political

பெண்ணை போலீஸ் அதிகாரி அடித்த விவகாரம்: பன்னீர்செல்வம், கனிமொழி, தமிழிசை கண்டனம்

சென்னை:

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தாக்கினார்.

இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:-

சாமளாபுரத்தில் புதிதாக மதுக்கடை திறப்பதை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள்மீது காவல் துறையினர் சிறிதும் ஈவுஇரக்கமின்றி தடியடி நடத்தியுள்ளார்கள்.

மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஈஸ்வரி என்ற பெண்ணின் கன்னத்தில் அறைவது போன்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியாகி, மக்கள் மனதைப் பதற வைத்திருக்கிறது, பெண்களிடம் ஒரு வித அச்சத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த சம்பவத்தால் காவல் துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்கிறது.

புரட்சித் தலைவி அம்மா ஆட்சியில் காவல் துறை கம்பீரத்தோடு தலை நிமிர்ந்து செயல்பட்டது. இப்பொழுது நடைபெறும் ஆட்சியில், காவல் துறையின் கம்பீரம் சிதைந்துபோயிருக்கிறது.

தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.:-

திருப்பூரில் மதுக்கடைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற பெண்ணை அரக்கத்தனமாக தாக்கிய போலீஸ் அதிகாரியின் செயல் கண்டிக்கத்தக்கது. அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

இலாகா பூர்வமாக அவர் மீது நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும். இதற்காக தி.மு.க. மகளிரணி சார்பில் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்.

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்:-

திருப்பூரில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்ணை போலீஸ் அதிகாரி மிருகத்தனமாக தாக்கியதை வன்மையாக கண்டிக்கிறேன். அந்த போலீஸ் அதிகாரியை பணி நீக்கம் செய்ய வேண்டும்.

மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. நெடுஞ்சாலைகளை குறுக்கு சந்துகளாக பெயர் மாற்றி புதிய மதுக்கடைகள் திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தமிழக அரசு புதிய மதுக்கடைகளை திறக்க கூடாது. அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

வாழ்வை சீரழிக்கும் மதுக்கடைகள் திறக்கக் கூடாது என்ற உன்னதமான கோரிக்கைக்கு ஆதரவாக போராடிய திருப்பூர் மக்கள் மீது, குறிப்பாக பெண்கள் மீது காவல்துறையினர் வன்முறையை ஏவிவிட்டுள்ளனர். இத்தகைய தாக்குதலை நியாயத்திற்காக போராடிய மக்கள் மீது காவல்துறையினர் நடத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். படுகாயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசரன்:-


காவல் துறையின் இந்த மிருகத்தனமாக செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வண்மையாக கண்டிக்கிறது. இந்த அப்பட்டமான சட்ட மீறலில் ஈடுபட்ட மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளரை உடனடியாக பணி நீக்கம் செய்து,அவர்மீது குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, தாமதமின்றி கைது செய்ய வேண்டும். இது தொடர்பாக அரசு முழுமையாக விசாரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:-

டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என்று போராடிய பெண்கள் மீது கூடுதல் மாவட்ட கண்காணிப்பாளர் பாண்டியராஜன் அத்து மீறி தாக்கியது காட்டு மிராண்டித்தனமான செயல் ஆகும்.’

பெண்களை கன்னத்தில் ஓங்கி அடித்த மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும்.

இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநில செயலாளர் பத்மாவதி:-

நியாயமான முறையில் போராடிய பெண்கள் மீது மிகவும் இழிவான முறையில் காவல்துறை நடந்துக் கொண்டதை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வன்மையாக கண்டிக்கிறது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள பெண்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.