வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘மாஸ்’ படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். அவர் காலதாமதப்படுத்துவதாக புகார் எழுந்தது. இதற்கிடையில் குத்து பாடல் ஒன்றுக்கு இசை அமைக்க தமனிடம் பொறுப்பை ஒப்படைத்தார் சூர்யா. இது யுவனுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. இந்த பேச்சு அடங்குவதற்குள் மற்றொரு இசை அமைப்பாளர் அனிரூத் பற்றி சூடான தகவல் வெளியாகி இருக்கிறது.
ஸ்ரீனு வைத்லா இயக்க ராம் சரண் நடிக்கும் புதிய தெலுங்கு படத்தில் இசை அமைப்பாளராக அனிரூத் ஒப்பந்தம் ஆனார். சமீபத்தில் அவர் இசை அமைத்த தமிழ் படங்களின் பாடல்கள் ஹிட்டை தொடர்ந்து தெலுங்கில் அவரை அறிமுகப்படுத்த இக்குழு எண்ணியது. ஆனால் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி வேகமாக இசை கம்போஸ் செய்து தராமல் தாமதப்படுத்துவதாக அனிரூத் மீது இயக்குனருக்கும், ஹீரோவுக்கும் மன வருத்தம் எழுந்தது. இதையறிந்த அனிரூத் படத்திலிருந்து வெளியேறிவிட்டாராம்.
அவரின் முடிவை இயக்குனரும், ஹீரோவும் தடுக்காமல் மவுனம் சாதித்து வருகின்றனர். அனிரூத்துக்கு பதிலாக தேவி ஸ்ரீபிரசாத் அல்லது தமன் இவர்களில் ஒருவரை இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்ய தயாரிப்பு தரப்பு பணியை முடுக்கிவிட்டுள்ளதாம். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். ராம் சரண் படத்திலிருந்து வெளியேறிய அனிரூத் தமிழில் அஜீத் நடிக்கும் புதிய படத்துக்கு இசை அமைக்கிறாராம்.