பூமியில் நிலையாக நாம் நிற்க காரணமே ஈர்ப்புவிசைதான்.
பேனாவில் எழுத, சாப்பிட, குளிக்க என அனைத்துக்கும் ஈர்ப்புவிசை தேவை. ஈர்ப்புவிசை தினசரி வாழ்வில் கண்ணுக்கு புலப்படாமல் இருந்தாலும் நமது உடலில் ஈர்ப்புவிசையின் தாக்கம் உண்டு.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட பின், ஈர்ப்பு விசை நமது உடலில் ஏற்படுத்தும் சிறிய மாற்றங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கவனிக்கத் தொடங்கி விட்டனர். ஏனெனில் ஈர்ப்புவிசையற்ற விண்வெளியில் உடல் தத்தளிக்கத் தொடங்குமே!
விண்வெளியில் சில காலம் பணி செய்த விண்வெளி வீரர்களுக்கு, உயரம் அதிகரித்தும், எலும்பின் அடர்த்தி குறைந்திருப்பதையும் கண்டறிந்த அறிவியலாளர்கள் முன்னும் பின்னுமான விண்வெளி பயண மாற்றங்களை பதிவு செய்ய முயற்சித்தனர். பூமியில் ஈர்ப்பு விசையற்ற அறையை உருவாக்கி, அதில் வீரர்களை தங்கவைத்து உடல்நலனைக் கண்காணித்து பல்வேறு உண்மைகளைக் கண்டறிந்தனர்.
ஈர்ப்புவிசை பரப்பில் நமது உடலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறும்போது, உடலின் மெக்கானோ ரிசெப்டர் மூலம் இது குறித்த தகவல்கள் உடனே மூளைக்கு கடத்தப்பட்டு ரத்தம் உறைதல் செயல்பாடு தொடங்குகிறது. இதுவே ஈர்ப்புவிசையற்ற சூழலில், செல்களின் இயக்கத்தில் அயனிகளின் செயல்பாடு அதீதமாகி, செல்களின் வளர்சிதைமாற்றம் முடக்கப்படுகிறது.
எலும்புகள் மெலியும், நோய்கள் பெருகும்!
1980களிலிருந்து செய்யப்படும் ஆராய்ச்சியிலிருந்து ஈர்ப்புவிசையற்ற இடத்தில் உடலின் மேற்பகுதியிலுள்ள மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிக்கும்போது, உடலின் நிலையைப் பற்றி மூளைக்கு அறிவிக்கும் நியூட்ரான் ட்ரான்ஸ்மிட்டர்கள், மூலக்கூறுகளின் செயல்பாடுகள் தடைபடுகின்றன. விண்வெளி வீரர்களுக்கு உணர்வுரீதியான தடுமாற்றங்களும், புரிந்து கொள்வதில் தடையும் உருவாவது இதனால்தான்.
விண்வெளியில் ஒரு மாதத்திற்கு 1% எலும்பு அடர்த்தி குறையும். ஈர்ப்புவிசையற்ற நிலையில் புரதம் மற்றும் டிஎன்ஏ செயல்பாடு வளர்சிதைமாற்றம் தடைபடுவதால், புதிய எலும்பு திசுக்கள் உருவாவதில்லை. எனவே விண்வெளியில் உள்ள வீரர்களின் உடலில் எலும்பு
களின் அடர்த்தி குறைகிறது.
விண்கலத்தில் முதலிலேயே நுண்ணுயிரி நீக்கம் செய்யப்படுகிறது. நாசாவின் அப்பல்லோ 13 விண்கலத்தில் பயணித்த வீரர், ஃப்ரெட் ஹைஸுக்கு Pseudomonas aeruginosa என்ற பாக்டீரியா தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது. நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்களைத் தாக்கும் இந்நோயை, ஈர்ப்புவிசையற்ற சூழலே உடலில் உண்டாக்குகிறது என்பது ஆய்வு உண்மை.
பாதிப்பை குறைப்பது எப்படி?
விண்வெளி வீரர்கள் செல்களுக்கு பாதுகாப்பு தர தினமும் 2 மணி நேரம் உடற்பயிற்சி (பளு தூக்குதல், நடைப்பயிற்சி) செய்கிறார்கள். எலும்பு சேதாரத்தை இவை பெருமளவில் தடுப்பதில்லை.
செல்களின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்தி இயக்கும் நியூட்ரோட்ரான்ஸ்மிட்டரான GABAவைப் பயன்படுத்திய போதும் விஞ்ஞானிகளால் இதன் இயக்கம் ஏற்படுத்தும் உடலின் மாற்றங்களை தெளிவாக அறிய முடியவில்லை.
எளிதாக செரிமானம் ஆகும் நோயெதிர்ப்பு சக்தி தரும் உணவு வகைகள் மூலம் ஈர்ப்பு விசையற்ற பாதிப்புகளைக் குறைக்க முயற்சிக்கிறார்கள். முன்பு பூமியின் ஈர்ப்பு விசையைத் தாண்டி ராக்கெட்டுகளை விண்வெளிக்கு அனுப்புவது பெரிய சவால்தான். ஆனால் அதனை நாம் கடந்துவந்திருப்பது நம் முயற்சிகளால்தான். இதனையும் கடந்து செல்வோம்.