பள்ளிப் படிப்பின் போது, “கடையெழு வள்ளல்கள்” என்று படித்த நினைவு பலருக்கும் இருக்கும். அந்த ஏழு வள்ளல்கள் யார், யார்? என்று கேட்டால், பெரும்பாலோர் “பாரி” என்று உடனே தொடங்கி, அங்கேயே நிற்பதைக் காணலாம். சிலர் பாரி, காரி, ஓரி என்று கூறி பிறகு தயங்குவதைப் பார்க்கலாம்.
கழக (சங்க) இலக்கியமான பத்துப்பாட்டில் மூன்றாம் பாடல் சிறுபாணாற்றுப் படை ஆகும். இந்தச் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார். கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ் வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பதும் உண்மையாகும். இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன.
இனி, பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி எனும் அந்த ஏழு வள்ளல்களின் சிறப்பைக் காண்போம்:
1. பேகன்
பொதினி (பழனி) மலைக்குத் தலைவர். மழை வளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம்மயிலுக்குப் போர்த்தினார். மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே ‘கொடைமடம்’ எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.
புறநானூற்றுப் பாடல் 142இல் புலவர் பரணர், “கழற்கால் பேகன், வரையாது (அளவில்லாது) வழங்குவதில் மழை போலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான்” என்ற கருத்தமைத்துப் பாடியுள்ளார்.
2. பாரி
பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அது படர்வதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார்.
பாரியின் வள்ளன்மையைக் கபிலர் பல புறநானூற்றுப் பாடல்களில் போற்றிப் பாடியுள்ளார். அவற்றுள், உரை விளக்கம் தேவைப்படாத ஒரு பாடல் இது:
பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே. (புறம். 107)
3. காரி
திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே “மலாடு” ஆகும். இவர் மலையமான் திருமுடிக் காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார்.
இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர். உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை இதுதான்: ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய ‘தலையாட்டம்’ என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையையும் ஏனைய செல்வங்களையும் இனிய மொழிகளுடன் இரவலர்க்கு இல்லை என்னாது அளித்தார்!
காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.
4. ஆய்
பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர். ஒளி பொருந்திய நீல நிறமுள்ள நச்சரவம் ஒன்று இவருக்கு ஓர் அரிய ஆடையை அளித்ததாம். நாகம் நல்கிய ஒளிமிக்க ஆடையை இவர், ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தாராம்!
வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.
5. அதிகன்
அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான், அதிகைமான், அஞ்சி எனப் பல பெயர்களில் வழங்கப் படுகிறார். இவர் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர்.
இவர் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அக்கனி, தன்னை உண்டாரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழ வைக்கும் வலியுடையது. அக்கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க்கு ஈந்து அழியா அறப்புகழ் பெற்றார்.
அதியமான் நெடுமான் அஞ்சியைப் போற்றிப் புகழ்ந்து ஒளவையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன.
6. நள்ளி
மலைவளஞ் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர். நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாதவாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர்.
நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.
7. ஓரி
சிறிய மலைகள் உடைய நல்ல நாட்டிற்குத் தலைவராவார். இவர் விற்போரில் வல்லவராதலின், இவ் வள்ளலை “வல்வில் ஓரி” என்றும் அழைப்பர்.
ஒரி, நெருங்கிய கிளைகளும், பூத்துக் குலுங்கியிருக்கின்ற நல்ல மலர்களையும் உடைய, இளமையும் முதிர்ச்சியும் கொண்ட சுரபுன்னை மரங்களும், சிறிய மலைகளும் அமைந்த நல்ல நாட்டைக் கூத்தாடுவோர்க்குப் பரிசிலாக் கொடுத்தவன். ஓரியிடம் பெருவளத்தைக் கொடையாகப் பெற்றதால், புலவர் வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய தொழில்களைச் செய்யாது சோம்பியிருந்து, அவற்றை மறந்து போயினராம்!
ஓரியின் சிறப்பைக் கூறும் வன்பரணரின் பாடல்களைப் புறநானூற்றில் காண்கிறோம்.
இந்த கடையெழு வள்ளல்களின் சிறப்பைப் புறநானூற்றுப் பாடல்களில் மட்டுமின்றி நற்றிணை, அகநானூறு போன்ற பிற கழக இலக்கியங்களிலும் கூட காணலாம்.
More tags : Best web design company in Bangalore