Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து ஆகுமா?: தேர்தல் கமிஷன் பரிசீலனை

 சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் திங்கட்கிழமையுடன் பிரசாரம் ஓய்கிறது.

இதையொட்டி அரசியல் கட்சியினர் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது.

ஆர்.கே.நகரில் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கும், வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடாவை தடுப்பதற்கும் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பறக்கும் படையினர் தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

முறைகேடுகளை தடுப்பதற்காக ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட போலீஸ் அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இடைத்தேர்தல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதல் கமி‌ஷனர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை போலீஸ் அதிகாரிகளை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது. இதன் காரணமாக ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தடுக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாகவே ஆர்.கே.நகர் தொகுதியில் ஆங்காங்கே பணப்பட்டு வாடா செய்யப்பட்டு வந்தது. காமாட்சி விளக்கு, குத்து விளக்கு உள்ளிட்ட பரிசு பொருட்களும் வினியோகிக்கப்பட்டன. இது தொடர்பாக கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று அதிகாலை திடீரென வாக்காளர்களுக்கு மொத்தமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. தொகுதி முழுவதும் 80 சதவீதம் பேருக்கு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் கொடுக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைகளையும் மீறி ஒரே நாளில் வெட்ட வெளிச்சமாக ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஆர்.கே.நகரில் வன்முறை வெடிக்கும் சூழல் நிலவுவதாலும், பணப்பட்டுவாடா நடைபெறுவதாலும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தி.மு.க. சார்பில் பண வினியோகம் தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ். அணி, பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளும் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்துவதற்கு தேர்தல் ஆணையம் தவறி விட்டது என்று குற்றம் சாட்டியுள்ளன.

அதே நேரத்தில் டி.டி.வி. தினகரன், ஆர்.கே.நகரில் தேர்தலை நிறுத்துவதற்கு சதி நடப்பதாக கூறி உள்ளார்.

பணப்பட்டுவாடா, மோதல் என ஆர்.கே.நகர் தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டி இருக்கும் நிலையில் அங்கு திட்டமிட்டபடி 12-ந்தேதி தேர்தல் நடைபெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா புகார் காரணமாகவே தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியிலும் அதுபோன்ற குற்றச்சாட்டுகளே அதிகமாக எழுந்துள்ளன. இதன் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Exit mobile version