புதுடெல்லி:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜூலை மாத தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்கள் மற்றும் மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுப்பார்கள். தற்போதைய நிலவரப்படி ஜனாதிபதியை பா.ஜ.க. மிக எளிதாக தேர்வு செய்யும் நிலையில் உள்ளது. எனவே யாரை ஜனாதிபதி ஆக்கலாம் என்று பிரதமர் மோடியும், பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷாவும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் அல்லது பெண் ஒருவர் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட கூடும் என்று தெரிகிறது. ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து துணை ஜனாதிபதியை தேர்ந்து எடுக்கவும் தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற இரு சபைகளிலும் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் துணை ஜனாதிபதியையும் பா.ஜ.க. தன்னிச்சையாக தேர்வு செய்யும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்று சில எதிர்க்கட்சிகள் இப்போதே காய்களை நகர்த்த தொடங்கி உள்ளன. காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரளவைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
இதுவரை நடந்துள்ள பேச்சுவார்த்தைகளின்படி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், தி.மு.க., ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஓரணியில் ஒன்று திரள உள்ளன. கம்யூனிஸ்டு, பகுஜன் சமாஜ் மற்றும் வட கிழக்கு மாநில கட்சிகள் இஸ்லாமிய கட்சிகளையும் இந்த அணிக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் சார்பில் பா.ஜ.க.வுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பொது வேட்பாளர் அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையில் ஒருமித்த தேர்வாக இருப்பார் என்று வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து பொது வேட்பாளரை நிறுத்தினால் ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பாக மாறும்.