கருத்தரிப்பு உண்டாகி இரண்டாவது மாதத்தின் துவக்கத்திலேயே மசக்கை உண்டாகும். அதாவது காலையில் பல் துலக்கும்போதோ அல்லது காலை உணவை சாப்பிட்டதுமோ வாந்தி, குமட்டல் ஏற்படும். இரண்டாவது மாதத்தில் ஏற்படும் இந்த குமட்டல், வாந்தி சில வாரங்கள் அல்லது அரிதாக மூன்று மாதங்களுக்கு மேலும் கூட நீடிப்பது உண்டு.
மிகவும் பிடித்த உணவு பிடிக்காமல் போவது, புளிப்பான உணவுப் பொருட்களை விரும்புவது, பிடிக்காத உணவுப் பொருட்களின் மீதான ஆசைகளும் மசக்கையின் அறிகுறிகள். நாம் சாப்பிடும் சாப்பாட்டைப் பார்த்தாலே வாந்தி வருவது போன்ற உணர்வு, சமைக்கும் போது வரும் வாசனையை நுகர்ந்தாலே வாந்தி வருவது, சாதம் கொதிக்கும்போது வரும் வாசனை பிடிக்காமல் போவதும் மசக்கைதான்.
பசிக்கும் ஆனால் சாப்பிட உட்கார்ந்தால் வாந்தி எடுப்பதா அல்லது சாப்பிடுவதா என்ற குழப்ப நிலையை உருவாக்கும். உடலுக்கு நல்லதல்ல என்று ஒதுக்கும் பொருட்களின் மீது அதிக விருப்பமும் இந்த சமயங்களில் ஏற்படுவது உண்டு.
ஒரு சிலருக்கு இந்த மசக்கை மூன்றாம் மாத துவக்கம் வரையில் மட்டுமே இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு 5 மாதம் வரையிலும் கூட இருக்கும். அப்படிப்பட்டவர்கள் வெறும் வயிற்றில் வாந்தி எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
அதாவது காலையில் பல் துலக்கும்போது வாந்தி எடுப்பது, வாந்தி வருகிறது என்று எண்ணி எண்ணி சாப்பிடாமலேயே இருப்பது போன்றவை அல்சரை உண்டாக்கிவிடும். எனவே எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போதெல்லாம் சிறிது சிறிதாக உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். திரவ உணவாகவோ, பழம், காய்கறிகள் போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக உண்ணலாம்.
பலருக்கும் இரவு நேரங்களில் அதிகமாக பசிக்கும். அந்த சமயத்தில் சாப்பிடுவதற்கு என சில பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சமைத்த உணவுப் பொருட்கள் அல்ல.. பிஸ்கட், பழம், பால் போன்றவற்றை.
வாந்தி வரும் என்ற உணர்வை விட… உங்களுக்கும், உங்களுக்குள் இருக்கும் கருவிற்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை அதிகமாக நினைவில் கொள்ளுங்கள்.