10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் லயன்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் உள்ளூர்- வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
2-வது நாளான இன்று இரவு நடக்கும் லீக் ஆட்டத்தில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கடந்த ஆண்டு அறிமுகம் ஆன புனே சூப்பர் ஜெயன்ட்சுக்கு டோனி கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். 14 லீக் ஆட்டங்களில் 5 வெற்றி, 9 தோல்வி கண்ட புனே அணி 7-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அந்த சமயத்தில் ஸ்டீவன் சுமித், கெவின் பீட்டர்சன், மிட்செல் மார்ஷ், பிளிஸ்சிஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் காயத்தால் பாதியில் விலகியது பின்னடைவை ஏற்படுத்தியது. கடந்த சீசனில் மிகவும் பின்தங்கியதால் அதிருப்தி அடைந்த புனே அணி நிர்வாகம் டோனியை கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விட்டு, அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவன் சுமித்தை கேப்டனாக நியமித்து இருக்கிறது.
உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவன் சுமித்தின் தலைமையில் புனே அணி நிச்சயம் எழுச்சி பெறும் என்று அந்த அணி நிர்வாகம் உறுதியாக நம்புகிறது.
காயப்பிரச்சினை எதுவும் இல்லாததால் புனே அணி இந்த தடவை வலுவாக காணப்படுகிறது. ரூ.14½ கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் அசத்தும் பட்சத்தில் அது புனே அணியை மேலும் வலுவடையச் செய்யும். டோனி, ரஹானே, பாப் டு பிளிஸ்சிஸ் ஆகியோரும் நம்பிக்கை அளிக்கிறார்கள்.
சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இல்லாதது புனே அணிக்கு கொஞ்சம் இழப்பு தான் என்றாலும், உலகின் ‘நம்பர் ஒன்’ சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், ஆடம் ஜம்பா ஆகியோர் அவரது இடத்தை நிரப்ப காத்திருக்கிறார்கள்.
இரண்டு முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி எப்போதுமே மந்தமாகத்தான் தொடங்கும். கடந்த 3 ஆண்டுகளில் முதல் 5 ஆட்டங்களை எடுத்துக் கொண்டால், 2016-ம் ஆண்டில் 2-ல் வெற்றி, 3-ல் தோல்வி, 2015-ம் ஆண்டில் ஒன்றில் வெற்றி, 4-ல் தோல்வி, 2014-ம் ஆண்டில் 5-ல் தோல்வி என்று தடுமாற்றத்துடனே தொடங்கி இருக்கிறது. ஆரம்பத்தில் தடுகிதத்தம் போட்டாலும் அதன் பிறகு எப்படியோ மீண்டு வந்து விடுவார்கள்.
காயத்தில் இருந்து குணமடைந்து விட்ட கேப்டன் ரோகித் சர்மா, தனது திறமையை நிரூபிக்கும் வேட்கையில் இருக்கிறார். ஜோஸ் பட்லர், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா அதிரடியில் மிரட்டக்கூடியவர்கள். மிட்செல் ஜான்சன், மலிங்கா, ஹர்பஜன்சிங், பும்ரா பந்து வீச்சில் கைகொடுப்பார்கள். ஆனால் ‘யார்க்கர் மன்னன்’ மலிங்கா தற்போது வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் விளையாடமாட்டார்.
மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த 2 ஆட்டங்களில் தலா ஒன்று வீதம் வெற்றி பெற்றுள்ளன.
இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா (கேப்டன்), பார்த்தீவ் பட்டேல், ஜோஸ் பட்லர், அம்பத்தி ராயுடு, பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, ஹர்பஜன்சிங், மிட்செல் ஜான்சன், பும்ரா, மிட்செல் மெக்லெனஹான் அல்லது வினய்குமார்.
புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்: ரஹானே, மயங்க் அகர்வால், பாப் டு பிளிஸ்சிஸ் அல்லது உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், டோனி, ரஜத் பாட்டியா அல்லது மனோஜ் திவாரி, அசோக் திண்டா, அங்கித் ஷர்மா, ஷர்துல் தாகுர், இம்ரான் தாஹிர் அல்லது ஆடம் ஜம்பா.
இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ், சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.