Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

புதிய இடத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க ஏற்பாடுகள் தீவிரம்

ஒரே நேரத்தில் 153 கடைகள் மூடப்பட்டதால் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.3 கோடி வீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ,புதிய கடைகள் திறக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோவை:

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் இருக்கும் மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 283 டாஸ்மாக் கடைகளில் 153 கடைகள் மூடப்பட்டன. இதில் கோவை மாநகருக்குள் இருந்த பெரும்பாலான கடைகள் மூடப்பட்டதால் மது பாட்டில்கள் கிடைக்காமல் குடிமகன்கள் தவிப்புக்குள்ளாகினர்.

காந்திபுரம் பஸ் நிலைய சுற்றுவட்டார பகுதியில் மட்டும் 12 கடைகள் இருந்த நிலையில் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 10 கடைகள் மூடப்பட்டன. திறந்திருந்த 2 கடைகளில் மட்டும் கூட்டம் நிரம்பி வழிகிறது. சில கடைகளில் அரைமணி நேரம் வரை காத்திருந்து மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.

மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக டாஸ்மாக் அதிகாரிகள் மாற்று இடம் பார்த்து வருகின்றனர். ஆனால் புதிய இடத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பணியும் நிறுத்தப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் 153 கடைகள் மூடப்பட்டதால் ஒரு நாளைக்கு சராசரியாக ரூ.3 கோடி வீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 3 நாட்களில் மட்டும் ரூ.9 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் மாற்று இடத்தை கடைகள் அமைப்பதற்கான வேலையை தீவிரப்படுத்தி உள்ளனர். முதற்கட்டமாக மாநகரை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டும் 17 இடங்களில் புதிய கடைகள் திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதற்கிடையே மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் அருகே ரகசியமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சிங்காநல்லூர் பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள பெட்டி கடையில் மறைத்து வைத்து மது விற்ற புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா(வயது 39) என்பவரை போலீசார் கைது செய்து 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

குனியமுத்தூர் குளத்துபாளையம் பஸ் நிலையம் அருகே மது விற்றதாக கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ரகுநாதன் (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 66 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ராம்நகரில் ரகசியமாக மது விற்றதாக விவேக்(24), வெரைட்டிஹால் பகுதியில் மணிகண்டன்(26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல பேரூர், பெரிய நாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை, மேட் டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மொத்தம் 583 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் திருட்டுத்தனமாக மது விற்ற 13 பேர் கைது செய்யப்பட்டு, 801 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Exit mobile version