புதுடெல்லி:
இந்தியாவில் அதிவேக 4ஜி மொபைல் டேட்டா வழங்கிய நிறுவனமாக ரிலையன்ஸ் ஜியோ உள்ளது என மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது என டிராய் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டவுன்லோடு வேகத்தில் பிப்ரவரி மாதத்திலும் ஜியோ முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி மாதம் ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகத்தின் அடிப்படையில் நான்காவது இடத்தில் இருந்ததை தொடர்ந்து அடுத்தடுத்த மாதங்களில் ஜியோ வேகம் கனிசமாக அதிகரித்துள்ளது. முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ சம்மர் சர்ப்ரைஸ் சலுகை அறிவித்து தனது சேவைகளை கூடுதலாக மூன்று மாதங்களுக்கு நீட்டித்தது.
அதிவேக டவுன்லோடு வழங்கும் நிறுவனங்கள்:
டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ரிலைன்ஸ் ஜியோ 4ஜி மொபைல் டவுன்லோடு வேகம் நொடிக்கு 16.487 எம்பியாக (16.487Mbps) உள்ளது. ஜியோவை தொடர்ந்து ஐடியா (12.092Mbps), ஏர்டெல் (10.439Mbps) மற்றும் வோடபோன் (7.933Mbps) உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
முதல் நான்கு இடங்களில் உள்ள அனைத்து நிறுவனங்களின் டவுன்லோடு வேகங்களும் முந்தைய மாதத்தை விட குறைவாகவே உள்ளது. குறிப்பாக ஏர்டெல் மற்றும் வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களின் டவுன்லோடு வேகம் ஜனவரி மாதத்தில் இருந்தே குறைந்து வருகிறது.
அதிவேக அப்லோடு வழங்கும் நிறுவனங்கள்:
டவுன்லோடு வேகத்தில் முதலிடத்தில் இருந்தாலும், அப்லோடு வேகத்தில் ஜியோ பின்தங்கியுள்ளது. மொபைல் அப்லோடு வேகத்தை பொருத்த வரை ஐடியா (6.536Mbps) அப்லோடு வேகத்தையும், வோடபோன் (5.429Mbps), ஏர்டெல் (4.455Mbps) மற்றும் ரிலையன்ஸ் ஜியோ (3.581Mbps) என்ற வேகத்தில் நான்காவது இடத்தில் உள்ளது.
சராசரியான 4ஜி அப்லோடு வேகம் பிப்ரவரி மாதத்திலும் ஒரே அளவில் இருந்தது, எனினும் ஐடியா செல்லுலார் 4ஜி அப்லோடு வேகம் 7.497Mbps-இல் இருந்து 6.536Mbpsயாக குறைந்துள்ளது. இதேபோன்று ரிலையன்ஸ் ஜியோ வேகம் 2.208 Mbps-இல் இருந்து 3.581Mbps ஆக அதிகரித்துள்ளது. வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களின் வேகத்தில் அதிகப்படியான மாற்றங்கள் ஏதும் இல்லை.
முன்னதாக இந்தியாவின் அதிவேக மொபைல் நெட்வொர்க் என்ற வாசகத்துடன் வரும் ஏர்டெல் விளம்பரங்களுக்கு தடை விதிக்க ஜியோ சார்பில் இந்திய விளம்பரங்கள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதை விசாரித்து ஏர்டெல் விளம்பரங்களில் இந்தியாவின் அதிவேக நெட்வொர்க் என்ற வார்த்தை மாற்றியமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.