Technology

ஐபோன் 8 வெளியீடு தாமதமாகிறது, ஆனாலும் ஓர் நற்செய்தி?

சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் ஐபோன் 8 இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என அனைவரும் எதிர்பார்த்து வந்த நிலையில், இதன் வெளியீடு தாமதமாகலாம் என சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனத்திற்கு பத்தாவது ஆண்டு ஐபோனாக இருப்பதால் ஐபோன் 8 மிகவும் சிறப்பு மிக்கதாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது.
ஐபோன் 8 வடிவமப்பு முதல் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டு வரும் நிலையில் அதிகப்படியான மாற்றங்கள் இதன் வெளியீட்டை தாமதமாக்கி வருகிறது. புதிய ஐபோனில் வளைந்த OLED பேனல்களை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் தயாரிப்பு பணிகள் நிர்ணயம் செய்யப்பட்ட நேரத்தில் நிறைவடையாது. இதன் காரணமாக ஐபோன் 8 அக்டோபர் அல்லது நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
புதிய அறிவிப்பு ஐபோன் பிரியர்களை சோகத்தில் ஆழ்த்தினாலும் மற்றொரு தகவல் அவர்களுக்கு சற்றே ஆறுதலாக அமைந்துள்ளது. ஐபோன் 8 வெளியீடு தாமதமானாலும் அதன் விலை 1000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.64,990.50க்குள் நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களில் ஐபோன் 8 ஸ்மார்ட்போன் ‘ஐபோன் எடிஷன்’ என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சாம்சங் நிறுவனத்திடம் இருந்து 70 லட்சம் OLED டிஸ்ப்ளேக்களை வாங்க ஆப்பிள் முன்பதிவு செய்துள்ளது என தகவல்கள் வெளியானது. இத்துடன் புதிய ஐபோன் 8-இல் 3D செல்ஃபி கேமரா, எம்பெடெட் கைரேகை ஸ்கேனர் மற்றும் உயர்-ரக ஃபேஷியல் ரெகக்னீஷன் வசதிகள் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
விலையை பொருத்த வரை புதிய ஐபோன் 8, 850 டாலர்கள் முதல் 900 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.55,100 முதல் ரூ.58,400 துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 64 ஜிபி ஐபோன் 8 தயாரிப்பு கட்டணமானது அதிகபட்சம் 70 முதல் 80 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.4,500 முதல் ரூ.5,100 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.