தேர்தல் ரத்துக்கு அஞ்சாத ரத்தத்தின் ரத்தங்கள்’ என்ற தலைப்பில் இன்று சென்னை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேநேரம், வருமானவரித்துறையின் சோதனை வளையம் அமைச்சர்களை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது. ‘ ஆய்வில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு ஆதாரத்தைக் கொடுக்க இருக்கிறார் விஜயபாஸ்கர். அதன்பிறகே மற்ற அமைச்சர்கள் வளைக்கப்படுவார்கள்’ என்கின்றனர் வருமான வரித்துறை வட்டாரத்தில்.
‘ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து’ என்ற அறிவிப்பைவிடவும், அமைச்சர்களை நோக்கிப் பாயும் வருமான வரித்துறை சோதனைகளால் கலக்கம் அடைந்துள்ளனர் கார்டன் தரப்பினர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் ஒவ்வொன்றும் அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் அரசு மருத்துவர் பாலாஜியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி அடைந்தார் தினகரன். இதையடுத்து, ‘ பணம் வாங்கியதாகக் கூறப்படும் தகவல் பொய் எனப் பேட்டி கொடுங்கள்’ என ஆளும்கட்சி வட்டாரம் நெருக்குதல் கொடுக்கவே, ‘ நான் எதற்காகவும் பணத்தை வாங்கவில்லை’ என பல்டி அடித்தார் பாலாஜி.
மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் நெருக்குதல்களால் அமைச்சர்கள் பலரும் அச்சத்துடன் வலம் வருகின்றனர். ஆனால், தினகரன் தரப்பினரோ எந்தக் கவலையும் இல்லாமல் வலம் வருகின்றனர். ‘ மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீவிரமாகக் குரல் கொடுங்கள்’ என நிர்வாகிகளிடம் அவர் உத்தரவிட்டிருக்கிறார். ” வருமான வரித்துறையோடு சி.பி.ஐ விசாரணையும் தொடங்கலாம் என்ற தகவல் எங்களுக்கு வந்து கொண்டிருக்கிறது. ஆனால், தினகரனோ, ‘ தேர்தலில் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என்பதை அறிந்துதான் ரத்து செய்துள்ளனர். தொப்பிக்கான வெற்றி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எப்போது தேர்தல் நடந்தாலும், நமக்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். வருமான வரித்துறை சோதனைக்கு எதிராக தலைமைக் கழக பேச்சாளர்களைப் பேசச் சொல்லுங்கள். நமக்கு ஆதரவான அரசியல் கட்சிகளிடம் இருந்து அறிக்கை வெளியிடச் சொல்லுங்கள். இதைத் தொடர்ந்து செய்தால், நம்மை நோக்கி வருவதை அவர்கள் குறைத்துக் கொள்வார்கள். மாறாக, நாம் மௌனமாக இருந்தால், சோதனைகளைத் தீவிரப்படுத்துவார்கள்’ எனப் பேசியிருக்கிறார். இதையடுத்தே, ‘ரத்துக்கு அஞ்சாத ரத்தத்தின் ரத்தங்கள்’ என சென்னை முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. தலைமைக் கழக நிர்வாகிகளும் மத்திய அரசை பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள்” என்கிறார் அ.தி.மு.க நிர்வாகி ஒருவர்.
இன்னும் ஐந்து நாட்களில், ‘அ.தி.மு.க யாருக்கு?’ என்ற அதிமுக்கியமான கேள்விக்கு, தேர்தல் ஆணையம் பதில் சொல்ல இருக்கிறது. சசிகலா பதவி தப்பினால் மட்டுமே, தினகரனின் துணைப் பொதுச் செயலாளர் பதவி மிஞ்சும். ‘ இதில் கோட்டை விட்டுவிட்டால், ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டதும் செல்லாமல் போய்விடும்’ என்பதால் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறார் தினகரன்.