political

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கு யார் காரணம் ?மு.க.ஸ்டாலின் பிரசாரம்

சென்னை:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

தண்டையார்பேட்டை நெடுஞ்சாலையில் கூடியிருந்த மக்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஓ.பி.எஸ். அணி ‘மணல் மாபியா’ என்ற பட்டத்தோடு இருக்கக்கூடிய அணி. அதேபோல, பெரா அணி என்றொரு அணி. பெங்களூர் சிறையில் அடைப்பட்டு இருக்கக் கூடிய சசிகலா தலைமையில் இருக்கக் கூடியது.

இரண்டாக இன்றைக்கு அவர்கள் பிரிந்திருந்தாலும் ஒன்றாக இருந்தபோது ஊழல் செய்து, கொள்ளையடித்து இந்த நாட்டையே குட்டிச்சுவராக மாற்றியிருக்கக் கூடியவர்கள் என்பதும் உங்களுக்கு நன்றாக தெரியும்.

இன்றைக்கு அவர்கள் எந்த நோக்கத்தோடு வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை கேட்கிறார்கள் என்றால், மறைந்த அம்மையார் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி, வாக்குகளை கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அதை தடுப்பதற்கு நமக்கு எந்தவிதத்திலும் உரிமை கிடையாது. எனவே அதை நான் விமர்சிக்க விரும்பவில்லை.

ஆனால், ஓ.பி.எஸ். தலைமையில் இருக்கக்கூடிய அணி தங்களுடைய பிரசாரத்தை எப்படி துவங்கி இருக்கிறார்கள் என்றால், அம்மையார் ஜெயலலிதாவின் இறந்த உடல் சவப்பெட்டியில் வைத்திருக்கக் கூடிய ஒரு உருவத்தை வைத்து, இன்றைக்கு வீதி வீதியாக எடுத்து வந்து வாக்காளர்களை சந்திக்கக் கூடிய ஒரு இழிவான நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது.

ஜெயலலிதாவால் தான் ஓ.பி.எஸ். தமிழ்நாட்டில் மூன்று முறை முதலமைச்சராக இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் சவப்பெட்டியை காண்பித்து வாக்காளர்களை சந்தித்து ஏமாற்ற நினைக்கிறார்கள் என்று சொன்னால், இதைவிட கொடுமை, இதை விட அக்கிரமம், இதைவிட வெட்கம், இதைவிட அருவருப்பான செயல் நிச்சயமாக நாட்டில் இருக்க முடியாது.

ஜெயலலிதா மறைந்ததற்கு பிறகு 64 நாட்கள் முதல்-அமைச்சராக இருந்தவர் ஓ.பி.எஸ். அப்போதாவது சிகிச்சை பற்றி, ஜெயலலிதா மரணமடைந்தது பற்றி என்றைக்காவது வாய் திறந்து பேசியது உண்டா? கிடையாது.

என்ன காரணம் என்றால், பதவியிலேயே ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அந்தநிலையில் இருந்தார். ஆனால், பதவி பறிக்கப்பட்டதை தொடர்ந்து உடனடியாக நீதி விசாரணை வேண்டும் என்று கேட்டிருக்கிறார். ஆகவே, நான் பலமுறை சொல்லி இருக்கிறேன்.

தி.மு.க. விரைவில் ஆட்சிக்கு வரப்போகிறது. அதை யாரும் தடுத்திட முடியாது. அப்படி வருகிற நேரத்தில் உறுதியோடு சொல்கிறேன்.

அது சசிகலா அணியாக இருந்தாலும் சரி அல்லது ஓ.பி.எஸ். தலைமையில் இருக்கக்கூடிய அணியாக இருந்தாலும், இந்த இரண்டு அணிகளில் அம்மையார் ஜெயலலிதா மரணத்துக்கு யார் காரணம் என்பதை கண்டறிய உடனடியாக நீதி விசாரணை வைத்து, அந்த இரண்டு அணிகளை சார்ந்தவர்களும் முறையாக விசாரிக்கப்பட்டு அதற்குரிய தண்டனையை நிச்சயமாக தி.மு.க. உருவாகிற நேரத்தில் ஏற்படுத்தித்தரும் என்ற உறுதியை நான் தெரிவிக்கிறேன்.

ஆனால், நான் கேட்கின்ற ஒரே கேள்வி, இரு அணிகளாக உடைந்திருக்கும் அ.தி.மு.க.வினர் ஒரு அணி பணம், இன்னொரு அணி பிணம். பணம் அணிக்கு இன்று சோதனை ஆரம்பித்து விட்டது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், அலுவலகத்தில், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் என 30 இடங்களில் சோதனை நடந்துள்ளது. துணைவேந்தரின் இல்லம் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

அதையும் தாண்டி மணல் மாபியா கும்பல், சேகர் ரெட்டியை உங்களுக்கும் தெரிந்திருக்கும். அந்த சேகர் ரெட்டிக்கு மிக மிக நெருங்கிய நண்பர் ஓ.பி.எஸ் மட்டுமல்ல, இதே விஜயபாஸ்கரும் நெருங்கிய நண்பர் தான்.

இதையெல்லாம் அடிப்படையாக வைத்து தான் வருமான வரி சோதனை நடந்துள்ளது. பணம் என்ற அணியின் நிலை இது.

ஜெயலலிதாவின் உருவத்தை போல பொம்மையை செய்து, அதை சவப்பெட்டியில் வைத்து, ஜீப்பில் காட்சிப்பொருளாக்கி அதைக் கொண்டு வந்து மக்களிடம் வைத்து ஓட்டு கேட்கிறார்கள் என்றால் அதைவிட ஒரு கேவலம் வேறு இருக்க முடியாது.

உன்னை ஆளாக்கிய ஜெயலலிதாவை அவர் இறந்த பிறகு இப்படி அசிங்கப்படுத்தி, கொச்சைப்படுத்தி பதவிக்காக, ஓட்டுக்காக வந்து அலைந்து கொண்டிருக்கிறாயே, இதை விட வெட்கக்கேடு இன்று நாட்டில் இருக்க முடியுமா?

எனவே, பணத்தை காட்டி மக்களை ஏமாற்ற வந்திருக்கும் அணியாக இருந்தாலும், அதேபோல பிணத்தை காட்டி ஊர்வலம் வரும் அணியாக இருந்தாலும், இதற்கெல்லாம் பாடம் வழங்க, புத்தி புகட்ட ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.