ஆப்பிள் நிறுவனத்தின் பழைய சாதனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கான அப்டேட் மற்றும் இதர சேவைகளை இந்த ஆண்டிற்குள் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளில் வெளியிட்ட சாதனங்களின் அப்டேட் மற்றும் சப்போர்ட் இந்த ஆண்டிற்குள் நிறுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன் படி ஆஸ்திரேலியாவில் இருந்து வரும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5, ஐபோன் 5C மற்றும் நான்காம் தலைமுறை ஐபேட் உள்ளிட்டவற்றுக்கான சேவைகள் முழுமையாக நிறுத்தப்படலாம் என கூறப்படுகின்றது. இதற்கான அறிவிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் வரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ்வாறான அறிவிப்பு வரும் போது இந்த சாதனங்களை பயன்படுத்துவோர் புதிய சாதனத்தை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர். இந்த தகவல்கள் ஆப்பிள் ஐஓஎஸ் 10.3 அப்டேட் வழங்கப்பட்ட கோடிங் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆப்பிள் சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில் அந்நிறுவனத்தின் ஐஓஎஸ் 11 இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர்களின் மாநாட்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.