ஆர்.கே.நகர் தொகுதியில் மருதுகணேசை ஆதரித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம் செய்தார். மு.க.ஸ்டாலின் சென்ற இடமெல்லாம் பொது மக்கள், எழுச்சியுடன் வரவேற்பு கொடுத்தனர்.
ஆர்.கே.நகர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து புதுவண்ணாரப்பேட்டையில் கடந்த 28-ந்தேதி தேர்தல் பிரசார மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் நேற்று காலை ஆர்.கே.நகர் தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்களைச் சந்தித்து வாக்குச்சேகரித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதி காசிமேட்டில் சாலையில் நடந்து சென்று வாக்கு சேகரித்த போது இல்லத் தரசிகள் மு.க.ஸ்டாலினிடம் ‘‘எங்கள் வாக்கு உதய சூரியனுக்குத்தான்’’ என்று சொல்லி மு.க.ஸ்டாலினின் கரத்தைப் பிடித்து வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதே போன்று சாலையில் சென்ற இளைஞர்கள், முதியவர்கள், பெண்கள், வியாபாரப் பெருமக்கள், தொழிலாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும், மு.க.ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்று எங்கள் வாக்கு உதயசூரியனுக்குத் தான் என்று கூறினார்கள்.
பேருந்து, கார், ஸ்கூட்டர், சைக்கிளில் சென்றவர்கள் என அனைவரும் கை விரல்களை விரித்து உதய சூரியன் சின்னத்தை காண்பித்து அகமகிழ்ந்தனர்.
சென்ற இடமெல்லாம் வியாபாரப் பெருமக்கள் மு.க.ஸ்டாலினுக்கு மலர்கள், சால்வைகள் கொடுத்து அன்புடன் வரவேற்றனர்.
குறிப்பாக ஆர்.கே.நகர் தொகுதியில் மீனவர் அதிகம் வசிக்கும் காசிமேடு பகுதிக்குச் சென்று வாக்குச் சேகரித்தார்.
புதுமனைக்குப்பம், சிங்காரவேலன் நகர், காசிமேடு ஏ.பிளாக், பவர் குப்பம், மன்னார்சாமி கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி, வீதியாகச் சென்று மக்களைச் சந்தித்து கழக வேட்பாளர் மருதுகணேசுக்கு ஆதரவு திரட்டினார்.
சென்றமிடமெல்லாம் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் திரண்டு வந்து வரவேற்று எங்கள் வாக்கு உதய சூரியனுக்கே என்று உறுதி அளித்தனர்.
மீனவப் பெருமக்களின் துயரத்தினை பரிவுடன் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், ‘‘உங்களுக்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும், உங்கள் கோரிக்கைகள் பரிவுடன் கவனிக்கப்படும். அதற்கு அச்சாரமாகத்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு அமையும் என்றார்.
மு.க.ஸ்டாலின் சென்ற இடமெல்லாம் பொது மக்கள், மீனவ மக்கள் பெண்கள் எழுச்சியுடன் வரவேற்பு கொடுத்தனர்.