Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

சத்ரபதி சிவாஜி

மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர்.

இராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி, பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டியப்பேரரசு விரிவடைய வித்திட்டவர். இவருடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய வரலாற்றில் பொற்காலமாகக் கருதப்படுகிறது. மராட்டியர்களின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் முக்கிய காரணாமாய் விளங்கி, பிளவுபட்டு கிடந்த பகுதிகளை ஒன்றிணைத்து மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவினார். மேலும் சொல்லப்போனால் மகாராஷ்டிராவை எத்தனையோ மன்னர்கள் ஆண்டிருந்தாலும், சத்ரபதி சிவாஜியை போல் திறமையான மன்னர்கள் எவரும் இல்லையென வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இத்தகைய வீரமிக்க ‘மாமன்னன்’ சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு மற்றும் போர் முறைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: பிப்ரவரி 19, 1627

இடம்: சிவநேரி கோட்டை, புனே, மகாராஷ்டிரா மாநிலம், இந்தியா

பணி: பேரரசர்

இறப்பு: ஏப்ரல் 03, 1680

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

‘சத்ரபதி சிவாஜி’ என அழைக்கப்படும் சிவாஜி சகாஜி போஸ்லே அவர்கள், 1627 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டதிலுள்ள “சிவநேரி கோட்டை” என்ற இடத்தில் சஹாஜி போஸ்லேவுக்கும், ஜீஜாபாயிக்கும் மகனாகப் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

தன்னுடைய தாயின் அரவணைப்பில் வளர்ந்த சத்ரபதி சிவாஜி, இளமையிலேயே இராமாயணம், மகாபாரதம் போன்ற வீரகாவியங்கள் கற்பிக்கப்பட்டு சிறந்த வீரனாக வளர்க்கப்பட்டார். பிறகு தாதாஜி கொண்ட தேவ் போன்ற சிறப்பு மிக்க நிர்வாகிகள், அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் கீழ் பயிற்சிச்பெற்ற அவர், வாள் பயிற்சி, வில் பயிற்சி, குதிரையேற்றம், யானை ஏற்றம் போன்றவற்றில் சிறப்பு பெற்று விளங்கினார்.

பேரரசை விரிவுபடுத்துதல்

1645 ஆம் ஆண்டு பீஜபூர் பேரரசிடம் இருந்து, தோர்னாக் கோட்டையைக் கைப்பற்றிய அவர், பின்னர் 1647ல் கொண்டனா மற்றும் ராஜ்காட் கோட்டையையும், 1656ல் ராய்காட் கோட்டையையும் கைப்பற்றினார். 1659 ஆம் ஆண்டு பூனாவில் பல இடங்களை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, மராட்டிய பேரரசை விரிவுபடுத்தினார்.

மொகலாயர்களுடன் போர்

1661 ஆம் ஆண்டு கொங்கன் பகுதியில், முகலாய படைதளபதி கர்தாலாப் கானுடன் நடைபெற்ற போரில் மாபெரும் வெற்றி கண்ட அவர், பிறகு சாயிஸ்தாகான் தலைமையில் மேற்கொண்ட தாக்குதலை முறியடித்து முகலாயர்களுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தினார். 1664 மற்றும் 1670 களில் இரண்டு முறை சூரத்தை தாக்கி, கொள்ளையடித்தார். இதனால் சிவாஜியின் வெற்றியைத் தடுக்க தந்திரமான முறையில் ஒரு விருந்தை ஏற்பாடுசெய்து சிவாஜியை கொலைசெய்ய அப்சல் கான் திட்டமிட்டார். ஆனால் அப்சல் கானின் திட்டத்தை அறிந்த சிவாஜி, புலி நகத்தை பயன்படுத்தி தப்பினார். அதன் பிறகு 1670-ல் முகலாய கடற்படையின் மீது தாக்குதலை தொடுத்த அவர், பல பகுதிகளை கைப்பற்றினார். போர்களத்தில் தந்திரமான முறையில் போர் செய்யும் “கொரில்லா போர்” (கொரில்லா போர் முறை என்பது தந்திரமான முறையில் நான்கு புறமும் மறைந்திருந்து தாக்குவது ஆகும்) முறையை பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தினார். இதனால் பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி தன்னுடைய ஆளுமையின் கீழ் கொண்டுவந்தார்.

சத்ரபதியாக முடிசூட்டிக்கொள்ளுதல்

1674 ஆம் ஆண்டு ஜூன் 6 ல் ராய்கட் கோட்டையில் சத்ரபதியாக முடிசூட்டிக் கொண்டார். 1676 ஆம் ஆண்டு, தென்னிந்திய பகுதிகளின் மீது தன்னுடைய கவனத்தை திருப்பிய அவர், வேலூர் மற்றும் செஞ்சி கோட்டைகளையும், ஆர்காட்டையும் கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

ஆட்சி முறை

சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்த சத்ரபதி சிவாஜி, நிர்வாக முறையில் முன்னேற்றம் காண்பதற்காகவும், ஆட்சிமுறையில் மாற்றங்களை ஏற்படுத்தவும், வரிவசூல் நடவடிக்கைக்காக பல சீர்திருத்தங்களை கொண்டுவந்தார். அதன் அடிப்படையில் மன்னனுக்கு ஆலோசனை கூற எட்டு அமைச்சர் கொண்ட “அஷ்டபிரதான்” என்ற அமைப்பினை ஏற்படுத்தினார். பிறகு அரசை மூன்று மாகாணங்களாக பிரித்து, ஒவ்வொரு மாகாணமும் பல பர்கானாக்களாகப் பிரிக்கப்பட்டது. இராணுவப் படை, குதிரைப்படை, கடற்படை என அனைத்திலும் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டு, மன்னரின் நேரடி கட்டுபாட்டில் கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமல்லாமல், வரலாற்று சிறப்புமிக்க பல கோட்டைகளையும் கட்டினார். குறிப்பாக சொல்லப்போனால், சிவாஜியின் ஆட்சிக்காலத்தில் மகாராஷ்டிரா அரசு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தது என கூறலாம்.

இறப்பு

சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் விளங்கிய சத்ரபதி சிவாஜி அவர்கள், இறுதியில் இரத்தப்பெருக்கு நோயினால் பாதிக்கப்பட்டு, 1680 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி தன்னுடைய 53 வது வயதில் காலமானார்.

தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக் காலத்தில், சுமார் பத்துக்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார். அரசியல் நடவடிக்கையில் மட்டுமல்லாமல், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர் முகலாய மன்னர்களுடன் செய்த போர் தந்திரங்களும், ஆட்சியைப் பறைசாற்ற அவர் கட்டிய கோட்டைகளும் இவருடைய வீரத்தையும், போர்த்திறமையையும், கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

காலவரிசை

1627 – பிப்ரவரி 19 நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் பூனே மாவட்டதிலுள்ள “சிவநேரி கோட்டை” என்ற இடத்தில் பிறந்தார்.

1645 – தோர்னாக் கோட்டையைக் கைப்பற்றினார்.

1664 – சூரத்தை தாக்கி கொள்ளையடித்தல்.

1674 – ஜூன் 6 ல் ராய்கட் கோட்டையில், ‘சத்ரபதியாக’ முடிசூட்டிக் கொண்டார்.

1680 – ஏப்ரல் 3 ஆம் தேதி 53 வது வயதில் காலமானார்

Exit mobile version