புதுடெல்லி:
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் மலிவு விலையில் புதிய மொபைல் போன்களை வெளியிட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியானது. மைக்ரோமேக்ஸ் பாரத் என அழைக்கப்பட இருக்கும் புதிய மொபைல் போன் மாடல்களின் விலை இந்திய வாடிக்கையார்களை கவரும் வகையில் மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
பாரத் 1 மற்றும் பாரத் 2 என இரண்டு மொபைல் போன்களை தயாரித்து வரும் மைக்ரோமேக்ஸ் இரண்டு போன்களிலும் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கப்படவுள்ளது. பாரத் 1 மொபைல் போன் 4ஜி கனெக்டிவிட்டி கொண்ட பீச்சர் போன் என்றும் பாரத் 2 ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்கும் 4ஜி ஸ்மார்ட்போன் என்றும் கூறப்படுகிறது.
மைக்ரோமேக்ஸ் பாரத் சீரிஸ் போன்களின் வெளியீடு மற்றும் அதன் சிறப்பம்சங்கள் சார்ந்து எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில் இவற்றில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் இது தான் என்ற வாக்கில் இணையத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அவ்வாறு புதிய பாரத் 2 ஸ்மார்ட்போனில் மைக்ரோமேக்ஸ் வழங்க இருக்கும் அம்சங்களை பற்றி இங்கு பார்ப்போம்.
பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்ற வகையில் மைக்ரோமேக்ஸ் பாரத் 2 குவால்காம் ஸ்ப்ரெட்ரம் பிராசஸர், 512 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் கூறப்படுகிறது.
நாடு முழுக்க சுமார் 50 முதல் 60 லட்சம் பாரத் 1 மற்றும் பாரத் 2 போன்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள மைக்ரோமேக்ஸ் இவற்றின் விலையை ரூ.1,999 மற்றும் ரூ.2,999 வரை நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக குறிப்பிட்டதை போன்று இரண்டு மாடல்களிலும் 4ஜி வசதி வழங்கப்படவுள்ள நிலையில் இவற்றில் வெளியீடு விரைவில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.