இந்தியாவில் சாலை மற்றும் பல்வேறு வகையான விபத்துக்களில் சிக்கியவர்கள் படுகாயங்களுடன் மருத்துமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு வரப்பட்ட உடன் செய்யப்படும் முதல் வேலை ரத்தம் ஏற்றுவதுதான். விபத்தில் சிக்கியவரின் ரத்தத்தை கண்டறிந்து அதே வகை ரத்தத்தை ரத்த வங்கியில் இருந்து பெற்று உடனே நோயாளிக்கு செலுத்த வேண்டும்.
ஆண்டு தோறும் சுமார் 3 மில்லியன் யூனிட் அளவுக்கான ரத்தம் தட்டுப்பாடு உள்ள நிலையில், ரத்ததானத்தை ஊக்குவிக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அதிக சிரத்தை எடுத்து மக்களிடன் ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனைகள் மற்றும் ரத்த வங்கிகள் இடையே முறையான தொடர்பு, போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணங்களினால் கடந்த ஐந்தாண்டுகளில் 6 லட்சம் லிட்டர் ரத்தம் வீணாகியுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சேட்டன் கோத்தாரி என்பவர் தகவல் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் இந்த அதிர்ச்சி தரும் பதிலை அளித்துள்ளது. மேலும், சேகரிக்கப்படும் ரத்தங்களை முறையான பாதுகாப்பின்றி வைக்கப்படுவதால் 1000 முதல் 3000 யூனிட்கள் வரையிலான ரத்தம் வீணாகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.