Home » ஷாருக்கான்
Life History நடிகர்

ஷாருக்கான்

‘ஷாருக்கான்’ என்றும் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்கள், ‘பாலிவுட்டின் பாட்ஷா‘ என்றும், ‘கிங் கான்’ என்றும், ‘கிங் ஆஃப் ரொமான்ஸ்’ என்றும் ஊடங்களால் வழங்கப்படுகிறார். எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தார். 1992ல், பாலிவுட்டில், ‘டர்’ என்ற திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் அறிமுகமான அவர், மெல்ல நகர்ந்து, ஹீரோ என்ற அந்தஸ்தைக் கைப்பற்றி, முன்னணி ஹீரோக்கள் [...]

‘ஷாருக்கான்’ என்றும் ‘எஸ்.ஆர்.கே’ (SRK) என்றும் எல்லோராலும் அழைக்கப்படும் ஷாருக்கான் அவர்கள், ‘பாலிவுட்டின் பாட்ஷா‘ என்றும், ‘கிங் கான்’ என்றும், ‘கிங் ஆஃப் ரொமான்ஸ்’ என்றும் ஊடங்களால் வழங்கப்படுகிறார்.

எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல், தொலைக்காட்சி மூலமாகத் திரை முன்பு தோன்றிய அவர், படிப்படியாகத் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு, பாலிவுட்டில் கால்பதித்தார். 1992ல், பாலிவுட்டில், ‘டர்’ என்ற திரைப்படத்தில் எதிர்மறையான கதாபாத்திரத்தில் அறிமுகமான அவர், மெல்ல நகர்ந்து, ஹீரோ என்ற அந்தஸ்தைக் கைப்பற்றி, முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் தனது பெயரைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். உலகளவில் ரசிகர்களைத் தனது நடிப்பால் ஈர்த்து, பில்லியன் கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் கொண்ட ஒரே நடிகரென்ற பெருமைக்குரியவர். இதனால் இவருக்கு, ‘தி வேர்ல்ட்’ஸ் பிக்கெஸ்ட் மூவி ஸ்டார்’ என்ற பட்டத்தை, லாஸ் ஏஞ்செல்ஸ் டைம்ஸ் 2011ல் வழங்கி கௌரவித்தது. 30 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு, 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அவர், இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’, சிறந்த குடிமகன் விருதும், பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்று, ஒரு நடிகனாகவும், தயாரிப்பாளாரகவும் இருந்து வருகிறார். டிரீம்ஸ் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனராகவும், மோஷன் பிக்சர் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனமான ரெட் சில்லிஸ் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் அனிமேஷன் ஸ்டூடியோ ரெட் சில்லிஸ் VFXஇன் இணைத் தலைவராகவும் இருந்து வரும் அவர், இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸின் இணை உரிமையாளரும் ஆவார். ஹிந்தித் திரையுலகில் சாதாரணக் கலைஞனாக அடியெடுத்து வைத்து, உலகின் அனைத்து திரையுலகையுமே தன்னைத் திரும்பிப் பார்க்கும் அளவிற்கு முன்னேறிய ஷாருக்கான் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பாலிவுட்டில் அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: 2 நவம்பர், 1965 (வயது 47)

பிறப்பிடம்: புது தில்லி, இந்தியா

பணி: நடிகர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

ஷாருக்கான் அவர்கள், இந்தியாவின் தலைநகரான புது தில்லியில், நவம்பர் மாதம் 2 ஆம் தேதி, 1965 ஆம் ஆண்டில், முஸ்லீம் தம்பதியரான தாஜ் முகமது கான் மற்றும் லதீஃப் பாத்திமாவிற்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, இந்தியப் பிரிவினைக்கு முன்பே, பாக்கிஸ்தானில் உள்ள பெஷாவரிலிருந்து இந்தியா வந்து குடியேறிய ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கையும், கல்வியும்

சிறு வயதிலிருந்தே, தனது பெற்றோரின் அரவணைப்பிலும், பாசப்பினைப்பிலும் வளர்ந்த அவர், டெல்லியில் உள்ள செயின்ட் கொலம்பியா பள்ளியில் தனது பள்ளிப்படிப்பைக் கற்றார். பள்ளிக்காலங்களில் படிப்பு, விளையாட்டு, மற்றும் நடிப்பு போன்ற அனைத்திலும் சிறந்து விளங்கிய அவர், பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவருக்கு வழங்கப்படும் வருடாந்திர விருதான ‘ஸ்வார்ட் ஆஃப் ஹானர்’ என்ற பட்டத்தைப் பெற்றார். அவருக்குப் 15 வயதிருக்கும் போது, அவரது தந்தை புற்றுநோயால் இறந்ததால், அவர் தனது தாயின் அரவணைப்பில் வளர்ந்தார். தனது பள்ளிப்படிப்பிற்குப் பின்னர், 1985ல் பின்னர் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் சேர்ந்த அவர், பொருளாதாரத்தில் தனது இளநிலைப் பட்டத்தை 1988 ஆம் ஆண்டில் பெற்றார். இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், ஜாமியா மிலியா இஸ்லாமியா கல்லூரியில் மாஸ் கம்யூனிகேஷன்ஸில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். என்னதான் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தாலும், அவரது கவனம் முழுவதும் பாலிவுட்டில் நுழைவதில் தான் இருந்தது. இதன் காரணமாக, அவர் தில்லியில் உள்ள தேசிய நாடகப் பள்ளியில் சேர்ந்து திரையுலக நுணுக்கங்களைப் பயின்றார். அவரது தாயார் வெகு நாட்காளாக நோய்வாய்ப்பட்டிருந்ததால், 1990ல் மரணமடைந்தார். இதனால், பெரிதும் பாதிக்கப்பட்ட அவர், அவரது தாயாரின் அறிவுரைப்படி, ‘கடும் முயற்சியால் மட்டுமே வெற்றியின் இலக்கிய அடைய முடியுமென்று’ எண்ணி அதை நோக்கிப் பயணித்தார்.

திரையுலகப் பிரவேசம்

தனது தாயாரின் மரணத்திற்கு முன்பே அவர், ‘தில் டரியா’, மற்றும் ‘ஃபௌஜி’ என்ற தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். ‘ஃபௌஜி’ என்ற தொடரில் அவர் நடித்த கமாண்டோ கதாபாத்திரம் பெருமளவு வரவேற்பு பெற்றுத்தந்ததால், அவர் தொடர்ந்து ‘சர்கஸ்’ என்ற ஆங்கிலத் தொலைக்காட்சித் திரைப்படத்தில் நடித்தார். இதன் விளைவாக, ஹேமாமாலினி இயக்கும் படமான ‘தில் ஆஷ்னா ஹை’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்பட வாய்ப்பைப் பெற்ற அவர், மும்பைக்குப் பயணமானார்.

இல்லற வாழ்க்கை

திரையுலகில் கால்பதிக்க எண்ணிய ஷாருக்கான் அவர்கள், பாலிவுட்டின் தலைமை இடமாகத் திகழும் மும்பைக்கு 1991ல் சென்றார். அங்கு ஒரு விழாவில், கவுரி சிப்பர் என்பவரைக் கண்ட அவருக்கு, அவர் மீது காதல் மலர்ந்தது. அவர் ஒரு இந்து என்பதால், பல எதிர்ப்புகளையும் மீறி, அவர்கள் அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி, 1991 ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்தனர். அவர்கள் இருவருக்கும் 1997ல் ஆரியன் என்ற மகனும், 2000ல் சுஹானா என்ற மகளும் பிறந்தனர். திருமணத்திற்கு முன்பு தனது மதமான இஸ்லாமியம் மீது அபார நம்பிக்கை கொண்ட அவர், திருமணத்திற்குப் பின், இரண்டு மதங்களையும் பின்பற்றுகிறார்.

திரையுலக வாழ்க்கை

ஷாருக்கான் அவர்கள், முதலில் நடித்தப் படமான ‘தில் ஆஷ்னா ஹை’ வெளிவருவதில் தாமதமானதால், அவரது ‘தீவானா’ என்ற படம் 1992ல் முதலில் வெளியானது. அதைத் தொடர்ந்து, அவர் ‘சமத்கார்’ (1992), ‘இடியட்’ (1992), ‘ராஜூ பன் கயா ஜென்டில்மேன்’ (1992), ‘மாயா மேம்சாப்’ (1993), ‘ஜிங் அங்கிள்’ (1993), ‘பாசிகர்’ (1993), ‘கபி ஹா கபி நா’ (1993), ‘அஞ்சாம்’ (1993), ‘கரன் அர்ஜுன்’ (1993), ‘ஜமானா தீவானா’ (1993), ‘குட்டு’ (1995), ‘ஓ டார்லிங்! யெஹ் ஹை இந்தியா’ (1995), ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ (1995), ‘ராம் ஜானே’ (1995), ‘த்ரிமூர்த்தி’ (1995), ‘இங்கிலீஷ் பாபு தேசி மேம்’ (1995), ‘சாஹத்’ (1996), ‘ஆர்மி’ (1996), ‘கோய்லா’ (1997), ‘எஸ் பாஸ்’ (1997), ‘பர்தேஷ்’ (1997), ‘தில் தோ பாகல் ஹை’ (1997), ‘டூப்ளிகேட்’ (1998), ‘தில் சே’ (1998), ‘குச் குச் ஹோத்தா ஹை’ (1998), ‘பாட்ஷா’ (1993), ‘ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி’ (2000), ‘ஜோஷ்’ (2000), ‘ஹே ராம்’ (2000), ‘மொஹப்பத்தேன்’ (2000), ‘ஒன் 2 கா 4’ (2001),  ‘அசோகா’ (2001), ‘கபி குஷி கபி கம்’ (2001), ‘ஹம தும்ஹாரே ஹை சனம்’ (2002), ‘தேவதாஸ்’ (2002), ‘சல்தே சல்தே’ (2003), ‘கல் ஹோ னா ஹோ’ (2003), ‘யே லம்ஹே ஜூடாய் கே’ (2004), ‘மெய்ன் ஹூ நா’ (2004), ‘வீர் ஜாரா’ (2004), ‘ஸ்வதேஷ்’ (2004), ‘பஹெளி’ (2005), ‘கபி அல்விடா னா கெஹ்னா’ (2006), ‘டான்: தி தி சேஸ் பிகின்ஸ் அகைன்’ (2006), ‘சக் தே! இந்தியா’ (2007), ‘ஓம் சாந்தி ஓம்’ (2007), ‘ரப் னே பனா தி ஜோடி’ (2008), ‘பில்லு பார்பர்’ (2009), ‘மை நேம் இஸ் கான்’ (2011), ‘ரா ஒன்’ (2011), ‘டான் 2: தி சேஸ் கண்டிநியூஸ்’ (2011), மற்றும் ‘ஜப் தக் ஹை ஜான்’ (2012) போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

தயாரிப்பு நிறுவனராக ஷாருக்  

1999ல், ட்ரீம்ஸ் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை, ஜூஹி சாவ்லா, இயக்குனர் ஆசிஸ் மிர்சாவுடன் இணைந்து தொடங்கிய அவர், ஐந்து ஆண்டுகள் கழித்து, அதை ‘ரெட் சில்லீஸ் என்டெர்டைன்மென்ட் என்ற பெயரில் மாற்றி, தனது மனைவியைத் தயாரிப்பாளராக அறிவித்தார். அந்நிறுவனம், ‘ஃபிர் பி தில் ஹை ஹிந்துஸ்தானி’, ‘அசோகா’, ‘சல்தே சல்தே’, ‘மெயின் ஹூ நா’, ‘பஹெளி’, ‘கால்’, ‘பில்லு’, ‘ஆல்வேஸ் கபி கபி’, ‘ரா ஒன்’ மற்றும் ‘டான் 2’ போன்ற திரைப்படங்களைத் தயாரித்தது. பின்னர், அனிமேஷன் ஸ்டுடியோவை அத்துடன் இணைத்து, ரெட் சில்லீஸ் VFX என்ற பெயரில் ‘சக் தே இந்தியா’, ஓம் ஷாந்தி ஓம்’, ‘தோஸ்தானா’, குர்பான்’ போன்ற படங்களையும் தயாரித்தது.

தொலைக்காட்சித் தொகுப்பாளராக ஷாருக்

2007ல், ‘கோன் பனேகா கரோர்பதி’ என்ற நேரடி விளையாட்டு நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியை வழங்கினார்.

2008ல், ‘க்யா ஆப் பான்ச்வி பாஸ் சே தேஜ் ஹை?” என்ற நிகழ்ச்சியத் தொகுத்து வழங்கினார்.

2011ல், ‘ஜோர் கா ஜட்கா: டோடல் வைப்அவுட்’என்ற அமெரிக்கன் விளையாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

விருதுகளும், அங்கீகாரங்களும்

  • 1997 – சிறந்த இந்திய குடியுரிமை விருது
  • 2002 – பொழுதுபோக்கு துறையில் சிறந்து விளங்கியதால், ‘ராஜீவ் காந்தி விருது’ வழங்கப்பட்டது.
  • 2005 – இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதை, இந்திய அரசு அவருக்கு வழங்கி கௌரவித்தது.
  • 2009 – “தசாப்தத்தின் மிக சக்திவாய்ந்த பொழுதுபோக்கு கலைஞர்” என்ற IIFA-FICCI பிரேம்ஸ் விருதுகள் பெற்று பெருமைக்குரியவர்.
  • 30 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட அவர், 15 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்றுள்ளார்.

ஷாருக்கான் அவர்கள், சிறந்த நடிகருக்கான ஆறு முறை ஐஐஎஃப்ஏ விருதுகள், எட்டு ஜீ சினி விருதுகள், பதிமூன்று ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகள், மூன்று பாலிவுட் திரைப்பட விருதுகள், இரண்டு குளோபல் இந்திய திரைப்பட விருதுகள், ஆறு முறை சான்சூய் விருதுகள், நான்கு முறை பால்வுட் விருதுகள்,  மற்றும் ஆசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த நடிகருக்கான பரிந்துரை செய்யப்பட்டார்.

காலவரிசை

1965: புது தில்லியில், நவம்பர் மாதம் 2 ஆம் தேதி, 1965 ஆம் ஆண்டில், முஸ்லீம் தம்பதியரான தாஜ் முகமது கான் மற்றும் லதீஃப் பாத்திமாவிற்கு மகனாகப் பிறந்தார்.

1985: ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் சேர்ந்து, பொருளாதாரத்தில் தனது இளநிலைப் பட்டத்தை 1988 ஆம் ஆண்டில் பெற்றார்.

1990: வெகு நாட்காளாக நோய்வாய்ப்பட்டிருந்த அவரது தாயார், 1990ல் மரணமடைந்தார்.

1990: ஹேமாமாலினி இயக்கும் படமான ‘தில் ஆஷ்னா ஹை’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

1991: பாலிவுட்டின் தலைமை இடமாகத் திகழும் மும்பைக்குச் சென்றார்.

1992: முதலில் நடித்தப் படமான ‘தில் ஆஷ்னா ஹை’ வெளிவருவதில் தாமதமானதால், அவரது ‘தீவானா’ என்ற படம் 1992ல் முதலில் வெளியானது.

1991: கவுரி சிப்பர் என்ற இந்து பெண்ணைக் காதல் புரிந்து, பல எதிர்ப்புகளையும் மீறி, அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி, 1991 ஆம் ஆண்டில் மணமுடித்தார்.

1999: ட்ரீம்ஸ் அன்லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை, ஜூஹி சாவ்லா, இயக்குனர் ஆசிஸ் மிர்சாவுடன் இணைந்து தொடங்கினார்.

2௦௦4: ட்ரீம்ஸ் அன்லிமிடெட் நிறுவனத்தை, ‘ரெட் சில்லீஸ் என்டெர்டைன்மென்ட் என்ற பெயரில் மாற்றி, தனது மனைவியைத் தயாரிப்பாளராக அறிவித்தார்.

2005: இந்தியாவின் நான்காவது உயரிய சிவிலியன் விருதான ‘பத்ம ஸ்ரீ’ விருதை, இந்திய அரசு அவருக்கு வழங்கி கௌரவித்தது.

2007: ‘கோன் பனேகா கரோர்பதி’ என்ற நேரடி விளையாட்டு நிகழ்ச்சியின் மூன்றாவது பகுதியை வழங்கினார்.

 

About the author

WebMaster

Add Comment

Click here to post a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.