political

ஓட்டுக்கு பணம்: ஆர்.கே.நகரில் தேர்தல் கமிஷன் அதிரடி – கற்றுத்தரும் பாடம் என்ன?

சென்னை:

ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு நாளை மறுநாள் (12-ந்தேதி) நடைபெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இரண்டாக உடைந்த அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்து தேர்தலை சந்தித்தது. ஓ.பி.எஸ். அணி, சசிகலா அணி என எதிரும் புதிருமாக இருந்த அணிகள் தேர்தல் களத்தில் மோதின. பலம் வாய்ந்த எதிர்க்கட்சியான தி.மு.க.வும் போட்டியிட்டது. 62 பேர் களத்தில் இருந்த போதிலும் அ.தி.மு.க.வை சேர்ந்த 2 அணிகளுக்கும் தி.மு.க.வுக்கும் இடையேதான் போட்டி நிலவியது.

சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனனும், தி.மு.க. சார்பில் மருதுகணேசும் களம் இறங்கினர்.

ஆர்.கே.நகர் தேர்தலில் முறைகேடுகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

தேர்தலை நடத்துவதற்காக சிறப்பு அதிகாரியாக விக்ரம் பத்ரா நியமிக்கப்பட்டார். இவர் டெல்லியில் இருந்து சென்னை வந்து மாநில தேர்தல் ஆணையரான ராஜேஷ் லக்கானியுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

தேர்தலில் முறைகேட்டை தடுக்க துணை ஆணையரான உமேஷ் சின்காவும் நியமிக்கப்பட்டார். மாநில தலைமை தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி மேற்பார்வையில் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி கமி‌ஷனருமான கார்த்திகேயன் மற்றும் நூற்றுக்கணக்கான தேர்தல் பணியாளர்கள் பரபரப்பாக தேர்தல் களத்தில் இயங்கினர்.

பணப்பட்டுவாடாவை தடுக்க கண்காணிப்பு கேமிராக்களும் அமைக்கப்பட்டன. ஆனால் அதையெல்லாம் தாண்டி ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா ஜோராக நடைபெற்றது.

டி.டி.வி.தினகரன் அணியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததற்கான வீடியோ ஆதாரங்கள் சிக்கியது. இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளருமான அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சோதனையில் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியதை தொடர்ந்து இடைத்தேர்தலுக்கு ஆணையம் கிடுக்குப்பிடி போட்டுள்ளது. தேர்தலை ரத்து செய்து அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருமங்கலம் இடைத்தேர்தலில் தான் ஓட்டுக்கு பணம் கொடுப்பது என்பது அதிகமாக பேசப்பட்டது. அந்த தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வீடு வீடாக சென்று பால் பாக்கெட்டுகளுடன் பணமும் சப்ளை செய்யப்பட்டது. அதன் பின்னர் நடந்த இடைத்தேர்தல்களிலும், திருமங்கலம் பார்முலாவை பின்பற்றியே ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது.

ஆனால் எந்த இடைத்தேர்தலிலும் ஆர்.கே.நகரில் நடந்தது போன்ற பணப்பட்டுவாடா அதிகமாகவும், வெட்ட வெளிச்சமாகவும் நடந்தது இல்லை. இதன் காரணமாகவே ஆர்.கே.நகர் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஆர்.கே.நகர் மக்கள் மத்தியிலும் சரி, தமிழகம் முழுவதிலும் சரி, எந்தவித அதிர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை. அதற்கு மாறாக இது எதிர்பார்த்த ஒன்றுதானே என்று மக்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த பணப்பட்டுவாடா அனைத்து தரப்பினரையுமே முகம் சுளிக்க வைத்திருந்தது ஜனநாயகத்தை பணநாயகம் விழுங்கி விடுமோ? என்கிற கவலை அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலுமே காணப்பட்டது. இதனை போக்கும் வகையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பதாக பரவலான கருத்து உள்ளது.

அதே நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்திருப்பதுடன், சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. ஒரு தொகுதியில்தானே தேர்தல் நடந்தது. அந்த தேர்தலை கூட நியாயமான, நேர்மையான முறையில் தேர்தல் ஆணையத்தால் நடத்திக் காட்ட முடியவில்லையே? என்கிற ஆதங்கம் எல்லோரது மனதிலுமே ஏற்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை தும்பை விட்டு வாலைப்பிடிக்கும் கதையாகவே உள்ளது. செய்ய வேண்டியவற்றை முறையாக செய்யாமல் (ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாமல்) கடமையில் இருந்து பின்வாங்கி விட்டதாகவே ஆணையத்தின் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.

தேர்தலை நடத்த டெல்லியில் இருந்து வந்த சிறப்பு அதிகாரி, நுண்பார்வையாளர்கள், துணை ராணுவப் படையினர், போலீசார் என அத்தனை பேரின் கண்ணையும் மறைத்து பணப்பட்டுவாடா செய்யப்பட்ட வி‌ஷயம் அவமானம் என்றே சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சரி… இப்போது தேர்தலை ரத்து செய்தாகி விட்டது. அடுத்த முறை தேர்தல் நடக்கும்போது, இது போன்ற முறைகேடுகள் நடைபெறாதா? அதற்கு தேர்தல் ஆணையத்தால் உத்தரவாதம் அளிக்க முடியுமா? என்கிற கேள்விகளும் எழுகின்றன.

இடைத்தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக என்று குறிப்பிடும் அளவுக்கு ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது “தமிழகத்துக்கே அவமானம்” என்கிற குற்றச்சாட்டையும் அரசியல் கட்சியினர் முன் வைக்கிறார்கள். இதனை அப்படியே துடைத்துப்போட்டு விட்டு சென்று விட முடியாது.

வருங்காலங்களில் இது போன்ற முறைகேடுகள் நடக்காமல் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவே மாறிப் போய் இருக்கிறது.

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது இதுபோன்ற “பல பாடங்களையும் கற்றுத்தந்திருக்கிறது.

எப்படியும் இன்னொரு முறை ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தியே ஆக வேண்டும். அப்போதும் இது போன்ற தேர்தல் ஆணையம் கோட்டை விட்டு விடக் கூடாது. முறைகேடுகள் நடப்பது தெரியவந்தவுடன் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்கள், அதனை கொடுக்கச் சொல்லி தூண்டியவர்கள், சம்பந்தப்பட்ட வேட்பாளர் என அத்தனை பேர் மீதும் பாரபட்சமின்றி தேர்தல் ஆணையம் சாட்டையை சுழற்ற வேண்டும்.

ஒரு வேட்பாளர் பணப்பட்டுவாடா செய்திருப்பது ஆதாரங்களுடன் அம்பலமானால், அந்த வேட்பாளர் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒரு முறை இதுபோன்று நடவடிக்கை எடுத்துவிட்டால் போதும்… அது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தகுந்த பாடமாக நிச்சயம் அமையும்.

“லஞ்சம் தவிர்… நெஞ்சம் நிமிர்…” என்கிற வாசகங்களை அரசு அலுவலகங்களில் பார்த்திருப்போம். ஆனால் மக்கள் பணியாற்ற போட்டி போடும் அரசியல் கட்சி வேட்பாளர் லஞ்சம் கொடுத்தே ஜெயிக்க முடியும் என்கிற நிலை இன்றைய அரசியல் களத்தில் காணப்படுகிறது. இதனை மாற்றிக் காட்ட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்கிறது.

ஓட்டுக்கு பணம் வாங்குவதும் குற்றம்… கொடுப்பதும் குற்றம்… என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்யும் தேர்தல் ஆணையம் அதனை கடுமையாக அமல்படுத்தினால் மட்டுமே இந்த மாற்றத்தை கொண்டு வர முடியும்.

அதே நேரத்தில் “ஓட்டுக்கு எவ்வளவு பணம் கொடுப்பீங்க” என்று பணத்தை கேட்டு வாங்கும் மக்களின் மனநிலையும் மாற வேண்டும். ஓட்டு கேட்டு செல்லும் அரசியல்வாதிகள் “உங்களது பொன்னான வாக்கு”களை என்று கூறியே ஓட்டு கேட்பார்கள். இதன் உள் அர்த்தத்தை மக்கள் உணர வேண்டும்.

பொன்னான வாக்குகளை புண்ணியவான்களுக்கு (நல்லவர்களுக்கே) போட்டு புண்ணியம் தேடிக்கொள்வோம். எந்த சூழ்நிலையிலும் ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம் என்றும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தேர்தல் ஆணையமும், விழிப்புணர்வு பிரசாரங்களை மட்டும் செய்து விட்டு நமக்கென்ன… என இருந்து விடாமல் கருமமே கண்ணாக செயலாற்ற வேண்டும். அப்போதுதான்… ஜனநாயகத்தை பணநாயகம் வெல்ல முடியாமல் காக்க  முடியும்.

விரைவில் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அது சாத்தியப்படுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.