Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

தேர்தல் கமி‌ஷன் நாடகம் ஆடுகிறது: திருமாவளவன் கண்டனம்

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை வரவேற்கிறேன்.ஆனால் குறுகியகாலத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

ஆர்.கே.நகர்தொகுதியில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்று பச்சிளங் குழந்தைகளை கேட்டாலே தெரியும்.

கடைசி நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது போல தேர்தல் ஆணையம் நாடகம் ஆடுகிறது. இடைத்தேர்தலில் மட்டும் தான் முறைகேடு நடப்பது போல் கூறப்படுவது தவறு. ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் இது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன.

கடந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் முறைகேடு நடந்துள்ளன. ஆனால் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அந்த தொகுதியில் யார் மீது குற்றம் சாட்டப்பட்டதோ அவர்களே மீண்டும் போட்டியிட்டார்கள். அவர்களை தேர்தல் ஆணையத்தால் தடுக்க முடியவில்லை. தேர்தல் ஆணையத்தின் வழிமுறைகளில் மாற்றம் செய்தால் மட்டுமே தேர்தல் விதிமீறல்கள், முறைகேடுகளை தடுக்க முடியும்.

வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் மட்டும். பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். அந்த தொகுதியை சாராதவர்கள் தொகுதியில் தங்கி இருக்க அனுமதிக்க கூடாது. வெளியூர்களில் இருந்து வந்து தங்கி பிர சாரம் செய்வதாக கூறி முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்.

இதனால் தொகுதியில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன.

வாக்காளர்கள் அல்லாத தொகுதியை சாராதவர்கள் தங்கி இருப்பதை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது.

வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை தேர்தல் ஆணையம் கண் காணிப்பதாக சொல்கிறது. ஆனால் வேட்பாளர்கள் தரப்பில் தரும் செலவு கணக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கணக்கிடும் செலவு கணக்கும் வேறு பாடாக உள்ளது. இருவரின் செலவு கணக்கும் பொருந்துவதே இல்லை. ஆனால் வேட்பாளர் தரும் செலவு கணக்கை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கிறது.

வேட்பாளர் செலவு செய்யும் தொகையை முன் கூட்டியே தேர்தல் ஆணையத்திற்கு கூற வேண்டும். செலவுக்கான ரசீதினை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். இது போன்ற அடிப்படையிலான மாற்றங்களை கொண்டு வரவேண்டும்.

ஒரு வேட்பாளர் வாக்காளர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்குகிறார் என்றால் ஓட்டு எண்ணிக்கை அல்லது முடிவு அறிவிப்பதற்குள் குற்றம் செய்தவர்களின் வெற்றி செல்லாது என்று அறிவிக்கவேண்டும்.

இது போன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தினால் தவிர தேர்தல் முறை கேடுகளை தடுக்க முடியாது. ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது.

இந்த தேர்தலில் பா.ஜனதாவின் தலையீடு உள்ளது என்பதையும் புறம் தள்ளவும் முடியாது. இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்குவதற்கு முன்பே பா.ஜ.க. தலைவர் கள் இரட்டை இலை முடக்கப்படும் என்று அறிவித்தார்கள். அது எப்படி இவர்களுக்கு முன்பே தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version