Story

இப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன்….

மெக்ஸிகோ தேசத்து ஏழை மீனவன் ஒருவன்
கடற்கரையில் அவனது கட்டுமரத்தில் மேல்
படுத்து பானகம் பருகிக் கொண்டும்
பாட்டுப் பாடிக் கொண்டும்
கவலையில்லாமல் மகிழ்ச்சியாகப்
பொழுதைக் கழித்துக்
கொண்டிருந்தான். கடற்கரைக்கு வந்த
துடிப்பான இளைஞன் ஒருவன் இதைக்
கவனித்தான்.
கடற்கரையை விட்டுச் சென்ற இளைஞன் சில
மணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்கு வந்த போதும்
மீனவனை அதே நிலையில் பார்த்தான்.
இளைஞனுக்குப் பொறுக்கவில்லை.
மீனவனிடம் சென்று “ஐயா!
இப்படி வேலை செய்ய வேண்டிய காலத்தில்
படுத்துப் பொழுதை வீணடிக்கிறீர்களே.
இப்படி படுத்துக் கிடக்கும் நேரத்தில் கடலுக்குள்
சென்று மீன் பிடித்தால்
நாலு காசாவது கிடைக்குமே!” என்றான்.
அதற்கு மீனவன் “காசு கிடைச்சா…?”
என்று ரஜினி பாணியில் கேட்டான்.
இளைஞன் “காசு சேர்த்தால் நீங்கள் இந்தக்
கட்டுமரத்தை விற்றுவிட்டு ஒரு படகு வாங்கலாம்.
அதை எடுத்துக் கொண்டு கடலுக்குள்
போனால் இன்னும் நிறைய மீன் பிடித்து வரலாம்.
ஒவ்வொரு நாளும் பணம் அதிகமாக
சம்பாதிக்கலாம்” என்று சொன்னான்.
மீனவன் “அதிகம் சம்பாதிச்சா….?”
என்று கேட்டான்.
இளைஞன் பொறுமையாக “ஐயா, நீஙகள்
உங்களுக்கு நல்லதொரு வீடு கட்டிக்
கொள்ளலாம். சிறிது சிறிதாகப்
பொருள் சேர்த்து மீன் பிடி கப்பல்
ஒன்றை வாங்கலாம். ஆழ்கடலுக்குள்
சென்று பல வகை மீன்களைப் பிடித்து வரலாம்.
உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச்
சந்தைகளுக்கும் நீங்கள்
அவற்றை ஏற்றுமதி செய்யலாம்”
என்று சொன்னான்.
மீனவன் “ஏற்றுமதி செஞ்சா…?”
என்று திருப்பிக் கேட்டான்.
இளைஞனுக்கு மீனவனின்
அறியாமை குறித்து சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும்
பொறுமையை தக்க வைத்துக்
கொண்டு “ஏற்றுமதி செய்தால்
உங்களுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும்.
அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற
வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். படகு போன்ற
கார் வாங்கலாம். மேலும் மீன்பிடி கப்பல்கள்
வாங்கி மீன் பிடிக்க அனுப்பலாம்.
நாட்டிலேயே பெரிய மீன் தொழில்
கழகம் ஒன்றை அமைக்கலாம். பேரும் புகழும்
பெருந்தனமும் கிடைக்குமே” என்றான்.
மீனவன் மறுபடியும் “இதெல்லாம்
கிடைச்சா…” என்றான்.
இளைஞன் “உங்களுக்கு அதற்குப் பின்னால்
வேலை செய்ய வேண்டிய தேவையே இருக்காது.
மகிழ்ச்சியாக நாளெல்லாம் உலகின்
அழகான நீலக் கடல் சார்ந்த கடற்கரைகளில்
மணலில் படுத்து பானகம் பருகிக் பாட்டுப் பாடிக்
கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம்”
என்றான்.
“நான் இப்பவே அதைத்தானே நண்பா செய்து
கொண்டிருக்கிறேன்” என்றான் மீனவன்.