பெரும்பாலான காலங்களை சிறையிலேயே காலத்தை கழித்த அவர், சிறையில் ஸ்ரீ பிரகாசம், ஸ்ரீ சத்திய மூர்த்தி, ஸ்ரீ காமராஜர், ஸ்ரீ கிரி போன்ற தலைவர்களை சந்தித்தார்.

அரசியல் வாழ்க்கை

விடுதலைக்கு பிறகு, நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் 1946ல் சென்னை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட பின், 1947ல் செயலாளராகவும் பொறுப்பேற்றார். அதே ஆண்டில், இந்திய சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்தெடுக்கப்பட்டார், 1949  முதல் 1951 வரை சென்னை அரசு வீட்டு வசதி மற்றும் வனத்துறை தடையமைச்சராக பணியாற்றிய அவர், 1951ல் தன்னுடைய பதவியை ராஜனாமா செய்துவிட்டு “ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி” தலைவர் தேர்தலில் போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். பின்னர், 1952ல் “ராஜ்ய சபா” உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆந்திர பிரதேச முதல்வராக நீலம் சஞ்சீவ ரெட்டி

சென்னை மாநிலத்தில் இருந்து பிரிந்து சென்ற தெலுங்கு மாவட்டங்கள் அடங்கிய பகுதிகளை கொண்டு 1953ல் ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டு, தலைமை  அமைச்சராக டி.பிரகாசமும், துணை அமைச்சராக நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்களும் நியமிக்கப்பட்டார்கள். பின்னர், 1956ல் மாநில சீரமைப்பின் போது, ஐதராபாத் மாநிலத்தின் குல்பர்கா மற்றும் ஔரங்காபாத் பிரிவுகள் முறையே மைசூர் மாநிலம் மற்றும் மும்பை மாநிலம் ஆகியவற்றுடன் இணைந்தன. எஞ்சிய பகுதிகள் ஆந்திர மாநிலத்துடன் இணைந்து புதிய “ஆந்திரப் பிரதேச மாநிலமாக” உருவானது. இவ்வாறு உருவான ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சராக நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் தேர்தெடுக்கப்பட்டார். 1956 முதல் 1960 வரை சிறப்பாக பணியாற்றிய அவர், பிறகு 1962ல் இரண்டாவது முறையாக தேர்தெடுக்கப்பட்டு, தன்னுடைய பணியை தொடர்ந்தார்.

குடியரசு தலைவராக நீலம் சஞ்சீவ ரெட்டி

குடியரசு தலைவர், டாக்டர் ஜாகிர் ஹூசை பதவி காலத்தை முடிக்கும் முன்னரே மரணம் அடைந்துவிட்டதால், குடியரசு தலைவர் பதவிக்காக நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இருந்தாலும், இந்திரா காந்தி வி.வி கிரியை ஆதரிக்கவே, 1969 ஆம் ஆண்டு வி.வி கிரி தற்காலிக குடியரசு தலைவராக தேர்தெடுக்கப்பட்டு, பின்னர் முறைப்படி குடியரசு தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்டார். ஜனாதிபதி பதவிக்காக இதற்கு முன் வகித்துவந்த எல்லாப் பதவிகளையும் ராஜினாமா செய்ததால், 1969 ஆம் ஆண்டு குடியரசு தேர்தலின் தோல்விக்குப் பிறகு, நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், தன்னுடைய தந்தையின் தொழிலான விவசாயத்தில் ஈடுபட்டார். பின்னர், 1975 ஆம் ஆண்டு மீண்டும் அரசியலில் நுழைந்த நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், மார்ச் 1977 ஆம் ஆண்டு ஜெயபிரகாஷ் அவர்களின் ஆதரவுடன் ஒரு ஜனதா கட்சி வேட்பாளராக “நன்டியால்” தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார். மக்களவையில் அவர் ஆற்றிய பணிக்காகவும், உணர்ச்சி பூர்வமான பேச்சாற்றலுக்காகவும் இந்திய பாராளுமன்றம் அவருக்கு ‘சிறந்த பேச்சாற்றல்’ என்ற பட்டத்தை வழங்கியது. தன்னுடைய திறமையான மற்றும் நேர்மையான பணியாற்றளால் 1977 ஆம் ஆண்டு நடந்த குடியரசு தேர்தலில் போட்டியின்றி ஒரு மனதாக இந்தியாவின் ஆறாவது குடியரசு தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.

பிறப்பணிகள்

1962 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக “ராஜ்ய சபா” உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், 1964ல் ஸ்டீல் மற்றும் சுரங்க மத்திய அமைச்சராக பணியாற்றினார். 1966  முதல் 1967 வரை இந்திரா காந்தியின் அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராகவும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சராகவும், கப்பல் மற்றும் சுற்றுலா துறை அமைச்சராகவும் தன்னுடைய பணிகளை சிறப்பாக செய்தார். பின்னர், 1967 ஆம் ஆண்டு “மக்களவை சபா நாயகராகவும்” தேர்தெடுக்கப்பட்டார்.

தனிப்பட்ட வாழ்க்கை

ஜூன் 8, 1935 ஆம் ஆண்டு,  நாகரத்னம்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.  இவருக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் பிறந்தனர்.

இறப்பு

1977 ஆம் ஆண்டு முதல் 1982 ஆம் ஆண்டு வரை இந்திய குடியரசு தலைவராக பணியாற்றிய நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், தன்னுடைய பதவி காலம் முடிந்த பிறகு, அவருடைய சொந்த கிராமமான இல்லூரில் இறுதி காலத்தை கழித்தார். அவர் ஓய்வு நேரங்களில் விவசாயத்தில் ஈடுபட்டார். கடைசி காலம் வரை அயராமல் பாடுபட்ட நீலம் சஞ்சீவ ரெட்டி அவர்கள், ஜூன் 01, 1996 ஆம் ஆண்டு தன்னுடைய 83 வது வயதில் பெங்களூரில் காலமானார்.

கால வரிசை:

1913 – ஆந்திரப் பிரதேச மாநிலம் அனந்தபூர் மாவட்டத்திலுள்ள இல்லூரில் பிறந்தார்.

1929 – அனந்தபூருக்கு மகாத்மா காந்தியின் வருகையால் ஏற்பட்ட மாற்றம்.

1931 – காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.

1935 – நாகரத்னம்மா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

1938 – ஆந்திர பிரதேச மாகான காங்கிரஸ் கமிட்டி செயலாளராக நியமிக்கப்பட்டார்.

1946 – சென்னை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.

1947 – சென்னை காங்கிரஸ் கட்சி சட்டமன்ற செயலாளராக பணியாற்றினார்.

1949 – 1951 – சென்னை அரசு வீட்டு வசதி மற்றும் வனத்துறை தடை அமைச்சராக பணியாற்றினார்.

1951 – ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றார்.

1952 – மக்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.

1955 – பி. கோபாலரெட்டியின் மந்திரி சபையில் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1956 – 1959 – ஆந்திர முதலமைச்சராக பணியாற்றினார்.

1959 – 1962 – இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் பொறுப்பை ஏற்றார்.

1962 – 1964 – ஆந்திர முதல்வராக மீண்டும் தேர்தெடுக்கப்பட்டார்.

1964 – ஸ்டீல் மற்றும் சுரங்க மத்திய அமைச்சராக பணியாற்றினார்.

1964 – ராஜ்ய சபா உறுப்பினராக பொறுப்பேற்றார்.

1966 – 1967 – போக்குவரத்து அமைச்சராகவும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சராகவும், கப்பல் மற்றும் சுற்றுலா துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

1967 – மக்களவை சபா நாயகராக தேர்தெடுக்கப்பட்டார்.

1977 – 1982 – இந்தியாவின் ஆறாவது குடியரசு தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்.

1996 – ஜூன் 1, 1996 ஆம் ஆண்டு தன்னுடைய 83 வது வயதில் காலமானார்