Tamil ஆன்மிகம்

சிவலிங்க வடிவில் விநாயகர்

தஞ்சாவூரில் இருந்து 11 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவையாறு திருத்தலம். இங்கு புகழ்பெற்ற ஐயாறப்பர் ஆலயம் இருக்கிறது. ஆலயத்தின் இரண்டாவது சுற்றுப் பிரகாரத்தில் விநாயகப் பெருமானே, சிவலிங்க வடிவில் கணேச லிங்கமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.  இந்த சிவலிங்கத்தின் அருகில் விநாயகரின் வாகனமான மூஷிகமே உள்ளது. இந்த அற்புதக் காட்சி வேறு எந்த திருத்தலங்களிலும் காணக் கிடையாத ஒன்றாகும்.

தனிக்கோவில் நாச்சியார்

திருக்குடந்தையில் உள்ள சாரங்கபாணி திருக்கோவிலில் உள்ள தாயாரின் திருநாமம் ‘படிதாண்டா பத்தினி’ என்பதாகும். இவருடைய இயற்பெயர் கோமளவல்லித் தாயார். ‘எக்காரணத்தைக் கொண்டும் எம்பெருமாள் சாரங்கபாணியை விட்டு நீங்கிச் செல்ல மாட்டேன்’ என்று தனக்குத்தானே உறுதிகொண்டவர் இத்தல தாயார் என்பதால் இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது. உற்சவ காலங்களில் கூட இத்தல அம்பாள் கோவிலை விட்டு வெளிச் செல்வதில்லை. இந்த ஆலயத்தில் தனிக்கோவில் நாச்சியாராக தாயார் வீற்றிருக்கிறார்.

பீமேஸ்வரர் கோவில்

திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ‘தொடுகாடு பீமேஸ்வரர்’ ஆலயம். இங்குதான் ஜோதிடக் கலை தோன்றியதாக கூறப்படுகிறது. இங்கு பூஜையின் போது ஒரு முருங்கைக் காய், ஒரு மாம்பழம், ஒரு தேங்காய், ஒரு வாழைப்பழம் என்று ஒற்றை எண்ணிக்கையிலேயே, தினமும் இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வழிபாடு நடத்துகின்றனர்.

எலிக்கல் மலை முருகர்

கோயம்புத்தூர் மாவட்டம் ஊட்டியில் உள்ள எலிக்கல் மலை என்ற பகுதியில் அமைந்திருக்கிறது ‘எலிக்கல் மலை முருகன் கோவில்’. இந்த ஆலயத்தின் கருவறையில் மூலவர் முருகப்பெருமானுக்கு, பின்புறம் சுயம்பு மூர்த்தமாக பெருமாள் நிறைந்துள்ளார்.

திருமணத் தடை நீங்கவும், நிரந்தர வேலை மற்றும் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இந்த முருகப்பெருமானுடன் கூடிய பெருமாளை வழிபட்டால் நலம் வாய்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

திருமால் மீது சூரியஒளி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ளது வைகுண்டநாதர் கோவில். இந்த ஆலயத்தில் உள்ள பலிபீடம், மேரு மலை போன்ற அமைப்பில் பெரியதாக இருக்கிறது.

நவ திருப்பதிகளுள் ஒன்றான இத்திருக்கோவிலில் தினமும் மூலவர் திருமேனியின் முன், சூரிய ஒளி படர்கிறது.

சூரிய ஒளி சுவாமியின் மீது விழ தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக, பலிபீடத்தை சற்றுத் தள்ளியே அமைத்துள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம் என்று திருமால் உறையும் இடத்தின் பெயரில் உள்ள ஒரே திருத்தலம் இது மட்டுமே என்பது கூடுதல் சிறப்பு.

மன்மதன் வணங்கிய ஈசன்

சின்னசேலம் – வி.கூட்டு ரோட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆறகழுர் என்ற திருத்தலம். சூரபதுமனை அழிக்க சிவபெருமானால் ஒரு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக, தவத்தில் ஆழ்ந்திருந்த ஈசனை எழுப்ப தேவர்கள் அனைவரும் சேர்ந்து மன்மதனை அழைத்து வந்தனர். அவன் மறைந்திருந்த ஈசன் மீது அம்பு தொடுத்தான். அப்போது தனது நெற்றிக்கண்ணை திறந்து மன்மதனை சாம்பலாக்கினார் சிவபெருமான்.

இந்த சம்பவத்திற்கு முன்னதாக, அதாவது சிவபெருமான் மீது மன்மத பாணம் விடுவதற்கு முன்னதாக, மன்மதன் இத்தலத்தில் உள்ள ஈசனை வழிபட்டு வந்ததாக தல புராணம் கூறுகிறது. எனவே இத்தலத்தில் உள்ள ஈசன் காமநாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த தலத்தில் அஷ்டபைரவர்கள் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர்.

அஷ்டலட்சுமி ஆலயம்

சென்னை பெசன்ட் நகரில் அஷ்டலட்சுமி திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகார விருட்சங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. அஷ்டாங்க விமானத்தில் ஒன்பது சன்னிதிகளுடன் இந்த ஆலயம் திகழ்கிறது. மேரு அமைப்புடன் படியேறி இறங்கி சன்னிதிகளை அடையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதை ஓம் வடிவத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.


ஏரிகாத்த ராமர்

சென்னை அருகே உள்ள மதுராந்தகம் பகுதியில் ஏரிகாத்த ராமர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ராமநவமி அன்று ராமபிரானுக்கு ‘பஞ்ச அலங்காரம்’ என்னும் ஐந்து வகையான அலங்காரம் செய்யப்படுகிறது.

காலையில் கோடலி முடிச்சுடன் பஞ்ச கச்ச அலங்காரம், ஒரு வஸ்திரம் மட்டும் அணியும் ஏகாந்த அலங்காரம், மதியம் திருவாபரண அலங்காரம், மாலையில் புஷ்பங்களுடன் வைரமுடி தரித்த அலங்காரம், இரவு முத்துக்கொண்டை மற்றும் திருவாபரணத்துடன் புஷ்ப அலங்காரம் என ஒரே நாளில் 5 விதமான அலங்காரங்களில் ராமர் அருள்பாலிக்கிறார்.