புதுடெல்லி:
இந்தியாவின் 14-வது துணை ஜனாதிபதியாக தற்போது ஹமித் அன்சாரி பதவி வகித்து வருகிறார்.
2007-ம் ஆண்டு முதல் அவர் துணை ஜனாதிபதி பதவியில் இருக்கிறார். அவரது பதவிக் காலம் வருகிற ஆகஸ்டு மாதம் நிறைவு பெற உள்ளது.
இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய ஆகஸ்டு முதல் வாரம் தேர்தல் நடத்தப்படும். ஜூலை மாதம் ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
இதற்கிடையே புதிய துணை ஜனாதிபதியாக யார் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது என்று தலைநகர் டெல்லியில் பேசப்பட்டு வருகிறது. தற்போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் கவர்னராக இருக்கும் நரசிம்மனின் பெயரும் துணை ஜனாதிபதி பதவிக்கு அடிபடுகிறது.
பிரதமர் மோடியின் நட்பு வட்டாரத்தில் கவர்னர் நரசிம்மனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட போது எழுந்த பல்வேறு நிர்வாக சிக்கல்களை நரசிம்மன் மிகத் திறமையாக எதிர்கொண்டார். இரு மாநில அரசு நிர்வாகத்தையும் சிறப்பாக செயல்பட வைத்தார்.
இதன் காரணமாக இப்போதும் ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களுக்கும் அவர் கவர்னராக பதவியில் நீடித்து வருகிறார். நரசிம்மனின் இந்த நிர்வாகத் திறமை பிரதமர் மோடியை மிகவும் கவர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு இந்திய விமானப்படை திடீரென பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ஊடுருவி அதிரடி தாக்குதல்கள் நடத்தியது. அந்த அதிரடி நடவடிக்கைக்கு கவர்னர் நரசிம்மன் பல்வேறு ஆலோசனைகள் வழங்கியதாக தகவல் வெளியானது.
உளவுத்துறை தலைவராக இருந்த நரசிம்மன் கடந்த 2007-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசால் சத்தீஸ்கர் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டார். பிறகு ஆந்திரா கவர்னரானார்.
2014-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த போது காங்கிரசால் நியமிக்கப்பட்ட கவர்னர்களுக்கு ‘கல்தா’ கொடுக்கப்பட்டது. ஆனால் நரசிம்மனின் திறமைக்காக அவர் பதவியில் நீடித்தார்.
கவர்னர் நரசிம்மனின் பதவிக்காலம் மே மாதம் 3-ந்தேதியுடன் முடிகிறது. எனவே அவர் துணை ஜனாதிபதியாக பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த அவர் துணை ஜனாதிபதியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
துணை ஜனாதிபதியை பாராளுமன்ற மக்களவையின் 543 எம்.பி.க்களும், மாநிலங்களவையின் 245 எம்.பி.க்களும் வாக்களித்து தேர்வு செய்வார்கள். இரு அவைகளிலும் சேர்ந்து பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி பெரும் அளவுக்கு எம்.பி.க்கள் பலம் உள்ளது.