ஐதராபாத் – சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 24 கிராம் தங்க செயின் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பீகாரைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்று ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஏனெனில், அவர்கள் மட்டுமே ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து ஓடும் ரெயிலை நிறுத்தி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவதாக ரெயில்வே சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.
பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக பிற மாநிலங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து சிக்னல் விளக்குகளை மாற்றும் ’தொழில்நுட்ப அறிவு’ அவர்களுக்கு உள்ளது.
இது போன்று ரெயில்வே சிக்னலை மாற்றி டெல்லியில் தூங்கிக் கொண்டிருந்த பெண் பயணிகளிடமிருந்து தங்க செயினை கொள்ளையடித்துள்ளனர். அது போல இங்கும் முதன்முறையாக ஒரு ரூபாயை கொண்டு ரெயிலை நிறுத்தி கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.