மும்பை:
இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ வரவுக்கு பின் ஏற்பட்டுள்ள கலக்கம், போட்டி நிறுவனங்களை தங்களது சேவை கட்டணங்களை குறைக்க செய்தது. முதல் ஆறு மாதங்களுக்கு இலவச சேவைகளை வழங்கிய ஜியோ தொடர்ந்து மலிவு விலை திட்டங்களை அறிவித்து வருகிறது.
டெலிகாம் சந்தையில் போட்டி நிறுவனங்களை பந்தாடி வரும் ரிலையன்ஸ் ஜியோ அடுத்து லேப்டாப் மற்றும் செட் டாப்-பாக்ஸ் சேவைகளை வழங்க தயாராகி வருகிறது. அதன் படி பார்க்க மேக்புக் போன்றே காட்சியளிக்கும் மலிவு விலை 4ஜி லேப்டாப் மற்றும் குறைந்த விலையில் செட் டாப்-பாக்ஸ் சேவைகளை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேக்புக் தோற்றத்தில் ஜியோ 4ஜி லேப்டாப்:
லைஃப் பிரான்ட்டெட் ஸ்மார்ட்போன்களை போன்றே ஜியோ லேப்டாப்களிலும் 4ஜி சிம் கார்டு ஸ்லாட் வழங்கப்படவுள்ளது. ஜியோ 4ஜி லேப்டாப்களை ஃபாக்ஸ்கான் மற்றும் இன்ஃபோகஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு சியோமி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட MI நோட்புக் ஏர் லேப்டாப், 4ஜி வோல்ட்இ வசதி கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஜியோ 4ஜி லேப்டாப்பில் பிரத்தியேக 4ஜி சிம் கார்டு ஸ்லாட் இடது புறம் வழங்கப்படுகிறது. இத்துடன் விண்டோஸ் 10 ஓஎஸ் கொண்டு புதிய லேப்டாப் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதே போல் விண்டோஸ் லேப்டாப்பில் இயங்க ஏதுவாக ஜியோ செயலிகளின் விண்டோஸ் பதிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:
13.3 இன்ச் ஃபுல் எச்டி 1920×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள எச்டி கேமரா மற்றும் மெல்லிய வடிவமைப்பு கொண்ட கீபோர்டு வழங்கப்படும் என கூறப்படுகிறது. இன்டெல் பென்டியம் குவாட்-கோர் பிராசஸர் மற்றும் 4ஜிபி ரேம் கொண்டுள்ள ஜியோ லேப்டாப்பில் 64 ஜிபி eMMC ஸ்டோரேஜ் மற்றும் 128 ஜிபி eMMC ஸ்டோரேஜ் வசதியும் வழங்கப்படுகிறது.
4ஜி வோல்ட்இ அம்சத்தை தவிர்த்து ப்ளூடூத் 4.0, இரண்டு யுஎஸ்பி 3.0 போர்ட், மைக்ரோ எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்படவுள்ளதாக இதுவரை வெளியாகியுள்ள தகவல்களில் தெரியவந்துள்ளது. எனினும், இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
ஜியோ செட் டாப்-பாக்ஸ்:
கடந்த சில மாதங்களாக ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவைகளை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் ஜியோ செட் டாப்-பாக்ஸ் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. துவக்கத்தில் இந்த புகைப்படம் போலியானதாக இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், இணையத்தில் வெளியான பல்வேறு வீடியோ மற்றும் தகவல்களில் ஜியோ டிடிஎச் சேவைகளை வழங்க இருப்பது ஓரளவு உறுதியாகியுள்ளது.
முன்னதாக ஜியோ பிரான்டிங் கொண்ட ரிமோட் மற்றும் செட் டாப்-பாக்ஸ் புகைப்படம் வெளியானது. வட்ட வடிவில் காட்சியளித்த செட் டாப்-பாக்சிலும் ஜியோ சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. எனினும் தற்சமயம் வெளியாகியுள்ள புகைப்படங்களில் ஜியோ செட் டாப்-பாக்ஸ் செவ்வக வடிவம் கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.
ஜியோ செட் டாப்-பாக்ஸ் புதிய புகைப்படங்களின் படி பல்வேறு போர்ட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் சாதாரண கேபிள் கனெக்டர், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி, ஆடியோ மற்றும் வீடியோ அவுட்புட், ஈத்தர்நெட் போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஈத்தர்நெட் போர்ட் கொண்டு பிராட்பேண்ட் வசதியை வழங்கும் மோடம்களை இணைக்க முடியும்.
ஜியோ டிவி சிறப்பம்சங்கள்:
ரிலையன்ஸ் ஜியோவின் டிடிஎச் சேவைகளாக கூறப்படும் ஜியோ டிவியில் 360 சேனல்களும், இவற்றில் 50 சேனல்கள் எச்டி தரத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய ஜியோ டிடிஎச் சேவைகளில் ஏழு நாள் கேட்ச்-அப் வசதி வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் தரவுகள் ஜியோ சர்வர்களில் சேமிக்கப்பட்டு டிமான்டிற்கு ஏற்ப வழங்கப்படும். மேலும் குரல் மூலம் இயங்கக் கூடிய ரிமோட் மூலம் சேனல்கள், நிகழ்ச்சிகள், பிரிவுகள் மற்றும் நடிகர்களின் பெயர்களை கொண்டு தேடலாம்.
ஜியோ டேட்டா சேவைகளை போன்றே ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவைகளும் குறைந்த விலையில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் மிக விரைவில் ஜியோ டிடிஎச் சேவைகள் அறிமுகம் செய்யப்படும் என்றும் முதற்கட்டமாக மும்பையிலும் அதன் பின் மற்ற இடங்களிலும் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
ஜியோ டிடிஎச் விலை பட்டியல்:
ஜியோ 4ஜி நெட்வொர்க் போன்றே ஜியோ டிடிஎச் சேவைகளுக்கும் புதிய யுக்தியை ஜியோ பின்பற்றலாம் என்றும் செட் டாப் -பாக்ஸ் ஒரிஜினல் விலை ரூ.2000 முதல் ரூ.2500 வரை இருக்கும் என்றாலும் அறிமுக சலுகையாக ரூ.500-ரூ.750 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. ஜியோ டிடிஎச் சேவைகளின் மாத கட்டணத்தைப் பொருத்த வரை மாதம் ரூ.100 முதல் ரூ.185 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஜியோ டிடிஎச் சேவைகளிலும் அறிமுக சலுகையின் கீழ் முதல் ஆறு மாதங்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என கூறப்படுகிறது. முழுமையான எச்டி செட் டாப்-பாக்ஸ் மற்றும் இண்டர்நெட் இணைப்பு, யுஎஸ்பி போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளதால் செட் டாப்-பாக்ஸ் உடன் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளை பார்க்கும் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. தனியார் நிகழ்ச்சிகளை வழங்குவதற்கென பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஜியோ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே பயன்பாட்டில் இருந்து வரும் ஜியோ 4ஜி, ஜியோஃபை ஹாட்ஸ்பாட் சேவைகளை தவிர ஜியோ ஃபைபர்நெட் சேவைகளும் வெளியாகவுள்ள நிலையில் பிராட்பேண்ட் சேவைகளிலும் ஜியோ ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் டிடிஎச், லேப்டாப் என பல்வேறு பிரிவுகளில் ஜியோ களமிறங்க இருப்பது குறிப்பிட்ட சேவையை ஏற்கனவே வழங்கி வரும் போட்டி நிறுவனங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என சந்தை வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.