Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

தென் இந்தியர்கள் குறித்த தருண் விஜய் கருத்துக்கு எதிர்ப்பு: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி-இரு அவைகளும் ஒத்திவைப்பு

புதுடெல்லி:
தென் இந்தியர்களின் கருப்பு நிறம் குறித்து பா.ஜ.க. மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான தருண் விஜய் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை மக்களவை தொடங்கிய உடனேய காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தனர். தருண்
விஜய் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களையில் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் தருண் விஜய் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி. மல்லிகார்ஜூன கார்க்கே, “தென் இந்தியாவில் வாழும் மக்கள் இந்தியாவை சேர்ந்தவர்களா? இல்லையா? இது உங்களது மோசமான மனநிலையை காட்டுகிறது. இந்தியாவை பிரிக்க நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று கூறினார்.
தருண் விஜய் மன்னிப்பு கேட்க வலியுறுத்த கோரி எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை ஒத்தி வைத்தார். இதே பிரச்சனை மாநிலங்களவையிலும் எதிரொலித்தது.
முன்னதாக, நொய்டாவில் போதைப் பொருள் பயன்படுத்திய சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, போதைப் பொருள் விற்பனை செய்வதாக ஆப்பிரிக்கர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனை ஆப்பிரிக்க நாடுகளின் தூதர்கள் தரப்பில் இனவெறி மற்றும் வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல் என கூறப்பட்டது. இனவெறி என்ற குற்றச்சாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
இவ்விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய தருண் விஜய் தென் இந்தியர்கள் கருப்பாக இருந்த போதும் அவர்களுடன் நாங்கள் சேர்ந்து வாழவில்லையா என்று கூறினார்.
தருண் விஜய் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவருடைய கருத்துக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு எழுந்தது.
முன்னதாக, பா.ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டை எழுப்பி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஒத்தி வைக்கப்பட்டது.
Exit mobile version